இணையத்தில் வைரலாகும் வார்த்தை விளையாட்டு 'Wordle' - அப்படி என்ன இருக்கு இதுல?
டிவிட்டர் உள்ளிட்ட தளங்களில், வேர்ட்லே எனும் புதிய வார்த்தை விளையாட்டு வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
சுடோகு வார்த்தை விளையாட்டை நினைவிருக்கிறதா? இப்போது இணையத்தில் 'வேர்ட்லே' (Wordle) எனும் இன்னொரு வார்த்தை விளையாட்டு பிரபலமாகி இருக்கிறது. டிவிட்டர் தளத்தில் அதிகம் பகிரப்பட்ட இந்தத் தளம், நம்மை அடிமையாக்கி விடும் என இதன் அபிமானிகள் சந்தோஷமாக அலுத்துக்கொள்கின்றனர்.
நீங்களும் கூட, வேர்ட்லே வார்த்தை விளையாட்டு உங்கள் டிவிட்டர் டைம்லைனில் தோன்றுவதை பார்த்து இதென்ன புதுசாக இருக்கிறதே என குழம்பியிருக்கலாம். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டிய நாட்களில் இந்த விளையாட்டு டிவிட்டரில் அதிகம் பகிரப்பட்டு பிரபலமானது.
அடிப்படையில் எளிமையானதாக தோன்றினாலும் இந்த விளையாட்டில் உள்ள புதிர் தன்மையே அது வைரலாகக் காரணமாக கருதப்படுகிறது.

அப்படி என்ன இருக்கிறது வேர்ட்லே விளையாட்டில்?
சொற்களை ஊகிப்பதை மையமாகக் கொண்ட வார்த்தை விளையாட்டு ரகத்தைச்சேர்ந்ததாக வேர்ட்லே அமைகிறது. காலி கட்டங்கள் கொண்டதாக தோன்றும் இந்த விளையாட்டில் இடம் பெற வேண்டிய ஐந்தெழுத்து வார்த்தை ஊகிக்க வேண்டும். ஆனால், அந்த வார்த்தை என்ன என்பதற்கு எந்த துப்பும் இருக்காது.
எவ்வித வழிகாட்டுதல் குறிப்பும் இல்லாமல் வார்த்தை எப்படி ஊகிப்பது?
டிவிட்டர் பகிர்வு
இந்த இடத்தில் தான் வேர்ட்லே விளையாட்டின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. முதல் முறை வார்த்தை ஊகித்தவுடன், அதில் சரியான எழுத்துகள் பச்சை நிறத்தில் அடையாளம் காட்டப்படும். அடுத்ததாக சரியான, ஆனால் தவறான கட்டத்தில் இடம்பெற்றுள்ள எழுத்துகள் மஞ்சல் நிறத்தில் தோன்றும். தவறான எழுத்துகள் கிரே நிறத்தில் தோன்றும்.
இந்த வண்ணக்குறிப்புகளை வழிகாட்டியாகக் கொண்டு அடுத்ததாக ஊகிக்க முயற்சிக்க வேண்டும். இப்படி ஆறு முயற்சிக்குள் சரியான வார்த்தையை ஊகித்தால் வெற்றி பெற்றதாக கருதப்படும்.
இப்படி தினமும் ஒரு புதிர் வார்த்தை இந்த வேர்ட்லே விளையாட்டில் இடம்பெறும். இந்த புதிரை விடுவித்தால், அதை அப்படியே டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் எழுத்துகள் அடையாளம் காட்டப்படாமல், அவை இடம்பெறும் கட்டங்களின் வண்ணம் மட்டுமே தோன்றும் வகையில் இது அமைவதால், மற்றவர்கள் வார்த்தையை அறிய முடியாது.

Wordle தளம்
வேர்ட்லே விளையாடும் பலரும் இந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்து வருவதால் மற்றவர்களுக்கும் ஆர்வம் உண்டாகி வைரலானது. இந்த விளையாட்டை உலகம் முழுவதும் உள்ளவர்கள் விளையாடலாம் என்பதால் எத்தனை பேர் வெற்றி பெற்றுள்ளனர் எனும் விவரத்தையும் பார்க்கலாம். இந்த ஒப்பீடும் விளையாட்டு வைரலாக முக்கியக் காரணம்.
எளிமையாக தோன்றினாலும், இதில் சரியான வார்த்தை ஊகிப்பது சவாலாக இருப்பதும் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இந்த விளையாட்டை பவர் லாங்குவேஜ் (https://www.powerlanguage.co.uk/wordle/) இணையதளத்தில் விளையாடலாம்.
’ஜோஷ் வார்ட்லே’ (Josh Wardle) எனும் ரெட்டிட் பொறியாளர் இந்த விளையாட்டை உருவாக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ரெட்டிட் பயனாளிகள் மத்தியில் பிரபலமான பட்டன் உள்ளிட்ட விளையாட்டை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.