இந்தியாவின் இளம் நீதிபதி ஆகி இருக்கும் 21 வயது ஜெய்பூர் வாலிபர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரைச் சேர்ந்த இளைஞர் 21 வயதில் இந்தப் பொறுப்பை அடைந்தது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர், மயங்க் பிரதாப் சிங், இந்தியாவின் இளம் நீதிபதி ஆகி இருக்கிறார். நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் இளம் நீதிபதியாகி புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரைச் சேர்ந்த மயங்க், சட்டப் படிப்பை முடித்திருக்கிறார். 21 வயதாகும் மயங்க், ராஜஸ்தான் மாநில அரசு நடத்திய நீதித்துறை பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவில் மிக இளம் வயதில் நீதிபதியாகி இருக்கிறார்.
”என்னுடைய வெற்றி உற்சாகம் அளிக்கிறது. முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற எனக்கு ஊக்கம் அளித்த குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என மயங்க எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.
நீதித்துறை பணிகளுக்கான வயது வரம்பு 23 ஆக இருந்தது. எனினும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு, வயது வரம்பை 21 ஆகக் குறைத்தது. இதன் காரணமாக, தன்னால் தேர்வெழுதி வெற்றி பெற முடிந்ததாக கூறும் மயங்க், இது நல்ல முடிவு என்றும், இதன் காரணமாக தன்னால் மேலும் அதிகமானவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.
”குறைந்த பட்ச வயது குறைக்கப்பட்டதாலேயே என்னால் தேர்வில் பங்கேற்க முடிந்தது. இல்லை என்றால் என்னால் தகுதி பெற்றிருக்க முடியாது. இது எனக்கு உதவும் என நினைக்கிறேன். ஏனெனில் கற்றுக்கொள்ள எனக்கு அதிக ஆண்டுகள் கிடைக்கும். இளம் வயதில் பணிக்குச் சேர்ந்ததால் என்னால் அதிகமானவர்களுக்கு உதவ முடியும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்காக தினமும் 12 முதல் 13 மணி நேரம் படித்தததாக, இந்தியா டுடே இணையதளத்திடம் மயங்க் கூறியுள்ளார்.
”நல்ல நீதிபதியாக நேர்மை தான் முக்கியத் தகுதி என்றும், பண பலம் மற்றும் அதிகார பலத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி விடாமல் தான் இருக்கப் போவதாக மயங்க் அவர் கூறியுள்ளார்.