82 வயதில் சிம்பனி தந்த 'பண்ணைபுரத்து பீதோவன்' - இளையராஜா நமக்கு கற்றுத் தருவது என்ன?
82 வயதிலும் அயராது இசையமைக்கும் இளையராஜா, எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது எப்படி? என நமக்கு கற்றுத்தருகிறார்.
அக்னிநட்சத்திரத்தில் வரும், ’ராஜா, ராஜாதி ராஜன்…' பாடல் தான் அவருக்கு எத்தனை பொருத்தமானது. ராஜா ரசிகர்களை பொருத்தவரை, நீங்கள் எப்பவும் ராஜா தான் துள்ளலும், துடிப்புமாக சொல்ல வைக்கும் பாடல்!
இந்த பாடலும் சரி, படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களும் சரி, இளையராஜா இசை பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். அவரது இசை பயணத்தில் மைல்கல் என ஒரு சில படங்களை அல்ல, ஒரு நூறு படங்களையாவது குறிப்பிட வேண்டும் என்றாலும் அக்னி நட்சத்திரத்தை குறிப்பிட காரணம், இந்த பாடல்களில் வெளிப்படும் கட்டற்ற நவீனம்.
படம் வெளி வந்த 1980-களில் இந்த பாடல்கள் மிக நவீனமாக அமைந்தன என்றால், புத்தாயிரமாமாண்டில் 25 ஆண்டுகளை கடந்த பிறகும், அவற்றின் நவீனம் அப்படியே புதுமை மாறாமல் இருக்கிறது.

புதுமையிலும் இனிமை தந்த ராஜா
பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்திற்கு மண் மணம் மாறாமல் கிராமத்து வாடைக்காற்றாக வீசிய பாடல்களை தந்த இசையமைப்பாளர் தான், மணிரத்தினம் காலத்திற்கான, முற்றிலும் நகரம் சார்ந்த கலாச்சாரத்தில் ஊறித்திளைத்தவர்களையும் கட்டிப்போட்டு சொக்க வைத்த பாடல்களை உருவாக்கியவர் என்றால் நம்ப முடிகிறதா!. இது இளையராஜாவுக்கே சாத்தியமான இசை மாயம்.
சச்சின் தன் சொந்த சாதனையை தானே பல முறை மிஞ்சியது போல, இதெல்லாம் என்ன சாதனை என, அக்னி நட்சத்திரம் பாய்ச்சலை விட, தளபதியின் ’ராக்கம்மா கையத்தட்டு’வில் ராஜா கேட்டிருப்பார். கருவிகள் அல்லது தொழில்நுட்பத்தினால் அல்லாமல் இசையை கொண்டே நவீனம் என்று உணரக்கூடிய பாடல்களை அதற்கு பிறகும் ராஜா தந்திருக்கிறார்.
நவீனம் என்பது ஒரு உதாரணம் தான். ராஜா தனது இசைக்கோவையில் மாயங்களையும், அற்புதங்களையும் இன்னும் பலவிதங்களில் உருவாக்கி காட்டியிருக்கிறார். பிதாமகனில் வரும் ’இளங்காத்து வீசுதே …` பாடல், யூடியூப் சேனல் ஒன்றின் அறிமுகத்தில் சொல்வது போல, கடப்பாறை நெஞ்சில் முளைத்த காதலை மென்மையாக வருடச்செய்கிறது.
இந்த பாடலில் லயித்திருக்கும் போதே, பாறையிலே பூ முளைச்சு பார்த்தவக யாரூ… எனும் கடலோர கவிதைகளின் ஈரமான காதல் பாடல் நெகிழ வைக்கிறது.
நிற்க, இந்த கட்டுரை இளையராஜாவின் இசை நுட்பங்களை அலசும் நோக்கம் கொண்டது அல்ல. அதற்கான தகுதியோ, திறனோ எனக்கு இல்லை என்பதை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டு, ராஜாவின் சாதாரண ரசிகர்களில் ஒருவனாக, நம் காலத்தின் ஆளுமையாக சுடர் விடும் அவரது இசை பயணத்தின் வெவ்வேறு முக்கிய புள்ளிகளை நினைவில் நிறுத்தி வியந்து போகும் ஒரு முயற்சி.
இதற்குள், தர்ம யுத்தம் படத்தில் வந்த ’ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி’ பாடலில் இல்லாத இனிமை+நவீனமா என்று கேட்கிறது. இதனிடையே பிரியா படத்தின் ’ஹே பாடல் ஒன்று…` பாடல், அட என்னவொரு நவீனம் என சொக்கிபோக வைக்கிறது.
செந்தூரப்பூவே எனும் கிராமிய கீதத்தில் லயித்திருக்கும் மனது தான் இந்த நவீனங்களை பட்டயலிட்டுக்கொண்டிருக்கிறது. கவிக்குயிலில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் என பாலமுரளியின் கந்தர்வ குரலில் அந்த மாயக்கண்ணையே திரையில் கொண்டு வந்து நிறுத்திய ராஜாவால் இசையில் என்ன தான் முடியாது. அவர் நம் காலத்து தான்சேன் அல்லவா!
நாடி நரம்பெல்லாம் ஊறிக்கிடக்கும் ராஜாவின் பாடல்கள் தானாக திமிறிக்கொண்டு மேலெழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், கட்டுரையின் நோக்கத்தில் கவனம் செலுத்துவோம்.

தொடரும் ராஜாவின் இன்னிசை...
இளையராஜா இசை அற்புதம், பண்டிதர் முதல் பாமரர் வரை அறிந்தது என்பதால், அவரை நினைத்து வியக்கக் கூடிய விஷயமாக நான் கருதுவது, ராஜா இன்னமும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பது தான். தற்கால தமிழ் நிலத்தில் அவர் தவிர்க்க இயலாதவர். இசைக்காக அவரை ஆராதிக்க கோடிக்கணக்கானவர்கள் இருப்பது போல, தொடர்பே இல்லாமல் அவரை கேலிக்குள்ளாக்கும் நபர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.
ராகதேவன் தான் என்றாலும், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்றாலும், சமூக ஊடக விவாதங்களில் மைய பொருளுக்கு எவ்வித தொடர்பும் இல்லாமல் அவர் மீது அவதூறு சொல்பவர்களையும், கேள்விக்குள்ளாகி மகிழ்பவர்களையும் பார்த்தால் ஒருவிதத்தில் பாவமாக இருக்கிறது.
இளையராஜா செருக்கு மிக்கவர் என சிலர் சொல்வதை பார்த்தால் அதுவும் கூட அவருக்கான மகுடமே என நினைக்கத்தோன்றுகிறது. அது இசைஞான செறுக்கு என்பது ஒரு பக்கம் இருக்க, அப்படி என்ன அவர் செறுக்கை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொண்டுவிட்டார் என்றே கேட்கத்தோன்றுகிறது.
காப்புரிமை தொடர்பான சர்ச்சைகளில், சட்ட புரிதல் இல்லாமல் நுனிப்புல் பார்வையோடு அவரது கருத்தை விமர்சிப்பதை கொச்சைப்படுத்தல் என்றல்லாமல் வேறு எப்படி சொல்வது?
அதோடு, எப்போதாவது ஒரு முறை சாமானிய ரசிகன் தன் பாட்டை கேட்க தடையாக அவர் காப்புரிமை பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறாரா என்ன!
மேலும், அவர் பணத்திற்காக காப்புரிமை போர் தொடுக்கிறார், என நினைப்பதும் அறிவீனம் தான்.
மீண்டும் நிற்க, இந்த வாதங்களின் சரி தவறு அல்ல விஷயம். ராஜா பற்றி தமிழ் சமூகத்தால் பேசாமல் இருக்க முடியவில்லை என்பது தான் நாம் உணர வேண்டிய செய்தி. ஏனெனில், அவர் முடங்கிவிடாமல் இசையால் இயங்கிக் கொண்டே இருக்கிறார்.
இளையராஜா பற்றி வெவ்வேறு காரணங்களுக்காக நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த பேச்சில் பொருள் இல்லாமலும் இல்லை. யோசித்துப்பாருங்கள், ராஜாவுடன் அறிமுகமான பல முன்னணி இயக்குனர்கள் திரைத்துறையில் இருந்து கவுரவ ஓய்வு பெற்றுச்சென்று விட்டனர். பின்னர், அறிமுகமான பல நட்சத்திரங்களும், கலைஞர்களும் கூட மறக்கப்பட்டு விட்டனர்.
ஆனால், ராஜா பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும், ஒரு காலத்தில் அவரில்லாமல் படம் எடுக்கத்துணியாத முன்னணி கலைஞர்கள் பலர் அவரிடம் இருந்து விலகிச் சென்றுவிட்ட பிறகும் கூட, ராஜா தனிக்காட்டு ராஜாவாகவே தொடர்கிறார். ராஜா பகையும் கொண்டது இல்லை, பழைய காலத்தை நினைத்து புலம்பியதும் இல்லை. அவரது பொற்காலம் இடைவெளியின்றி தொடர்கிறது. வெறும் வர்த்தக வெற்றி அல்லது ஹிட் பாடல்கள் கொண்டு அளவிடப்பட முடியாத இசை ஆற்றல் அவரிடம் இருக்கிறது.
இன்றளவும் தமிழில் ஒரு நல்ல படம் கொடுக்க விரும்பும் புதிய இயக்குனர்கள் ராஜாவின் இசையை நாடிச்செல்லும் தன்மை கொண்டிருக்கின்றனர். அவரோ இப்போது தான் நண்பன் பாலுவுக்கு மெட்டு போட்டுத்தந்தது போன்ற உற்சாகத்தோடு, இளம் இயக்குனர்கள் கேட்கும் இசையை உற்சாகமாக வழங்கி கொண்டிருக்கிறார்.
இசையில் அவருக்கு இருக்கும் ஈடுபாடும், தாகமும் தான் அவரை இடைவிடாமல் இயக்கி கொண்டிருக்கிறது. இப்போது மீண்டும் சிம்பனி இசைக்க வைத்திருக்கிறது.

சாதனைகள் மீது ஏறி நின்று இளைப்பாற விரும்பாத இந்த 80 வயது இளைஞரை என்னவென்று சொல்வது!
இப்போது தான் துவக்கம் என சொல்வது, வாழ்க்கைக்கான அணுகுமுறை பற்றி நமக்கு சரியான செய்தியை உணர்த்துகிறது அல்லவா!
இவ்வளவு ஏன், எல்லோரும் ஏஐ நுட்பத்தால் அலறி துடிக்கும் காலத்தில், ஏஐ நுட்பத்தோடு போட்டி போடுவோம்... என ராஜா சொல்வது, மனித படைப்பூக்கத்தின் மிடுக்கையும், மாண்பையும் உணர்த்துகிறது அல்லவா!
ராஜாவின் வாழ்க்கை இசைமயமானது. அவருக்குள் இருக்கும் இசை ஊற்று இன்னும் வற்றாமல் இருக்கிறது. ஒரு முறை பேச்சு வாக்கில் திரைத்துறை நண்பர் ஒருவர், இளையாராஜாவிடம் அந்த காலகட்டத்தில் படைப்பூக்கம் என்பது பிரவாகமாக இருந்தது என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அந்த பிரவாகம் இதுவரை ஒருபோதும் குறைந்துவிடவில்லை, வடிவங்களில் மட்டுமே மாறியிருக்கிறது என்பது என் பார்வை.
இன்னும் யோசித்துப்பார்த்தால் ராஜாவின் செயல்பாட்டில் மட்டும் அல்ல அணுகுமுறையிலும் கூட நமக்கான பாடங்கள் இருக்கின்றன. அவர் விமர்சனங்களால் காயப்பட்டதும் இல்லை, தன்னை மாற்றிக்கொண்டதும் இல்லை. ஏனெனில், அவருக்கு வேலை இருக்கிறது, அவர் இயங்கி கொண்டே இருக்கிறார். இசையில் இப்போதும் கற்றுக்கொள்ள இருப்பதாக அந்த இசை மேதை சொல்லும் போது, அதில் வெளிப்படுவது போலி தன்னடக்கம் அல்ல, இயல்பான அறிவுத்தாகம்.
எப்போதும் கற்றுக்கொள்ள இருப்பதாக நினைக்கும் அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் அது தானே. புகழோ, சர்ச்சைகளோ, வீண் விவாதங்களோ அவரது பாதையை மாற்றிவிடவில்லை. அவர் இசை மனது இன்னமும் ராகங்களை அசை போட்டுக்கொண்டே இருக்கிறது.
எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது எப்படி என இளையராஜா நமக்கு கற்றுத்தருகிறார்.
இந்தக் கட்டுரையில் இசைஞானி என்றோ, மாஸ்ட்ரோ என்றோ அடைமொழிகளை பயன்படுத்தாததற்கு காரணம், அவர் எனக்கும், நமக்கும் எப்பவும் ’ராஜா’ தான்.
பி.கு: இளையராஜாவின் பாடல்களில் வெளிப்படும் கட்டுக்கடங்காத நுணுக்கங்கள் பற்றி பல நல்ல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. யூடியூப்பில் அவரது பாடல்களை அருமையாக கட்டுத்துக்கொண்டிருக்கின்றனர். எனது விருப்பம் என்னெவில், இளையராஜாவின் இசைப்பயணத்தை சித்தரிக்கும் வகையில், வெவ்வேறு கால கட்டங்களில் வந்த விதவிதமான இசைக்கோர்வைகள், அவரது பாடல்களில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள், அவர் பாடர்கர்களை பயன்படுத்திய விதம் போன்ற விவரங்களை எல்லாம் தரவுகளால் சுட்டிக்காட்டி, செறிவான, வாசகர்கள் தொடர்பு கொள்ளும் வசதி கொண்ட, பல அடுக்கு தகவல் சித்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது தான்.
Edited by Induja Raghunathan