மின் கழிவுகளைக் கொண்டு மின்சார பைக்குகளை உருவாக்கிய குஜராத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி!
குஜராத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 60 வயது விஷ்ணு படேல் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற மனஉறுதியோட மறுசுழற்சி செய்யப்பட்ட மின் கழிவுகளைக் கொண்டு ஏழு மின் வாகனங்களை உருவாக்கியுள்ளார்.
குஜராத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான விஷ்ணு படேல். இவருக்குப் பிறக்கும்போதே காது கேட்கும் திறன் இல்லை. குழந்தைப் பருவத்திலேயே போலியோ பாதிப்பு ஏற்பட்டது. இத்தகைய குறைபாடுகள் இருந்தும் எத்தகைய பயிற்சியோ நிதியுதவியோ இல்லாமல் மறுசுழற்சி செய்யப்பட்ட மின் கழிவுகளைக் கொண்டு மின்சார வாகனங்களை உருவாக்கியுள்ளார்.
விஷ்ணு படேல் இதுவரை இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் என பேட்டரியால் இயங்கும் ஏழு வாகனங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்ததாக ’Republic World’ குறிப்பிடுகிறது.
விஷ்ணு படேலின் மகன் நிகில் படேல் யுவர்ஸ்டோரியுடன் உரையாடுகையில்,
“ஒரு முறை சார்ஜ் செய்தால் பேட்டரியால் இயங்கக்கூடிய எங்களது வாகனம் கார்பன் வெளியேற்றம் இன்றி 35 முதல் 45 கிமீ வரை செல்லும். மேலும் மாற்றுத்திறனாளிகள் வாகனத்தைப் பின்னால் இயக்க சிரமப்படுவார்கள் என்பதால் அதற்கேற்றவாறான கட்டுப்பாட்டு அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறோம்,” என்றார்.
அப்புறப்படுத்தப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள், டிவி ரிமோட்கள், மொபைல் போன்கள், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்தியே படேல் இந்த மின் வாகனங்களை உருவாக்கியுள்ளார். இதுவே இவரது கண்டுபிடிப்பின் தனித்துவமான அம்சமாகும்.
ஏஎன்ஐ உடனான நேர்காணலில் அவர் கூறுகையில்,
”மக்கள் மின் கழிவுகளை தூக்கியெறிகிறார்கள். நான் அதைக் கொண்டு பைக் உருவாக்குகிறேன். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மூன்று சக்கர வாகனங்களை உருவாக்க விரும்புகிறேன்,” என்றார்.
கழிவுப்பொருள்களைக் கொண்டு எவ்வாறு பைக் உருவாக்குவது என்பதை விளக்கும் வீடியோ ஒன்றை படேல் யூட்யூபில் பார்த்தார். அப்போதிருந்து அவருக்கு மின்சார பைக்குகளை உருவாக்கவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. இதுவே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான மின்சார பைக்குகளை உருவாக்கும் பணியில் ஈடுபட ஊக்கமளித்துள்ளது. கடந்த ஏழு மாதங்களாக இந்தப் பணியில் விஷ்ணு ஈடுபட்டுள்ளதாக நிகில் தெரிவித்தார்.
பெரும்பாலானோர் கழிவுகளைக் கொண்டு பல்வேறு கலைப்பொருட்களை உருவாக்குவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் உடல் ரீதியான குறைபாடுகள் இருப்பினும் அதைத் தனது முயற்சிக்கு ஒரு தடையாகக் கருதாமல் எந்தவித நிதியுதவியும் இன்றி இத்தகைய புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கியிருப்பதே இவரது சாதனையாகும்.
கட்டுரை : THINK CHANGE INDIA