மிகச்சிறிய வயலினை உருவாக்கி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சாதனையாளர்!
ஒரு மில்லி கிராமிற்கும் குறைவான எடைகொண்ட வயலினையும் கத்திரிக்கோலையும் தங்கத்தில் உருவாக்கி லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் அஜய் குமார். இவை இரண்டுமே பயன்பாட்டிற்கு உகந்தவை.
மட்டேவாடா அஜய் குமார் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இவர் ஒரு பொற்கொல்லர் மற்றும் சிற்பி. இவர் லிம்கா சாதனை புத்தகத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். மினியேச்சர் சிற்பங்களை செதுக்கும் இவர் இந்த முறை மிகச்சிறிய வயலினையும் கத்திரிக்கோலையும் தங்கத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த வயலினைக் கொண்டு வாசிக்கமுடியும். வாராங்கல் பகுதியைச் சேர்ந்த 45 வயதான அஜய் 30 ஆண்டுகளாக மினியேச்சர் சிற்பங்கள் செதுக்குவதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்.

0.74 மில்லி கிராம் எடையும் 2 செ.மீ நீளமும் கொண்ட இந்த வயலின் உலோகத்தால் ஆனது. இதில் நான்கு தந்திகளும் (Metal Strings) ஒரு வில்லும் (Bow) உள்ளது. இதை உருவாக்க அவருக்கு 11 மணி நேரம் ஆனது. அதேபோல் கத்திரிக்கோலை உருவாக்க மூன்று மணி நேரம் ஆனது. 0.18 மில்லி கிராம் எடை கொண்ட இந்தக் கத்திரிக்கோல் மிகச்சிறிய அளவில் இருப்பினும் இதைப் பயன்படுத்தி பேப்பரை கத்திரிக்கமுடியும்.
”மைக்ரோ அளவில் ஒரு சிற்பத்தை செதுக்க பல மணி நேரம் ஆகும். கண்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வரை மட்டுமே பணிபுரியமுடியும். சில நேரங்களில் மூச்சைக்கூட கட்டுப்படுத்தவேண்டியிருக்கும். ஏனெனில் சிறு இடையூறு ஏற்பட்டாலும் நுட்பமான பணிகள் சேதமாகிவிடும்,” என்று ’தி இந்து’ உடனான உரையாடலில் அஜய் குறிப்பிட்டுள்ளார்.
லிம்கா சாதனை புத்தகத்தில் அஜய் இடம்பெற்றிருப்பது இது முதல் முறையல்ல. “நான் 1.5 கிராம் எடை கொண்ட பூட்டையும் மிகச்சிறிய மின்விசிறியையும் உருவாக்கியதற்காக முதன் முதலாக லிம்கா சாதனையில் இடம்பெற்றேன்,” என ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் அஜய் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசியின் கண்ணில் தண்டி யாத்திரையை சித்தரிக்கும் சிலைகளை செதுக்கியதற்காக பெரிதும் பாராட்டப்பட்டார். இந்த மெழுகு சிலைகள் 1 மி.மீ நீளமும் 0.5 மி.மீட்டருக்கும் குறைவான அகலத்தையும் கொண்டுள்ளது. இந்த சிற்பத்தை மைக்ரோஸ்கோப் உதவியால் மட்டுமே பார்க்கமுடியும். இந்த சிற்பம் தற்போது குஜராத்தின் தண்டியில் அமைந்துள்ள இந்திய அரசாங்கத்தின் தேசிய உப்பு சத்தியாகிரக நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தண்டி யாத்திரை சிற்பத்தை செதுக்க 30 மணி நேரங்களுக்கு மேல் ஆனதாகவும் 11 நாட்களுக்கும் மேலாக செலவிட்டதாகவும் ’தி நியூஸ் மினிட்’ இடம் தெரிவித்துள்ளார் அஜய். இதை அவரது அப்பா வெங்கடாச்சாரிக்கு அர்ப்பணித்துள்ளார். அஜயின் அப்பாவும் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். அவரும் தொழில்முறை பொற்கொல்லன் என்பதால் அஜய் அவரிடமிருந்தே இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டுள்ளார்.
”நான் நெல் மணிகளில் இருந்தே நுண் கலையை பயிற்சி செய்யத் துவங்கினேன். நெல் தானியங்களில் பிரபலங்களின் முகங்களை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தேன். பின்னர் தீக்குச்சிகளைக் கொண்டு சோதனை செய்தேன். அதன் பிறகு தங்கத்தில் செதுக்க ஆரம்பித்தேன்,” என்றார்.
அஜயின் மினியேச்சர் சிற்பங்கள் மற்றும் மைக்ரோ ஓவியங்கள் பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA