‘அனைத்தும் சாத்தியம்’ - சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அருட்காட்சியகம் திறப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற அருட்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற அருட்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்துள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி உடல் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றி, ’மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லை கொண்டு வந்தார். அதேபோல், இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காகத் தனித் துறையையும் உருவாக்கினார்.
மேலும் மாத ஓய்வூதியத் திட்டம், பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை, கல்வி உதவித்தொகை,கல்லூரிகளில் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையில் கால் நனைக்கும் விதமாக தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டது. அதனை நிரந்தரமாக்கும் முயற்சியிலும் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
கொரோனா காலக்கட்டத்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அருட்காட்சியகமும் திறக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அருட்காட்சியகம் திறப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ரூ .1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அருட்காட்சியகத்தின் சிறப்பம்பசங்கள்:
எத்தனையோ அருட்காட்சியகங்களை பார்த்திருப்போம், ஆனால் இந்த அருட்காட்சியகத்திற்கு என சில சிறப்பம்சங்கள் உள்ளன.
- இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் உடல் திறன் குறைபாடு, புலன் குறைபாடு, பார்வை குறைபாடு, கேள்விக் குறைபாடு, நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறைபாடு, மனவளர்ச்சிக் குறைபாடு ஆகிய வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தேவையான விஷயங்கள் இந்த அருட்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
- ’அனைத்தும் சாத்தியம்’ அருட்காட்சியகத்தைப் பொறுத்தவரை ஒரு மாற்றுத்திறனாளி பிறரது உதவி இன்று எவ்வாறு வீட்டில் இயங்க முடியும் என்பதை விளக்கும் செயல்முறை கூடமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாற்றுத்திறனாளி வாழக்கூடிய இல்லத்தின் சமையலறை, குளியலறை, படிக்கும் அறை போன்ற அறைகளில் ஒரு பொருளை எங்கு வைத்தால் மாற்றுத்திறனாளிகள் தானாகவே எடுத்துக் கொள்ள முடியும் என்பது விளக்கப்பட்டுள்ளது.
- சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ள இந்த அருட்காட்சியகம் வாரத்தின் 6 நாட்களும் மாற்றுத்திறனாளிகளுக்காக திறக்கப்பட்டிருக்கும்.
- பார்வை திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளும் ஒரு பொருளை தொட்டு அந்த பொருள் என்ன என்பதை அறிவதற்கான அனுபவமும் இங்கு கொடுக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை (Choice Based System of providing assistive devices) தொடங்கிவைத்தார்.

முதற்கட்டமாக ரூ.9.50 கோடி மதிப்பில் 7,219 நபர்கள் பயன்பெறும் வகையில், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் ஆகிய 5 வகையான உபகரணங்களில், 36 மாதிரிகளை பயனாளிகள் விருப்பத் தேர்வு முறைக்கு அறிமுகப்படுத்தி, 6 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பிற திட்டங்கள்:
கடந்த ஓராண்டில் மட்டும் திமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள்:
- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்த காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க ரூபாய் 62 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 70 கோடியே 76 லட்சம் ரூபாயில், 37,660 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- 1,228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
- ரூபாய் 360 கோடியே 21 லட்சம் அளவுக்கு பராமரிப்பு உதவித்தொகை 2,11,505 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
- மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமன்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டமாக ரூ.1,709 கோடி செலவில் “RIGHTS” - அதாவது “உரிமைகள்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில அளவிலான விருதும் வழங்கப்படுகிறது.
- தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்விற்கான மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில், ரூபாய் 1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்குப் பார்வைக் குறைவுடைய 31 நபர்கள் சிறப்பு நேர்வாகப் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
- அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணத் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.