ஜாக் மாவுக்கு அடுத்தடுத்து அடி கொடுக்கும் சீன அரசு: Alipay-வை கைப்பற்ற முயற்சி?
விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு!
கடந்த அக்டோபர் 24ம் தேதி சீன வங்கியாளர்கள் கலந்துகொண்ட பொதுச்சபையில் பங்கேற்ற உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா,
"சீன நிதித்துறை காலத்துக்கேற்ப புதுமைகளை புகுத்தவில்லை. வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் போதுமான நிறுவனங்கள் இல்லை,” என்று அரசின் வங்கித்துறை குறித்து கடுமையான விமர்சனத்தை பொதுவெளியில் முன்வைத்தார்.
அப்போது சீன அரசுக்கும், ஜாக் மாவுக்குமான பிரச்னை ஆரம்பமானது. பொதுவாக ஜாக்மாவை பொறுத்தவரை விமர்சனங்களை முன்வைக்கத் தயங்காதவர். ஆனால், அவர் இதற்கான எதிர்வினைகள் குறித்து அப்போது பயப்படவில்லை. இந்த பேச்சுக்கு பிறகு சீன அரசு ஜாக்மாவுக்கு செக் வைக்க ஆரம்பித்தது.
அதன்படி, அலிபாபா நிறுவனத்தின் மோனோபொலி கொள்கையை நொறுக்கியது. Monopoly கொள்கை என்பது, அலிபாபா நிறுவனத்துக்கு பொருள்கள் விற்கும் ஒரு நிறுவனம் அதேபொருளை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்க முடியாது. வேறு நிறுவனங்களில் விற்பனை செய்யும் பொருளையும் அலிபாபாவில் விற்க முடியாது. இது தான் இக்கொள்கை.

நீண்ட காலமாக இருக்கும் இந்த கொள்கை அரசின் விதிமுறைக்கு எதிராக இருக்கிறது என்று கூறி அலிபாபா நிறுவனத்துக்கு அரசு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதனால், 9 சதவிகித அளவுக்கு அலிபாபா நிறுவன பங்குகள் சரிந்தன. இந்த Monopoly கொள்கை மூலமாக ஜாக் மாவின் அலிபாபா குழுமம் ஆன்லைன் சந்தை விதிமுறைகள மீறியதோடு மேலாதிக்க சந்தை நிலையை முறை தவறி பயன்படுத்தியுள்ளதாக சீன அரசு குற்றம் சாட்டி விசாரணைக்கு பின் கடந்த 2019 ஆம் ஆண்டில் அலிபாபா குழுமம் ஈட்டிய வருமானத்தில் 4 சதவீதத்தை அதவாது 18 பில்லியன் யுவான் (2 பில்லியன் டாலர்கள்), இந்திய மதிப்பில் சுமார் 20,550 கோடி ரூபாய் அபராதமாக விதித்து அதிரடி காட்டியது.
இதோடு மோதல் நிற்கும் என்று பார்த்தால், இன்னும் முடியவில்லை என்பது போல் அலிபாபா நிறுவனத்தை குறிவைத்து செயல்பட்டு வருகிறது சீன அரசு. சமீபகாலமாக டெக் நிறுவனங்கள் மீது கடுமைகாட்டி வருகிறது சீன அரசு. எப்படி என்றால்,
சீன அரசை விடவும், அதன் அரசு அமைப்புகளை விடவும் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் தனியார் நிறுவனங்களை அரசு வசம் கொண்டுவருவதோடு, அந்த நிறுவனங்கள் கையிலிருக்கும் டேட்டாக்களை கைப்பற்றவும் அரசு முயன்று வருகிறது. இதை மிகப்பெரிய திட்டமாக செயல்படுத்தி வருகிறது சீன அரசு.

அதன்படி, முதல் நிறுவனமாக சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான DIDI நிறுவனத்தை சில நாட்கள் முன்தான் சீன அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதற்கடுத்த படியாக தற்போது பிரபல தொழிலதிபர் ஜாக் மாவின் அலிபாபா குழுமத்தின் அலிபே நிறுவனத்தை கைப்பற்றும் முனைப்பில் இறங்கியுள்ளது சீன அரசு.
Alipay என்பது அலிபாபா குழுமத்தின் டிஜிட்டல் நிதியியல் சேவை பிரிவாகும். இந்த அலிபே நிறுவனத்தை இரண்டாக உடைத்து, அதில் அரசு நிறுவனங்கள் முதலீடு செய்ய வைத்து அதன் மூலம் அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிகள் தொடங்கியுள்ளன.
ஆசிய அளவில் மிகப்பெரிய டிஜிட்டல் நிதியியல் தளம் என்றால் அலிபே-வை குறிப்பிடலாம். சீனா, இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகளில் 100 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்தத் தளம், அதன் வாடிக்கையாளர்கள் தரவுகளையும் கொண்டுள்ளது. இந்த தரவுகள் மூலம் சீனாவில் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன்களை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அலிபே நிறுவனமே தீர்மானித்து வருகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சீனாவின் டிஜிட்டல் கடன் பிரிவில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தநிலையில் தான் அலிபே நிறுவனத்தின் கடன் சேவை வர்த்தகத்தைத் தனியாகப் பிரிக்கச் சீன அரசு முடிவு செய்து செயல்பட தொடங்கியுள்ளது. அலிபே நிறுவனத்தின் கடன் சேவை நிறுவனதத்துடன் சில கூட்டணி நிறுவனங்களை இணைத்து அதில் அரசு நிறுவனங்கள் அதிகளவிலான தொகையை முதலீடு செய்ய வைத்து பின்னர் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்கள் அலிபேவை முறையாக கைப்பற்றிய செய்தியை சீன அரசு வெளியிடலாம்!
கட்டுரை தொகுப்பு: மலையரசு