'மென்பொருள் வேலைவாய்ப்புகளுக்கு காத்திருக்கும் கடினமான காலம்' - ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை!
மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு தொடர்பாக தற்போது நிலவும் சவால்கள், செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளை பறிப்பதால் உணடாகவில்லை என்றும், இதற்கு அமைப்பு சார்ந்த ஆழமான பிரச்சனைகளே காரணம் என்று ஜோஹோ நிறுவன, முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு தொடர்பாக தற்போது நிலவும் சவால்கள், செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளை பறிப்பதால் (குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை), உணடாகவில்லை என்றும், இதற்கு அமைப்பு சார்ந்த ஆழமான பிரச்சனைகளே காரணம் என்று ஜோஹோ நிறுவன, முதன்மை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
இது தொடர்பாக எஸ்க் தளத்தில் எழுதியுள்ள நீளமான பதிவில், கடந்த சில ஆண்டுகளில், வென்சர் மூலதனம், தனியார் சமபங்கு மற்றும் ஐபிஓ ஈர்ப்பு காரணமாக வர்த்தக நிறுவனம் சார்ந்த மென்பொருளில் பெரும் செயல்திறன் இன்மை சேர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்த மிகை மூலதனமாக்கல், மென்பொருள் துறையை செயற்கையாக விரிவாக்கி, நகல் ஐடி அமைப்புகள், மிகை வேலைவாய்ப்பு மற்றும் இலக்கு தவறிய ஊக்கம் அளிப்புகளுக்கு வித்திட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மென்பொருள் சேவை நிறுவனங்களின் தீவிர மார்க்கெட்டிங்கே செயல்திறன் இன்மைக்கான முக்கியக் காரணம் என்றும், இந்நிறுவனங்கள் வர்த்தக வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம், சந்தேகம், நிச்சயமற்ற தன்மையை உண்டாக்கி, அவர்களின் ஐடி செலவை அதிகரிக்க வைக்கும் உத்தியை நீண்ட காலமாக பின்பற்றி வருவதாகவும், ஆனால், இதனால் செயல்திறன் அதிகரிக்கும் எனும் உறுதி இல்லை, என்றும் கூறியுள்ளார்.
”மென்பொருள் நிறுவனங்கள் தாராளமாக மார்க்கெட்டிங்கிற்கு செலவு செய்து, அச்சம் (வாய்ப்புகளை தவறவிடுவது), நிச்சயமற்ற தன்மை (தொழில்நுட்பம் மாறுகிறது, எங்கள் உதவி தேவை), சந்தேகம் (குழப்பமா, எங்களை நம்புங்கள்), ஆகியவற்றை வர்த்தக வாடிக்கையாளர்களிடம் உண்டாக்கின. இதன் விளைவாக ஐடி செலவுகள் அதிகரித்தன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரிய நிறுவனங்கள், குறிப்பாக மேற்கில் உள்ளவை, தொடர்ச்சியாக புதிய மென்பொருள் தீர்வுகளை வாங்கும் சுழற்சியில் சிக்கி, அதன் விளைவாக இந்த சிக்கலான அமைப்புகளை ஒருங்கிணைத்து, பராமரிக்க மேலும் அதிகம் செலவு செய்கின்றன. செயல்பாடுகளை சீராக்குவதற்காக, இந்த மிகை ஐடி வசதிகள் தொடர்ச்சியாக வளங்களை வற்றச்செய்து, அவற்றை செயல்பாட்டில் வைத்திருக்க மனித வளம் தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவுட்சோர்சிங்
இந்த செயல்திறன் இன்மையில் பெரும்பகுதி இந்தியாவில் உள்ள ஐடி சேவை நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டன என்று தெரிவித்துள்ளார். ஐடி பட்ஜெட்டை டாலர் அளவில் பராமரிக்கும் நோக்கத்துடன் மேற்கத்திய நிறுவனங்கள், தங்கள் பணியில் பெரும்பகுதியை அவுட்சோர்ஸ் செய்து, செயல்திறன் இன்மையை மேலும் அதிகமாக்கியது.
மேற்கில் ஐந்து பேர் தேவைப்பட்ட செயல்திறன் அற்ற பணிகளுக்கு, இந்திய ஐடி நிறுவனங்கள், அதிக வேலைநேரம் கணக்கு காட்ட மூன்று முதல் நான்கு மடங்கு பணியாளர்களை நியமித்தன என்றும் கூறியுள்ளார். இதன் விளைவாக, இந்திய மென்பொருள் வேலைவாய்ப்பு சந்தை, உண்மையான செயல்திறனை சார்ந்திருப்பதற்கு பதிலாக, செயல்திறன் இன்மையை சார்ந்திருக்கிறது, என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மேற்கத்திய வங்கிகளுடன் ஒப்பிடும் போது குறைந்த பட்ஜெட்டில் அதிக ஐடி செயல்திறன் பெற்றுள்ளதாகவும் வேம்பு கூறியுள்ளார். கூடுதல் நிதி இல்லாதது, செலவு குறைந்த, செயல் திறன் மிக்க தீர்வுகளை உருவாக்க நேர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு அடிப்படை பிரச்சனை என்னவென்றால், செயல்திறனை மேம்படுத்தும் அவசியம் தற்போதைய மென்பொருள் துறைக்கு இல்லாமல் இருப்பது என்றும் கூறியுள்ளார்.
"ஐடி சேவைகள் துறையில் சேவையின் பலனை கொண்டு அல்லாமல், வேலைநேரத்தின் அடிப்படையில் பில்லிங் செய்யப்பட்டதால், அணியின் அளவை குறைக்க அல்லது செயல்திறனை மேம்படுத்த அதிக ஊக்கம் இல்லை என்று கூறியுள்ளார். எனவே, நிறுவனங்கள் தேவை காரணமாக அல்லாமல், செயல்திறன் இன்மைக்காக பலன் கிடைப்பதால் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது நிகழ்ந்தது," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ தாக்கம்
இப்போது ஏஐ நுட்பமும் வந்திருக்கிறது. இப்போதைக்கு ஏஐ பெரிய அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதன் தாக்கம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஒரே மாதிரியான செயல்கள் கொண்ட கோடிங் பணிகளை ஏஐ நுட்பம் எளிதாக கையாளலாம்.
தற்போதைய ஏஐ திறன் செயல்திறனை 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கக் கூடியது என்றும், பெரிய அளவில் வேலைவாய்ப்பு இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் 100 மடங்கு திறன் கொண்டிருக்கவில்லை என்றாலும், வேலைவாய்ப்பு நியமன முறையில் மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது என்றும் கூறியுள்ளார்.
அதைவிட முக்கியமாக, ஏஐ பலன்கள், மென்பொருள் சந்தையில் இரண்டற கலந்திருக்கும் செயல்திறன் இன்மையை வெளிப்படுத்த துவங்கியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மென்பொருள் துறையின் அமைப்பில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் இப்போது வெளிப்பட துவங்கியிருப்பதாலும், இதை மறைக்க தேவையான நிதி பலம் இல்லாததாலும், மென்பொருள் துறையின் வேலைவாய்ப்புகள் எதிர்காலம் தொடர்பாக அவநம்பிக்கை கொண்டிருப்பதாகவும் வேம்பு கூறியுள்ளார்.
ஒரு சில பணிகளை ஏஐ பதிலீடு செய்தாலும், உடனடி சவால் என்பது செயல்திறனுக்கு பதிலாக, நீடித்த தன்மை இல்லாத வர்த்தக முறையை சார்ந்திருந்ததே என்றும் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan