2020ல் கவனத்தை ஈர்த்த 10 இந்திய ஆப்’கள்!
சவாலான ஆண்டாக அமைந்த 2020 ல், இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த செயலிகள் பற்றி ஒரு பார்வை.
2020ம் ஆண்டு நம்பிக்கையோடு துவங்கினாலும், கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் சோதனையும், சவால்களும் நிறைந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. கொரோனா தொற்று பொருளாதார நோக்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய தொழில் முனைவோரும், ஸ்டார்ட் அப் நிறுவனர்களும், மனம் தளர்ந்து விடாமல் முனைப்புடன் செயல்பட்டனர்.
இதனிடையே சீனாவுடன் ஏற்பட்ட மோதலால் எல்லையில் பதற்றம் நிலவிய சூழலில், நூற்றுக்கும் மேற்பட்ட சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. முன்னணி செயலிகள் பல தடை செய்யப்பட்டாலும், அவற்றின் பாதிப்பை ஈடு செய்யும் வகையில், பல இந்திய தொழில்முனைவோர் புதிய ஆப்’களை அறிமுகம் செய்து இந்த வெற்றிடத்தை நிரப்பினர்.
சவாலான சூழலில், இந்த ஆண்டு இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த புதுமையான செயலிகளை பார்க்கலாம்:
மித்ரோன் (Mitron app)
இந்தியர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த டிக்டாக் செயலி, தனிநபர் தகவல் சேகரிப்பு, தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட போது, பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால், டிக்டாக் தடை சர்ச்சைக்கு மத்தியில், இந்தியர்களுக்கான டிக்டாக்காக மித்ரோன் செயலி அறிமுகமானது.
அறிமுகமான வேகத்தில் லட்சக்கணக்கில் டவுண்லோடு செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆப், பாகிஸ்தான் டெவலப்பர் ஒருவரிடம் இருந்து வாங்கப்பட்டது உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு உள்ளானாகி, பின்னர் அது சரிசெய்யப்பட்டு டிக்டாக் போலவே எளிதாக குறும் வீடியோக்களை உருவாக்கி பகிரும் வசதிக்காகக் கவனத்தை ஈர்த்தது.
சிங்காரி செயலி (Chingari App )
மித்ரோன் செயலி போலவே, சிங்காரி வீடியோ பகிர்வு செயலியும் வேகமாக பிரபலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டிக்டாக்கிற்கான இந்திய மாற்றுகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்த செயலி கூகுள் பிளேஸ்டோரில் 25 லட்சம் டவுண்லோடுகளை கடந்து வரவேற்பை பெற்றது. பயனாளிகளின் கருத்தும் இந்த செயலிக்கு ஆதரவாக அமைந்தது.
Chingari App
இந்திய டிவிட்டர் ’கூ’ (Koo app)
உலகத்தரமான செயலிகளை உள்ளூரிலேயே உருவாக்க வேண்டும் எனும் கருத்து வலுப்பெற்று வரும் நிலையில், இதற்கு வலு சேர்க்கும் வகையில் ஆகஸ்ட் மாதம் அறிமுகமானது ’koo’ ஆப். டிவிட்டர் போன்ற குறும்பதிவு சேவையான கூ, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் குறும்பதிவுகளை வெளியிட வழி செய்கிறது.
ஏற்கனவே ’வோகல்’ எனும் செயலியை உருவாக்கிய தொழில்முனைவோர்களான அப்ரமேய ராதாகிருஷ்ண மற்றும் மயங்க் பிடாவாட்கா ஆகியோர் இந்திய மொழிகளுக்கான இந்த டிவிட்டர் சேவையை உருவாக்கினர். துவங்கிய வேகத்தில் பிரதமர் மோடி, சத்குரு உள்ளிட்ட பிரபலங்களை பயனாளிகளாகக் கொண்ட இந்த ஆப், ஆத்ம நிர்பார் பாரத் செயலி போட்டியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Mayank Bidawatka and Apramaya R
வீடீயோ சந்திப்பு செயலி (VideoMeet )
கொரோனா தாக்கத்தால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் வீடியோ சந்திப்பு செயலிகள் பிரபலமாயின. சர்வதேச அளவில் ஜூம் செயலி பெரும் வரவேற்பு பெற்றது என்றால், இந்திய செயலியான ’வீடியோமீட்’ கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலி என பெருமிதத்துடன் குறிப்பிட்டுக்கொள்ளும் இந்த செயலி, எச்டி தரத்திலான வீடியோ சந்திப்புக்கு வழி வகுக்கிறது.

இதே போலவே குறும் வீடியோக்களை உருவாக்கி பகிர உதவும் போலோ இந்தியா (Bolo Indya) செயலியும் கவனத்தை ஈர்த்தது. இதே பிரிவில் ரோபோசோ (Roposo) செயலியும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
பைல் ஷேர் செயலி (Bharat Share)
இணையத்தில் கோப்புகளை பரிமாறிக்கொள்ள பயன்பட்டு வந்த ஷேர் இட் போன்ற செயலிகள் தடை செய்யப்பட்ட சீன செயலிகள் பட்டியலில் இடம்பெற்றன. இதனால் கோப்பு பகிர்வுக்கு என்ன செய்வது எனும் கேள்விக்கு பதிலாக இந்திய கோப்பு பகிர்வு செயலியான பாரத்ஷேர் அமைந்தது.
வீடியோ, ஆடியோ கோப்புகள் மற்றும் ஆவணங்களை எளிதாகப் பகிர்ந்து கொள்ள இந்த செயலி வழி செய்கிறது. இந்த ஆப்’ஐ பயன்படுத்த இணைய வசதி கூட தேவையில்லை, வைஃபை இணைப்பே போதுமானது என்பது இன்னும் சிறப்பாக அமைந்தது. அதிவேகத்தில் கோப்புகளை பரிமாறிக்கொள்ள வழி செய்வதாக இந்த செயலி உறுதி அளிக்கிறது.

வேலைவாய்ப்பு செயலி (Apna)
கொரொனா பொது முடக்கம் லட்சக்கணக்கானோரின் வேலையையும் வருமானத்தையும் பறித்து சூழலை மேலும் மோசமாக்கியது. இந்த பின்னணியில் வேலைவாய்ப்பை நாடுபவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் ‘அப்னா’ (Apna) செயலி அறிமுகமானது.
தொழில்முறை பணியாளர்களுக்கான வலைப்பின்னல் தளமான லிங்க்டுஇன் சேவை போல, சாமானிய ஊழியர்களுக்கான வலைப்பின்னல் சேவையாக அப்னா உருவாக்கப்பட்டது. இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பயனாளிகள் தங்களைப்பற்றிய அறிமுகச் சித்திரத்தை உருவாக்கி எளிதாக வேலை தேட இந்த செயலி வழி செய்தது.
ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய நிமிரித் பாரிக் உருவாக்கிய இந்த ஆப், கூகுள் நிறுவனத்தால் ஆண்டில் சிறந்த பயன்சார்ந்த செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஹைக்லாந்து (HikeLand)
இந்திய மெசேஜிங் சேவையான ஹைக், நண்பர்களுடன் இணைந்து திரைப்படம் பார்த்து ரசிப்பதற்கான மெய்நிகர் வசதியை ஹைக்லாந்து எனும் பெயரில் அறிமுகம் செய்தது. ஹைக்லாந்தில் நண்பர்கள் யூடியூப் வீடியோவை சேர்ந்து பார்க்கலாம் என்பதோடு, வீடியோ உரையாடலையும் மேற்கொள்ளலாம்.
ஜோஹோ ஸ்கேனர் (Zoho Scanner)
ஆவணங்களை ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்ய இந்தியர்கள் ‘கேம்ஸ்கேனர்’க்கு பழகி இருந்தனர். ஆனால் தடை செய்யப்பட்ட சீன செயலிகள் பட்டியலில் கேம்ஸ்கேனரும் இருந்தது.

இந்த சூழலில், மென்பொருள் சேவை ஜாம்பவானான ஜோஹோவின் ஜோஹோ டாக் ஸ்கேனர் சேவையை கவனத்தை ஈர்த்தது. ஸ்கேனிங் தொடர்பான அனைத்து வசதிகளையும் கொண்டிருந்த இந்த ஸ்கேனர் சேவையை கொரோனா பாதிப்புக்கு மத்தியில் கட்டணம் இல்லாமல் ஜோஹோ பயன்படுத்த அனுமதித்தது.
ஆரோக்கிய சேது (Aarogya Setu)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க உதவும் வகையில் காண்டாக்ட் டிரேசிங் செயலியான ’ஆரோக்கியசேது’ செயலி இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் செய்த 50 நாட்களுக்குள் இந்த ஆப் 100 மில்லியன் முறைக்கு மேல் டவுண்லோடு செய்யப்பட்டது. இந்த செயலியின் சிறப்பை உலக சுகாதார அமைப்பும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
நிதி நுட்ப செயலிகள்
இவைத்தவிர பங்குச்சந்தைக்கான ‘கைட்’ (Kite Mobile) தனிநபர் நிதிக்கான க்ரோ (Groww) மற்றும் வருமான வரித்தாக்கலுக்கான மைஐடிரிட்டர்ன் (MyITReturn) ஆகிய நிதி நுட்ப செயலிகளும் இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.