ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த முக்கிய நிதி மாற்றங்கள் என்ன?
இந்த மாதம் 1ம் தேதி முதல், வருமானவரி விகிதம், யு.பி.ஐ விதிகள் மற்றும் டிடீஎஸ் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்ன என விரிவாக பார்ப்போம்.
புதிய நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில், வருமான வரி, நிதி வரைவுகள், வங்கி செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. புதிய வருமான வரி முறையின் கீழ் வரி விகித மாற்றங்கள், டிடீஎஸ் வரம்புகள், யுபிஐ பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இந்த மாற்றங்கள் பற்றி ஒரு பார்வை:

வருமானவரி விகிதங்கள்
புதிய வருமான வரி முறையின் கீழ் இந்த நிதியாண்டு முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. சீரமைக்கப்பட்ட புதிய வருமான வரி விகித முறையின் கீழ், வரி விகிதங்கள் வருமாறு:
வருமானம் – வரி
ரூ.4 லட்சம் வரை- 0%
ரூ.4,00,001-8,00,000 – 5%
ரூ.8,00,001-12,00,000- 10 %
ரூ.12,00,001-16,00,000 -15%
ரூ.16,00,001-20,00,000- 20%
ரூ.20,00,001-24,00,000ம் – 25%
ரூ.2400,000 மேல்- 30%
TDS முறை
மூத்த குடிமகன்கள் அல்லாத பொது மக்களுக்கு, வட்டி வருமானத்திற்கான டிடீஎஸ் வரம்பை அரசு, ரூ.40,000 ல் இருந்து ரூ.50,0000 ஆக உயர்த்தியுள்ளது. மூத்த குடிமகன்களுக்கு இந்த வரம்பை, 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தியுள்ளது. உடனடி வரி பிடித்தம் இல்லாமல், அதிக வட்டி வருமானம் சேர இது வழி செய்யும்.
புதிய பென்ஷன் திட்டம்
என்.பி.எஸ்- க்கு மாற்றாக கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அறிவிக்கப்பட்டது. பழைய பென்ஷன் திட்டத்திற்கான தொடர் கோரிக்கைகளை அடுத்து இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, குறைந்தது 25 பணியாண்டுகள் கொண்டவர்கள், ஓய்வுக்கு 12 மாதங்களுக்கு முன் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தின் 50 சதவீதம் பென்ஷனாக பெறுவார்கள்.
யுபிஐ விதிகள்:
யுபிஐ அடையாளம் உருவாக்கும் போது செயலிகள் பயனாளிகள் ஒப்புதல் பெற வேண்டும். பயனர்கள் இதில் இருந்து தானாக விலக்கப்பட்டு, அவர்கள் விரும்பி பங்கேற்க வேண்டும். பரிவர்த்தனைக்கு இடையே இதை கோரக்கூடாது.
அஞ்சலக வட்டி
அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி இந்த காலாண்டிற்கு மாற்றம் இல்லாமல் தொடரும். பி.பி.எப்., தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு இது பொருந்தும்.
மகளிர் வைப்பு நிதி
அரசு அறிமுகம் செய்த, மகிளா சேமிப்பு சம்மான் சான்றிதழ் வைப்பு நிதி திட்டம் மார்ச் 31ம் தேதியுடன் முடிந்தது. ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்தவர்கள், முதிர்வு காலம் வரை 7.5% வட்டி பெறுவார்கள்.

மே 1 முதல் ATM-இல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்கிறது - ஏன்? எதற்கு? எவ்வளவு?
Edited by Induja Raghunathan