‘வாழ்க்கை என்னும் கிரிக்கெட்டை வெல்வது எப்படி?’ - இது தோனியின் தத்துவம்!
கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி பின்பற்றிய நடைமுறைத் தத்துவம், நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிச்சயம் ஏற்றம் தரவல்ல ஒன்று!
‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டில் கேப்டனாக சாதிக்காததே இல்லை என்று கூறிவிடலாம். இருமுறை உலகக் கோப்பையை வென்றது, ஒரு முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்றது, ஐபிஎல் கோப்பைகளை 5 முறை வென்றது என்று ஒரு லீடராக எம்.எஸ்.தோனியின் பெருமை நிலைநாட்டப்பட்டுவிட்டது.
ஆனால், அவரது வெற்றிக்குப் பின்னால் உள்ள தத்துவம் பலரும் அறியாததே. தோனியின் சக்சஸ் தாரக மந்திரம் இதுதான்:
ஒரு செயலின், திட்டத்தின் இறுதி இலக்கு, முடிவு எத்தகையது என்பதைப் பற்றி கவலைப்படாமல், அந்த இலக்கையோ முடிவையோ பற்றி யோசிக்காமல் அந்த நிகழ்முறை அல்லது செயல்முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
‘கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே’ என்று பகவத் கீதை சொல்வதற்கும் இதற்கும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு.
ஒரு விஷயத்தின் முடிவு என்பது இலக்கு. அதை நோக்கியே பிரயாணப்படுகிறோம். ஆனால், முடிவு குறித்த கவலையினால் நாம் செயல்முறையின் ஒழுங்கையும் சீர்த்தன்மையையும் கைவிட்டு விடுகிறோம் அல்லது மறந்து விடுகிறோம்.
இன்றைய உலகம் வெற்றியை நோக்கி ஓய்வு ஒழிச்சலில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது. நிகழ்முறை முக்கியமல்ல; முடிவுதான் முக்கியம் - வெற்றிதான் முக்கியம் என்று செல்லும்போது பல வேளைகளில் அறப்பாதை, நீதியின் பாதையிலிருந்து நாம் விலகி விடுகிறோம்.
ஆஸ்திரேலிய அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பந்தை சேதம் செய்யப்போய்தான் அந்த அணிக்கே பெருத்த அவமானம் நிகழ்ந்தது. தோனியின் தத்துவத்தில் அது கிடையாது. ஒரு முடிவை நோக்கிய பயணத்தில் நிகழ்முறை, செயல்முறைதான் தோனியைப் பொறுத்தவரை சரியாக இருக்க வேண்டும். இதைத்தான் தோனி இப்படி கூறுகிறார்.
“முடிவை விட பலனை விட நிகழ்முறை அல்லது செயல்முறைதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.”
இந்தச் சொற்றொடர் வெறும் அவரது கருத்து அல்ல. மாறாக, தோனி தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும் எடுத்துக்காட்டிய ஓர் ஆழமான கொள்கை.
வெற்றிகள், தோல்விகள் என்னும் மாறக்கூடிய ஒன்று மறைந்து விட்டால், நம் குணாம்சத்தில் நிலையாக நிற்பது வெற்றிகள், தோல்விகள் அல்ல; நிகழ்முறைகள் அல்லது செயல்முறைகளே என்பது புரியவரும். இதுதான் தோனியின் நடைமுறைத் தத்துவம். செயல்முறையே நம் வாழ்வில் அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும்.
வளர்ச்சி மனோநிலையை வளர்த்தெடுத்தல்:
தோனியின் முன்னோக்கிய பார்வை என்பது வளர்ச்சி மனப்பான்மையை வளர்க்கும் யோசனையுடன் ஒத்துப் போகக்கூடாது. நாம் செயல்பாட்டில் கவனம் செலுத்தும்போது, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் நமது திறன்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.
மாறாக, உடனடி முடிவுகளில் நிலைநிறுத்தப்பட்டால் நம் வெற்றி - தோல்வி பற்றிய எண்ணம் நம் செயல்களையே முடக்கி விடும். ஆனால், செயல்முறையில் கவனம் செலுத்தினால் தொடர்ச்சியான கற்றல் மற்றும் முன்னேற்றத்தின் பாதையைத் தழுவுகிறோம்.
மன உறுதியை வளர்த்தல்:
கிரிக்கெட் களம் என்பது வாழ்க்கையின் ஒரு கண்ணாடி எனலாம் அல்லது வாழ்க்கை ஒரு பெரிய கண்ணாடி என்றால், கிரிக்கெட் களம் அதிலிருந்து தெறித்த ஒரு சில்லு என்று கூறலாம். நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது தோனி அதைக் கையாளும் விதம், அவரது நெகிழ்வுத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
செயல்முறையை மதிப்பிடுவதன் மூலம், பின்னடைவுகளில் இருந்து மீண்டு முன்னேறிச் செல்வதற்கான நடைமுறையை நாமும் வளர்த்துக் கொள்ளலாம்.
தோனி தன் லீடர்ஷிப் குணாம்சங்கள் மூலம் அணிக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார். தனிமனித சாதனைகள் முக்கியம்தான். ஆனால், அணியே அவருக்கு பிரதான இலக்கு. செயல்முறைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தினால் குழுவாக ஒத்துழைத்துச் செயல்படுவது, குழுவாக வெற்றியை நோக்கிப் பயணிப்பது போன்ற பண்பாட்டை இந்திய அணியில் வளர்த்தெடுத்துள்ளது.
ஒருவரையொருவர் கைத்தூக்கி விடுவது, சேர்ந்து கற்றல் மற்றும் ஓர் அணியாகத் திரண்டு எழுவது போன்ற தன்மைகள் தோனியின் திறம்பட்ட தலைமைத்துவத்தின் சாராம்சம்.
எப்போதும் நிகழ்முறை அல்லது செயல்முறையில் கவனம் செலுத்துவது சவால்களை முறியடிப்பதிலும் தன் இலக்குப் பாதையில் முன்னேறிச் செல்லும் சந்தோஷங்களை அளிக்கவல்லது என்பது தோனியின் தலைமைத்துவம் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
2007-ம் ஆண்டு இந்திய அணி பெரும் கடினப்பாட்டில் இருந்தது. அப்போது கேப்டன்சியை எடுத்துக் கொண்ட தோனி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்ததோடு 4 ஆண்டுகளில் ஓர் அணியைக் கட்டமைத்து ஐசிசி உலகக் கோப்பையையே கபில்தேவுக்குப் பிறகு வென்று கொடுத்தார். இதன் வெற்றிக்குப் பின்னணியில் தோனியின் ‘செயல்முறை’ பற்றிய கொள்கைதான் பிரதானமாக உள்ளது.
தன்னுடைய இந்தக் கொள்கையை அவர் அணி மீது திணிக்காமல் அணியினரிடத்தில் அந்த எண்ணவோட்டத்தை வளர்த்தெடுப்பதிலேயே இந்த செயல்முறை என்னும் தத்துவத்தை தோனி கடைப்பிடித்தார். அவரது இந்தக் கொள்கை கிரிக்கெட்டையும் தாண்டி வாழ்க்கைப் பாடத்தை நம்மெல்லோருக்கும் கற்றுக் கொடுப்பதாகும்.
புகழ்பெற்ற வங்காள வீதி நாடகாசிரியர் பாதல் சர்க்கார் ஒரு நாடகத்தில், ‘தீர்த்த தலங்கள் முக்கியமல்ல; தீர்த்த யாத்திரைதான் முக்கியம்’ என்று கூறுவது போல் தலங்கள் இலக்கு, பலன் முடிவு என்றால் யாத்திரைதான் தோனி கூறும் ப்ராசஸ்.
ஆகவே, பயணம் முக்கியமே தவிர இலக்கு முக்கியமல்ல. பயணத்தை கட்டமைப்பதில் சரியாக நடந்து கொண்டால், இலக்கு தானாக நம்மை வந்து சேரும்!
மூலம்: Nucleus_AI
தோனியின் சொத்து மதிப்பு என்ன பிசினஸ் முதல் முதலீடு வரை - A டு Z விவரம்...
Edited by Induja Raghunathan