சென்னை உள்ளிட்ட 37 நகரங்களில் 'உபெர் டீன்ஸ்' சேவை அறிமுகம்!
இந்த வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் பதின்பருவ பிள்ளைகளுக்கு டீன்ஸ் கணக்கை துவக்கி, தங்கள் பிள்ளைகள் சார்பில் சவாரி புக் செய்து, நிகழ் நேரத்தில் போக்குவரத்தை டிராக் செய்ய முடியும்.
உபெர் இந்தியா நிறுவனம், பெற்றோர்கள் தங்கள் பதின்பருவ பிள்ளைகளுக்கு (Teens) போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்வதற்கான சேவையை அறிமுகம் செய்துள்ளது.
'உபெர் ஃபார் டீன்ஸ்' (Uber for Teens) எனும் பெயரிலான இந்த சேவை, சென்னை, தில்லி, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 37 நகரங்களில் அறிமுகம் செயதுள்ளது.

இந்த வசதி மூலம் பெற்றோர் டீன்ஸ் கணக்கை துவக்கி, தங்கள் பிள்ளைகள் சார்பில் சவாரி ஏற்பாடு செய்து, நிகழ் நேரத்தில் போக்குவரத்தை டிராக் செய்ய முடியும். விரிவான சவாரி சுருக்கங்களையும் பெற்றோர் பெறலாம்.
13 முதல் 17 வயது வரையான பிள்ளைகளுக்கான பெற்றோர்களுக்காக இந்த சேவை பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக உபெர் தெரிவித்துள்ளது. ஜிபிஎஸ் டிராகிங்க், நெருக்கடி கால பட்டன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த சேவை அமெரிக்காவில் 2023ல் அறிமுகம் செய்யப்பட்டது.
“இந்தியாவில் பதின் பருவத்தினர் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்துள்ளோம். உபெர் ஃபார் டீன்ஸ் வசதி மூலம், பெற்றோர்களுக்கு நம்பகமான மற்றும் பிள்ளைகளுக்கு வசதியான சேவையை அளித்து இந்த சவாலுக்கு தீர்வு காண விரும்புகிறோம்,” என்று உபெர் இந்தியா மற்றும் தெற்காசியா தலைவர் பிரபஜீத் சிங் கூறியுள்ளார்.
நிறுவனம் நடத்திய நுகர்வோர் ஆய்வில், நம்பகமான போக்குவரத்து வாய்ப்புகள் இல்லாததால் தங்கள் பிள்ளைகள் விரும்பிய நிகழ்வுகளுக்கு செல்லாமல் இருந்த தருணங்கள் இருப்பதாக 92 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஓலா மற்றும் ரேபிடோ போன்ற நிறுவனங்களின் அதிகரிக்கும் போட்டிக்கு மத்தியில் நிறுவனம் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்கிறது.
அண்மையில், பெண்களுக்கு நம்பகமான மற்றும் எளிதான போக்குவரத்து வசதியாக பெண்கள் மட்டும் பைக் ஓட்டும் சேவையை பெங்களூருவில் 300 டிரைவர்களுடன் அறிமுகம் செய்தது.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி
Edited by Induja Raghunathan