சுலபமாக கடன் பெற 'சிபில் ஸ்கோர்' முக்கியமா? அதை சரி பார்ப்பது எப்படி?
வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என எங்கு கடன் பெறவேண்டும் என்றாலும் Cibil ஸ்கோர் மிகமுக்கியம். எந்த வகை லோன்களாக இருந்தாலும், கடன் தரும் நிறுவனம் கடன் தர உறுதிசெய்வது இந்த சிபில் ஸ்கோர் பொறுத்துதான். இத்தகைய சூழலில் சிபில் ஸ்கோர் என்றால் என்ன? அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை விரிவாக பார்ப்போம்.
அனைத்து விதமான கடன் பெறுவதற்கும் CIBIL ஸ்கோர் என்பது அவசியமானது. அதன் அடிப்படையில் தான் தனி நபர்களுக்கு வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. இத்தகைய சூழலில் சிபில் ஸ்கோர் என்றால் என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.
சிபில் ஸ்கோர் என்றால் என்ன?
Credit Information Bureau (India) Limited என்பதன் சுருக்கம் தான் CIBIL. தனிநபர் ஒருவரின் கடந்த கால கடன் சார்ந்த விவரங்களை கொண்டு அவரது நம்பகத்தன்மையை வங்கிகள், கடன் வழங்கும் நிறுவனங்கள் சரி பார்ப்பது வழக்கம். இதில் சம்பந்தப்பட்ட நபர் கடன் தவணைகளை சரியான நேரத்தில் செலுத்திய விவரங்களை வங்கிகள் அறிந்து கொள்ளும். சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் வங்கிகள் கடன் வழங்க முன்வரும்.
இது மூன்று இலக்குகள் கொண்ட எண் ஆகும். இதன் ரேஞ்ச் 300 முதல் 900 வரையில் இருக்கும். வெறும் எண்ணாக மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட நபர் கடன் பெற்றது குறித்த விவரங்கள் விரிவான அறிக்கையாகவும் இருக்கும்.

சிபில் ஸ்கோர் எவ்வளவு முக்கியம்?
- தனிநபர்கள் கடன் பெற சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியமானது. ஒருவருக்கு கடன் வழங்குவதற்கான தகுதியை அதன் அடிப்படையில் தான் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. சிபில் ஸ்கோரின் மதிப்பினை பொறுத்தே அது அமையும்.
- ஒருவர் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் போது வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் முதலில் ரிவ்யூ செய்வது விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் மற்றும் பழைய கடன் சார்ந்த விவரங்களை தான்.
- சிபில் ஸ்கோர் மிகவும் குறைவாக இருந்தால் நிதி நிறுவனங்கள் அதை காரணமாக சொல்லி கடன் வழங்க மறுக்கும்.
- அதுவே, சிபில் ஸ்கோர் வலுவாக இருந்தால் நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு கடன் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். விரைந்து கடன் பெறும் நடைமுறையும் சுலபமானதாக அமையும்.
- மேலும், சிபில் ஸ்கோர் வலுவாக இருந்தால் கிரெடிட் கார்டு அல்லது ப்ரீ-அப்ரூவ்டு லோன் போன்றவற்றையும் வங்கிகள் வழங்க முன் வரும்.

‘சிபில்’ செக் செய்வது எப்படி?
ட்ரான்ஸ் யூனியன் CIBIL-ன் https://myscore.cibil.com/CreditView/enrollShort_new.page என்ற தளத்தில் தனிநபர்கள் தங்களது சிபில் ஸ்கோர் மற்றும் அதன் விரிவான அறிக்கையை ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதற்கு இ-மெயில் முகவரி, பெயர், பான் கார்டு - பாஸ்போர்ட் - வாக்காளர் அடையாள அட்டை - ஓட்டுநர் உரிமம் - ரேஷன் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் எண்ணை வழங்க வேண்டும். பிறந்த தேதி, வசிக்கும் இடத்தின் Pincode, மொபைல் எண் போன்றவற்றை கொடுத்து Sign Up செய்து சிபில் ஸ்கோரை பெறலாம்.
அடுத்த ஆண்டு சிபில் ஸ்கோரை இலவசமாக பெற மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும். சந்தா கட்டணம் செலுத்தினால் எப்போது வேண்டுமானாலும் சிபில் ஸ்கோரை பெறலாம்.
இது தவிர. போன்பே மற்றும் ஜி-பே போன்ற யுபிஐ செயலிகள் மூலமாகவும் சிபில் ஸ்கோரை செக் செய்யலாம். இது மட்டுமல்லாது இன்னும் சில தளங்கள் மூலமாகவும் சிபில் ஸ்கோரை செக் செய்யலாம்.

Edited by Induja Raghunathan