'ஜனவரி மாதம் ஓலா எலெக்ட்ரிக் மொத்த லாப விகிதம் அதிகரித்துள்ளது' - பாவிஷ் அகர்வால் தகவல்!
வாகனங்கள் அறிமுகம், புதிய விற்பனை நிலையங்கள் மூலம் பலன் பெற எதிர்பார்க்கும் ஓலா நிறுவனம் ஆண்டு மத்தியில் மூன்று சக்கர வாகன சந்தையில் நுழைய உள்ளது.
மூன்றாம் காலாண்டின் மொத்த லாப விகிதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதோடு, காலாண்டில் குறைந்துள்ள வருவாய் மற்றும் அதிகரித்துள்ள நஷ்டம் தொடர்பான முதலீட்டாளர்கள் கவலை தொடர்பாகவும் ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஓ. பாவிஷ் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
டிசம்பர் வரை முடிந்த காலாண்டில் ஓலா எலெக்ட்ரிக் மொத்த லாபம் 20.8 சதவீதமாக உள்ளது. முந்தைய காலாண்டைவிட இது 20 அடிப்படை புள்ளிகள் அதிகம். நேரடி உற்பத்தி செலவுக்கு பிந்தைய வருவாய் விகிதம் மொத்த லாபமாக அமைகிறது.
2025ம் ஆண்டு ஜனவரியில் லாபம் குறிப்பிடத்தக விகிதம் அதிகரித்திருப்பதாகவும், நான்காம் காலாண்டு மற்றும் அதை கடந்து தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் பாவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.
“மாதம் 50 ஆயிரம் வாகங்கள் விற்பனையில் லாப விகிதத்தை எதிர்பார்க்கலாம். சந்தை நிலவரம் மற்றும் வாகன விற்பனை அடிப்படையில் நிறுவனம் இதை அடையும். ஆனால், அடுத்த சில காலாண்டுகளில் 50 ஆயிரம் மாத விற்பனையை அடைய வாய்ப்பு இருப்பதாக கருதுகிறோம், என்று தெரிவித்த பாவிஷ் அகர்வால், ஜனவரி மாத நிலை தொடர்ந்தால் இது சாத்தியம்,“ என்றார்.

ஜனவரியில் நிறுவனம் 22,656 வாகனங்கள் விற்பனை ஆயின. இருப்பினும், இந்த காலாண்டு நிறைவு மற்றும் அடுத்த காலாண்டு இடையே வரும் பண்டிகை காலத்தில், நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், விற்பனை அதிகரிக்கும், என எதிர்பார்ப்பதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்களுக்கான முன்பதிவு விவரங்களை அளிக்கவில்லை என்றாலும், அனைத்து நிறுவன அறிமுகங்களுக்கும் நல்ல வரவேற்பு இருப்பதாக அகர்வால் தெரிவித்துள்ளார்.
மொத்த அளவில், நிறுவனத்திற்குள் தயாரான பேட்டரி செல்கள், மேலும் லாப விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிறுவனம் இந்த ஆண்டு மத்தியில் மின் வாகன ஆட்டோக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
நிறுவன பணியாளர்களில் 15 முதல் 17 சதவீத ஊழியர்களை நீக்கியது உள்பட இந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவு சீராக்க நடவடிக்கைகள் குறித்தும் அகர்வால் குறிப்பிட்டார். எனினும், இந்த செலவு குறைப்புக்கு நிகராக, விரிவாக்கத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக், நாடு முழுவதும் 3,200 புதிய விற்பனை நிலையங்கள் மற்றும் சேவை மையங்களை அமைத்துள்ளது. இவற்றின் மூலமான விற்பனை பலன் அளிக்க இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம் என்றாலும் இந்த மையங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் வருகையை எதிர்கொண்டு வருகின்றன.
மின் இருசக்கர வாகனத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் நஷ்டம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த காலாண்டில் வாகன விற்பனை குறைந்துள்ளது. இந்த காலாண்டில் ரூ.562 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முந்தைய இணையான காலாண்டில் இது ரூ.374 கோடியாக இருந்தது.
மேலும், மூன்றாம் காலாண்டில்,செயல்பாடுகள் வருமானம் 19.4 சதவீதம் குறைந்து ரூ.1,045 கோடியாக இருந்தது.
(பொறுப்பு துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ. ஷரத்தா சர்மா, ஓலா எலெக்ட்ரிக் சுயேட்சை இயக்குனர்)
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan