ஆரோவில்லில் 70 ஏக்கர் தரிசு நிலத்தை தற்சார்பு உணவுக் காடாக மாற்றிய இஸ்ரேலிய தம்பதி!
தமிழத்தில் 70 ஏக்கர் பாழ்நிலத்தை தற்சார்பு உணவுக் காடாக மாற்றிக் காட்டி 2003-ம் ஆண்டிலேயே சாதனை படைத்தது இஸ்ரேலிய தம்பதியினர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுவதில் சீனா அதி தொழில்நுட்பத்தைக் கைவசம் வைத்துள்ளது. நிறைய தரிசு நிலங்களை விளைச்சலுக்குரியதாக அந்நாடு மாற்றியுள்ளது.
இந்தியாவில் பிஹார் மாநிலத்தில் பங்கா மாவட்டத்தில் குடியா என்ற மலையும் மலைசார்ந்த இடமுமான கிராமத்தில் உள்ள 42,000 ஏக்கர் பாழ்நிலத்தை சொட்டு நீர் பாசனம், மழைநீர் பாசனத்தின் மூலம் விளைநிலமாக மாற்றியதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், தமிழ்நாட்டில் இருந்த 70 ஏக்கர் பாழ்நிலத்தை தற்சாற்பு உணவுக் காடாக மாற்றிக் காட்டி 2003ம் ஆண்டிலேயே சாதனை படைத்தது இஸ்ரேலிய தம்பதியினர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

சாதனா காடு
அந்த சுவாரஸ்யமான கதையை பார்ப்போம்:
அவிரம் ரோசின். இவரது மனைவி யோரித் ரோசின். 1998ம் ஆண்டு முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவைப் பார்த்ததும் இவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
“நாங்கள் தமிழ்நாட்டில் வந்திறங்கியபோது வேறு நாட்டில், வேற்றிடத்தில் இருப்பது போன்ற உணர்வே இல்லை. தாய்நாட்டில் இருப்பது போலவே உணர்ந்தோம். இந்த மக்களையும் இங்குள்ள அனைத்தும் எங்களுக்கு மிக நெருக்கமாகி விட்டன. இதனையடுத்து, இரண்டு ஆண்டுகள் சென்று இந்தியாவுக்கே வந்து விடுவது என்று முடிவெடுத்து விட்டோம்,” என்கிறார் அவிராம் ரோசின்.
சாதனா வனத்தைக் கண்டுப்பிடித்தது எப்படி?
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-இல் பிறந்த அவிரம் ரோசின் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். மருத்துவ உபகரண நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக பெரிய வெற்றிகளைக் கண்டவர். 2000-ம் ஆண்டின் ஆரம்பத்தில் வர்த்தகம் சார்ந்த அனைத்திலும் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தன் வாழ்க்கையை மறுகண்டுபிடிப்புக்கு உட்படுத்த விரும்பினார் ரோசின்.
“வர்த்தக விவகாரங்களில் இருந்து விடுபட்டு வித்தியாசமாக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதாவது, அந்தச் செயல் தொழில் முன்னேற்றமாகவோ, காசு - பணம் செய்வதாகவோ இருக்கக் கூடாது. ஒரு சேவை தொடர்பானதாக அந்தச் செயல் இருக்க வேண்டும் என்பது என் மனதின் திண்ணம். ஆனால், அது எப்படி, எவ்வாறு என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை,” என்று பேட்டி ஒன்றில் கூறினார் அவிரம் ரோசின்.
இந்தப் புதிய முனைப்பு, புதியன செய்வதும் அது மானுட குலத்திற்கு பயனுடையதாகவும் இருக்க வேண்டும் என்ற அவா ரோசின் தம்பதியினரை அவர்களது மகளுடன் தமிழ்நாட்டின் ஆரோவில் பகுதிக்கு வரவழைத்தது.

இஸ்ரேலி ஜோடி - அவிரம் ரோசின் மனைவி யோரித் ரோசின்
டிசம்பர் 2003ம் ஆண்டு இவர்கள் 70 ஏக்கர் தரிசுநிலத்தை வனமாக்கும் முயற்சியைத் தொடங்கினர். இதுதான் இன்று ’சாதனா வனம்’ ஒன்று உருவாகியுள்ளது.
‘தற்சாற்பு உணவுக் காடு’ பசுமைத் திட்டாக அது மாற்றப்பட்டு அங்கு வனவிலங்குகளும் சஞ்சாரம் செய்யத் தொடங்கி விட்டன.
“நாங்கள் எப்படி விரும்பினோமோ அப்படித்தான் வாழ விரும்பினோம். இந்த முயற்சியைக் கூட ஏதோ பெரிய அமைப்பாகவோ நிறுவனமாகவோ மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. அனைத்தும் மிக இயல்பாக பரிணாமம் அடைந்தன. நாங்கள் இங்கு வாழத் தொடங்கினோம், மரக்கன்றுகளை நடவும் தொடங்கினோம். சில நாட்களில் எங்களுக்கு சில தன்னார்வலர்கள் கிடைத்தனர், பின்னர் மேலும் சிலர் வந்தனர். ஒரு மாதத்திற்குள் சுமார் இருபது தன்னார்வலர்கள் எங்களுடன் தற்காலிக தங்குமிடங்களில் இருந்தனர்," என்று அவர் கூறினார்.
வெஜிடேரியன் உணவுதான். புகைப்பிடிப்பதோ, மது அருந்துவதோ கூடாது என்பதுதான் விதிமுறை. ஆனால், இது இளைஞர்களுக்குப் பிடிக்காது என்று தான் கருதியதாகவும், ஆனால் நடந்ததென்னவோ அதற்கு நேர் மாறானது என்றார் ரோசின்.
“எங்கள் நுழைவாயில் இந்தியாவில் ஒரு ரயில் நிலையம் போல அமைந்தது. மக்கள் எல்லா நேரத்திலும் உள்ளேயும் வெளியேயும் நடந்து செல்கிறார்கள். இங்கு வருவோருக்கு இலவச சுற்றுலாப் பயணத்தையும் ஏற்பாடு செய்திருந்தோம். உணவு அருந்தும் வேளைகளில் அதிதிகள் வந்தால் அவர்களுக்கும் இலவசமாக வெஜிடேரியன் காலை உணவு வழங்குவோம். காலை உணவோ, மாலையோ, மதியமோ, இரவோ எந்த நேரத்தில் வருகிறார்களோ அந்த நேரத்தில் இருப்பதை அளித்தோம். மக்கள் இதனை வெகுவாகப் பாராட்டியதோடு இந்தியப் பாரம்பரியத்தில் கொண்டாடப்படும் வாசகமான ‘அதிதி தேவோ பவ’ என்பதன் முழுநிறை செயல் இது என்று கருதினர்,” என்றார் ரோசின்.
ரோசின் கூறிய இன்னொரு சுவாரஸியமான தகவல் என்னவெனில் ஒரு குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கேற்ப இயற்கையே தனக்கு பொருத்தமானதை தேர்வு செய்து கொள்கிறது என்றார்.
“நாங்கள் நீராதார சேமிப்பிலிருந்து தொடங்கினோம், ஏனெனில் இதைச் செய்து விட்டால், மரங்களை நட வேண்டிய அவசியமில்லை. நீராதாரத்தில் மண் விளைச்சலுக்குரியதாகி மற்ற தாவரங்களும் தானாகவே வளரும். தண்ணீரின் இருப்பு பறவைகள் மற்றும் விலங்குகளையும் இங்கு வரவழைக்கும். பறவைகள், விலங்குகள் மூலம் விதைப்பரவல் ஏற்பட்டு தாவரமாகவும் மரங்களாகவும் வளரும். எனவே, இயற்கை தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது,” என்று ஒரு இயற்கை விஞ்ஞானியாகப் பேசினார் ரோசின்.
இன்று இவரது தீரா முயற்சி மற்றும் உழைப்பினால் 70 ஏக்கர் பரப்பில் மயில்கள், காட்டுப்பன்றிகள், முயல்கள், புனுகுப்பூனைகள், குள்ளநரிகள், நரிகள் போன்ற விலங்குகள் உட்பட பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன.

இவ்வாறு அதி அடர்த்தி வன உயிரிகள் தாவரங்களின் இருப்பிடத்தை கட்டிக் காப்பது மிகக் கடினம். ஏனெனில் பார்வையாளர்கள் பயணிகள் வந்த வண்ணம் இருப்பது பராமரிப்புக்கு இடையூறுதான். ஆனால் ரோசின், சாதனா வனத்தைப் பொறுத்தவரை ஒரு சமச்சீரான தன்மை பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
“விலங்குகள் இருப்பிடத்திற்கும் எங்கள் வாழ்விடத்திற்குமான இடைவெளியை சரியாகப் பிரித்து நிர்ணயித்தோம். காட்டுக்குள் செல்வதில்லை, எனவே, காட்டைத் தொந்தரவு செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியே நாங்களோ சுற்றுலாப் பயணிகளோ காட்டுக்குள் சென்றாலும் தனிப்பாதையில் செல்வோம். அதனால், விலங்குகளுக்கோ வன உயிர்களுக்கோ எந்த இடையூறும் இல்லாதவாறு செல்வோம்,” என்கிறார்.
சாதனா வன வெற்றியை ஹைதி - கென்யாவுக்குக் கொண்டு சென்ற ரோசின்:
இந்தியாவின் தமிழ்நாட்டில் சாதனா வனத்தில் அடைந்த வெற்றியை இங்கோடு நிறுத்தி விடாமல் ரோசின் தம்பதியினர் இதே முயற்சியை ஹைதி மற்றும் கென்யாவுக்கும் கொண்டு சென்றனர். அதுவும் 2010ல் ஹைதியை உலுக்கிய மாபெரும் பூகம்பத்திற்கு பிறகு இவர் இந்த முயற்சியை மேற்கொண்டது பலரது பாராட்டுகளையும் ஈர்த்தது.
2014ல் சம்புரு பகுதியில் இதே சாதனா வனத் திட்டத்தை தொடங்கினார் ரோசின். அங்கு நாங்கள் நட்ட ஒவ்வொரு மரத்தையும் நாங்களே பார்த்துக் கொண்டு பராமரித்தோம் என்கிறார் ரோசின். இது சாதாரணமல்ல லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் என்றால் பணியை நினைத்து நாம் பிரமிக்கத்தான் முடியும்.

இயற்கை, மனிதனுக்குமிடையான உறவு மோதல், போர், அழிப்பு என்பதாக இல்லாமல் கருணை, பரஸ்பர பாதுகாப்பு என்று அமைய வேண்டும் என்பதே ரோசினின் தத்துவ நிலைப்பாடு.
“எங்களது செய்தி என்னவெனில், கருணையை, பரிவை செயலாக்குவதுதான். வாழ்க்கை, உணவு, வீடு கட்டுவது, பிறருடன் உரையாடுவது என்று வாழ்க்கையின் எந்த ஒரு விஷயத்தையும் அணுகும் போதும் ‘கருணை’ என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்க வேண்டும். அதாவது, செய்யும் காரியம் கருணை மிக்கதா அல்லது இன்னும் கொஞ்சம் நல்லதாக யோசிக்க வேண்டுமோ என்று நாம் சிந்திக்க வேண்டும்.”
உணவிலும் சரி, கட்டிடம் கட்டினாலும், வீடு கட்டினாலும் சரி, கருணையும் பரிவுமே நம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். வேலைக்கு யாரை அமர்த்தினாலும் அவர்களை கருணையாக நடத்துங்கள், என்று ஒரு தத்துவார்த்த மனிதநேயப் பார்வையை, செயலை வலியுறுத்துகிறார் ரோசின்.
