இத்தனை கலரில் காலிஃப்ளவரா? - புதிய முயற்சியில் 16 லட்சம் வருமானம் ஈட்டிய விவசாயி!
கலர் கலராகக் காலிஃப்ளவர்களை விளைய வைத்துள்ளார்!
”ரூ.40,000-க்கு கலப்பின உயர் ரக காலிஃப்ளவர் விதைகளை வாங்கி வந்து தனது நிலத்தில் பயிரிட்டு புது சாதனையை படைத்துள்ளார்..."
பொதுவாக காலிஃப்ளவரை நாம் வெள்ளைக்கலரில் தான் பார்த்திருப்போம். பெரும்பாலான இடங்களில் அந்த நிறத்தில் தான் காலிஃப்ளவர்கள் விற்கப்படும். ஆனால் இங்கே நாசிக் விவசாயி ஒருவர் கலர் கலராகக் காலிஃப்ளவர்களை விளைய வைத்துள்ளார். இது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாசிக் மாவட்டம் மாலேகாவ் தாலுகாவில் உள்ள தபாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திர நிகம் என்ற விவசாயி. இவர் வழக்கமான காலிஃப்ளவர்களைப் பயிரிடாமல் சற்று வித்தியாசமாகப் பயிரிட முடிவு செய்தார். இதற்காக ஹரியானாவில் உள்ள கர்னல் என்ற இடத்தில் இருக்கும் ஒரு விதைப் பண்ணையில் இருந்து ரூ.40,000-க்கு கலப்பின உயர் ரக காலிஃப்ளவர் விதைகளை வாங்கி வந்து தனது நிலத்தில் பயிரிட்டு புது சாதனையை படைத்துள்ளார்.

30,000 சதுர அடி நிலமான தனது தோட்டத்தில் ஹரியானாவில் இருந்து வாங்கி வந்த காலிஃப்ளவர் விதைகளைப் பயிரிட்டார். இரண்டு வகையான காலிஃப்ளவர் ரகங்களைப் பயிரிட்டார். அதில் ஒன்று வாடாமல்லி கலரில் வரக்கூடிய வேலண்டினோ மற்றொன்று மஞ்சள் கலரில் வரக்கூடிய காரிடினா. இரண்டு ரகங்களையும் பாதியாகப் பிரித்துப் பயிரிட்டார்.
இதன் மூலம் அவருக்கு 20,000 கிலோ கலர் காலிஃப்ளவர்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவர், காலிஃப்ளவர்களை ஒரு கிலோ கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதன்மூலம் 70 நாள்களில் 16 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

இது குறித்து மகேந்திர நிகம் கூறுகையில், "நான் இரண்டு ரக காலிஃப்ளவர்களைப் பயிரிட்டேன். அவற்றின் கலர் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றால் மெட்ரோ நகரங்களில் இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.”
”இந்த வகை காலிஃப்ளவர் உடலுக்கு பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்கிறது. அதுமட்டுமின்றி, புற்றுநோயிலிருந்து பாதுகாப்பும் கொடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து இருப்பதால், இந்த காலிஃப்ளவர் கண்பார்வை மற்றும் தோல் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைப் பயிரிட விதை, உரம், வேலையாட்கள் போன்றவற்றுக்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். 16 லட்சம் வருவாய் கிடைத்தது," என்றார்.
இது போன்ற ஒரு காலிஃப்ளவரை மகாராஷ்டிராவில் இவர்தான் முதன்முறையாகப் பயிரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - ANI | தமிழில்: மலையரசு