தனது 47% பங்குகளை மகள் ரோஷ்னிக்கு எழுதிவைத்த சிவ் நாடார்: முழுமையாக ரோஷினி கைக்கு மாறியது HCL!
தனது கம்பெனியை முழுமையாக தனது மகளிடம் ஒப்படைக்கும் விதமாக ஹெச்.சி.எல் நிறுவனத்தில் தனக்கு இருந்த 47 சதவீத பங்குகளை தனது மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ராவிற்கு எழுதிக் கொடுத்துள்ளார் HCL குழுமத்தின் நிறுவனர் சிவ் நாடார்.
நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல். தமிழகத்தை சேர்ந்த சிவ் நாடார் தொடங்கிய இந்த நிறுவனமானது, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியிலும் இயங்கி வருகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களையும் தொடங்கி, நடத்தி வருகிறார் சிவ் நாடார்.
எந்தளவுக்கு தொழிலில் பெயர் போனவரோ, அதே அளவிற்கு தானத்திற்கும் பேர் போனவர் அவர். இந்தியாவில் அதிக அளவில் நன்கொடை வழங்கும் தொழிலதிபராக இருந்து வருகிறார். தொழிலில் வெற்றியாளராக இயங்கி வந்த போதே, இளைய தலைமுறைக்கு வழி விடும் வகையில், தனது பொறுப்புகளை தனது மகளுக்கு தாரை வார்க்கத் தொடங்கினார் சிவ் நாடார்.

மகளுக்கு பொறுப்பு
கடந்த 2020ம் ஆண்டு தனது கம்பெனியின் பொறுப்புகளை தனது மகள் ரோஷினி நாடாரிடம் ஒப்படைத்தார் சிவ் நாடார். ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ரோஷினி, இதன்மூலம், நாட்டின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.
பின்னர், 2021ம் ஆண்டு ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்தும் விலகினார் சிவ் நாடார். அதன் தொடர்ச்சியாக, அப்பதவியில் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
பொறுப்புகளில் இருந்து விலகினாலும், ஹெச்.சி.எல். நிறுவனத்தில் சிவ் நாடாருக்கு 51 சதவீத பங்குகள் இருந்து வந்தது.
இதுதவிர வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திலும், அவருக்கு 44.17 சதவீத பங்குகள் இருந்தது. தற்போது அந்தப் பங்குகளையும் தனது மகள் ரோஷினிக்கே எழுதிக் கொடுத்துள்ளார் சிவ் நாடார்.

ரோஷினி கையில் ஹெச்.சி.எல்
ஷிவ் நாடாரின் இந்த முடிவால், 12 பில்லியன் டாலர் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் கார்ப்பரேசன் மற்றும் வாமா சுந்தரி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் முழு பொறுப்பும் ரோஷினியின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்த நிறுவனத்திற்கான அனைத்து இறுதி முடிவுகளுக்கும் இனி ரோஷினி நாடார் பொறுப்பாவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும், முழு முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அவர் பெறுவார்.
வாமா டெல்லி மற்றும் ஹெச்.சி.எல் கார்ப்பரேஷனின் பெரும்பான்மை பங்குதாரராக மாறுவதால் இனி அந்த நிறுவனம் இவருக்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வாமா டெல்லியின் 44.17% பங்குகள் மற்றும் ஹெச்.சி.எல் கார்ப் நிறுவனத்தின் 0.17% பங்குகளை பெறுவதால் நிறுவனத்தில் முடிவெடுக்கும் வீட்டோ அதிகாரம் இவருக்கு வழங்கப்படும். மொத்தமாக அவர் வாமா டெல்லியின் 12.94% பங்குகள் மற்றும் HCL இன்ஃபோசிஸ்டம்ஸில் HCL கார்ப் நிறுவனத்தின் 49.94% பங்குகள் மீது வாக்குரிமையை வைத்திருப்பார்.

மகள் ரோஷினியுடன் ஷிவ் நாடார்
மகள் கட்டுப்பாட்டில் சொத்துக்கள்
சிவ் நாடாரின் ஒரே மகளான ரோஷினி, 1982ம் ஆண்டு பிறந்தவர். Northwestern University மற்றும் Kellogg School of Management-ல் கல்வி பயின்று, தொழில் நிர்வாகத்தில் தனி முத்திரை பதித்தவர். சமூகச் செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு, சிவ் நாடார் பவுண்டேசன் மூலமாக கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களித்து வருகிறார். உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் ஒருவராக போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவரது தலைமையிலான ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், இந்திய ஐடி துறையில் கடந்த சில வருடங்களாக வளர்ச்சியை கண்டுள்ளது.
சிவ் நாடார் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருவதால், அவர் தனது நிறுவனத்தின் முழு பொறுப்பையும் மகள் வசம் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, 12 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடர்ந்து தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதாலும், தனது பங்குகள் மற்றும் சொத்துக்களை சிவ் நாடார் தனது மகள் பெயருக்கு மாற்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ரோஷினி நாடார், கம்பெனியின் சி.எஸ்.ஆர் போர்டு கமிட்டி தலைவராகவும், சிவ் நாடார் பவுண்டேசன் அறங்காவலராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.