TN Budget 2025: சென்னைக்கு அருகே புதிய நகரம், ஓசூர் ஐடி பார்க், ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்!
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். துறை வாரியாக இன்றைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் திட்டங்கள் விவரங்கள் இதோ.
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் இது என்பதால், இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காகவும், முக்கியமாக பெண்களுக்கான நிதி திட்டங்களை விரிவுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டமாக இந்த பட்ஜெட்டை வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு. Samagra Shiksha திட்டத்தின் கீழ் கல்வி முயற்சிகளுக்காக மத்திய அரசு இன்னும் ரூ.2,152 கோடி வெளியிடவில்லை என்றும், இரு மொழிக் கொள்கையைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. நிதி பற்றாக்குறை இருந்தபோதிலும் தனது உரிமைகளைக் கைவிடாது என தன் பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகளின் விபரம் பின்வருமாறு...
தொழிலாளர் நலன்
- ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக ஓசூர் அறிவுசார் பெருவழித் தடம் அமைக்கப்படும்.
- தென் தமிழகம் மதுரை மற்றும் கடலூரில் தோல் அல்லாத காலணி பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன, இதன் மூலம் ஒவ்வொரு இடத்திலும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 40 வயது மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக்அப் வழங்கப்படும்
- கொங்கு மண்டலம் கோயம்புத்தூரில் மேம்பட்ட பம்ப் மோட்டார் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையம் (COE)அமைக்கப்படுகிறது.
- Gig தொழிலாளர்களுக்கான நலவாரியம் உருவாக்கப்படும். கிக் தொழிலாளர்களின் வேலைச்சூழலை மேம்படுத்தும் நோக்கில், அரசு ரூ.20,000 வரை மின்சார ஸ்கூட்டர் வாங்க உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை அறிமுகம்
- கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
- விழுப்புரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும், இதில் 80% பெண்கள் பணியாற்றுவார்கள்.
- இந்த வளர்ச்சியை ஆதரிக்க மேலூர் மற்றும் கடலூரில் தோல் பூங்காக்களை அமைக்க சிப்காட் அமைப்பு வாயிலாக ரூ.250 கோடி முதலீடு செய்யவுள்ளது, இதோடு கள்ளக்குறிச்சியில் திறன் மேம்பாட்டு மையம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் சீட் ஃபண்ட்
- ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு டேட்டா சென்டர் சேவைகளுக்கான வவுச்சர்கள் மூலம் ஆதரவு அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
- தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் தொடர்பான திட்டம் 57 (TANSIM) இன் கீழ் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் சீட் ஃபண்ட்-க்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 10 லட்சம் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் உதவி அளிக்கப்படும்.
- 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
கலைஞர் கனவு இல்லம்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் கிராமப்புறங்களில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட 1 லட்சம் வீடுகள் தற்போது வேகமாக கட்டப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, 2025-26ஆம் ஆண்டில் மேலும் 1 லட்சம் வீடுகள் ரூ.3,500 கோடி செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் நலன்
- தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் முதல்வர் காலை உணவு திட்டம் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தை மேலும் 3 லட்சம் மாணவர்களுக்கு நகரப் பள்ளிகளில் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் இரண்டு உலக சதுரங்க சாம்பியன்கள் உருவாகிய நிலையில், சதுரங்க விளையாட்டை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
- ஒலிம்பியாட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1கோடி வழங்கப்படும்
- சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ISC மற்றும் TIFR இணைந்து புதிய அறிவியல் மையங்களை அமைப்பதற்கான ரூ.100 கோடி திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.
- ரூ.2,500 கோடி மதிப்பிலான கல்வி கடன்களை 1 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. இது மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நிறைவேற்ற உதவியாக இருக்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு சிங்கப்பூர் நிறுவனங்களுடன் இணைந்து சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
உயர்கல்வி விழிப்புணர்வு திட்டம்
- தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சுமார் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயனடைவார்கள். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் இந்த முயற்சி நடத்தப்படுகிறது.
- சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மாணவர் விடுதிகள் அமைக்க ரூ.275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு இடத்திலும் 1,000 மாணவர்களுக்குப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மேம்படுத்துவதற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்படுகிறது.
- காஞ்சிபுரம், மதுரை (திருப்பரங்குன்றம்), திருச்சி (மண்ணச்சநல்லூர்), கோயம்புத்தூர் (பேரூர்), தர்மபுரி (கரிமங்கலம்) ஆகிய இடங்களில் ITI அமைக்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கு ரூ.148 கோடி செலவாகும்
புதிய உயர்கல்வி படிப்புகள்
- தமிழ்நாடு பட்ஜெட் 2025ல் கணினி நுண்ணறிவு (AI), சைபர் பாதுகாப்பு, மேம்பட்ட உற்பத்தி, மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் புதிய உயர்கல்வி படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
- கல்லூரிகளில் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு மையங்களை (CoE) அமைக்க சுமார் ரூ.50 கோடி செலவிடப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அன்புச்சோலை
- 25 இடங்களில் முதியோர் பகல்நேர பராமரிப்பு மையம் அன்புச்சோலை என்ற பெயரில் அமைக்கப்படுகிறது.
- மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்.

மகளிர் நலன்
- பெண்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகில் சேவைகளைப் பெறுவதற்காக, முக்கிய புற்றுநோய், இதய நோய் பரிசோதனைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றிய ஆலோசனைகள் என்பவற்றை மருத்துவ குழுக்கள் மூலம் வழங்கப்படும். இதற்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 14 வயது பெண்கள் அனைவருக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி அளிக்க தமிழ்நாடு அரசு படிப்படியான அணுகுமுறையை செயல்படுத்துகிறது.
- பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டம் 4.06 லட்சம் நபர்களுக்கு பயனளிக்கிறது. இதற்கு தற்போதைய ஆண்டில் ரூ.420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் உயர்கல்வி சேர்க்கையை 19% அதிகரித்துள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் அறிக்கையில் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
- பெண்களின் முன்னேற்றத்துக்காக 10,000 சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்படும். சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படிருக்கிறது.
- விடியல் பயணம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் ஒரு மாதத்தில் சராசரியாக ரூ.888 சேமிக்கின்றனர். 2024-25 ஆம் ஆண்டில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் பயணிகளின் எண்ணிக்கை 40% இலிருந்து 60% ஆக உயர்ந்துள்ளது.
- மூன்று புதிய பணிப்பெண்கள் விடுதிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்கு மேல் ரூ.700 கோடி செலவிடப்படும்.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் நலன்
- புதுமைப் பெண், தமிழ்புதல்வர் ஆகிய திட்டங்களை உயர் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்காகவும் திட்டமாக விரிவுபடுத்தப்படும்.
- மூன்றாம் பாலினத்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து மேலாண்மை ஆகியப் பணிகளை வழங்க உரிய பயிற்சிகள் வழங்கி ஊர் காவல்படையில் ஈடுபடுத்திட திட்டமிடப்பட்டிருக்கிறது.
தொல்லியல் ஆய்வுகள்
- சிவகங்கையில் கீழடி, சேலத்தில் தெலுங்கனூர், கள்ளக்குறிச்சி அதிச்சநல்லூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.
- டெல்லி, மும்பை, பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். இதற்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மதுரையில் இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் மொழி அருங்காட்சியகம் "அகரம்" கட்டப்படுகிறது
- மாமல்லபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும். மரபுசார் கட்டிடக் கலை காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.40 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
- இன்னும் 28 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்படவிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ.133 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அரசி திட்டமிட்டிருக்கிறது. அதற்காக ஆண்டுக்கு 100 நூல்கள் என்ற அடிபப்டையில் 5 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கான முதற்கட்ட தொகையாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
- ஆண்டு தோறும் உலகத்தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்

குடிநீர் திட்டங்கள்
- மாநிலம் முழுவதும் குடிநீர் திட்டங்களுக்கு மேலும் நவீனமயமாக்கலுக்கு ரூ.675 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதோடு ஈரோடு, மயிலாடுதுறை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிநீர் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.26,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் அனைத்து நீர்பகிர்மான நிலையங்களையும் இணைப்பதன் மூலம் அனைத்துப் பகுதிக்கும் சமமான நீர் வழங்கப்படுவதை உறுதி செய்யப்படும். இதற்கான ரூ.2423 கோடி செலவில் சுற்றுக்குழாய் திட்டம் அமைக்கப்படும்.
- சென்னை மாநகராட்சி ரூ.200 கோடி, கோவை மாநகராட்சி ரூ.120 கோடி, திருச்சி மாநகராட்சி ரூ.100 கோடி, திருப்பூர் மாநகராட்சி 100 கோடி என நகர்புற நிதிப்பத்திரங்கள் திரட்டுவதின் மூலம் மாநகராட்சி உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றிட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது
சென்னை அருகே புதிய நகரம்
- சென்னை அருகே 2000 ஏக்கருக்கும் மேல் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும். இதற்கான சாலை உள்ளடக்கிய சகல உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். இந்த திட்டத்தை TIDCO மேற்பார்வையிடும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
- சென்னை, வேளச்சேரியில் சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்கு ரூ.310 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ.70 கோடி மதிப்பிலும் அமைக்கப்படும்.
- கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அடையாற்று மறுசீரமைப்புத் திட்டம் ரூ.1,500 கோடி செலவில் தொடங்கப்பட்டு, அடுத்த 15 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னைக்கு அருகில் ரூ.350 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது. இது ஆண்டுக்கு 170 MLD நீரை சென்னை மக்கள் நீர் தேவைக்கு வழங்கும்.
- தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.
- அடையார் நதியை மீட்டெடுத்து சீரமைக்கும் திட்டம் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டிருக்கிறது. 30 மாத காலத்துக்குள் பணி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் 7 மழை நீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்கா அமைக்க ரூ.88 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
மெட்ரோ ரயில் விரிவாக்கம்
- தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை (21 கிமீ) மற்றும் லைட்ஹவுஸ் முதல் உயர் நீதிமன்றம் வரை (6 கிமீ) மெட்ரோ பாதையை நீட்டிக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
- ரூ.9,335 கோடி செலவில் சென்னை விமானநிலையம் -கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கம்.
- ரூ. 9,744 கோடி செலவில் கோயம்பேடு-பட்டாபிராம் மற்றும் ரூ. 8,779 கோடி செலவில் பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் வரையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம்.
- மாநிலத்தின் பல்வேறு பாதைகளில் செமி ஹைய் ஸ்பீட் ரயில் வலையமைப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளை ஆராய்வோம்.
- சென்னை மெட்ரோ ரயில் வலையமைப்பின் விரிவாக்கத் திட்டங்கள் மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பப்படும்.

புதிய விமான நிலையம்
- ராமநாதபுரம், இராமேஸ்வரம் பகுதிகளில் அதிகரித்து வரும் சுற்றுலா போக்குவரத்தை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது.
- 2025-26 ஆம் ஆண்டில், சூரிய சக்தியிலிருந்து தொடர்ச்சியான மின்சாரத்தை உறுதி செய்ய பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.
- டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு பேருந்துகளாக மாற்ற சுமார் ரூ.70 கோடி ஒதுக்கப்படுகிறது.
- தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கை 2025 அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கொள்கை கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு, கப்பல் தயாரிப்பு மற்றும் ship hull உற்பத்தியில் முதலீடு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும்.
- விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது