'வாழ்வதற்காக கண்ணியத்தை இழக்க வேண்டாம்' - கையால் மலம் அள்ளுவதை மாற்றும் ரோபோடிக் ஸ்டார்ட்-அப்!
துப்புரவுப் பணிகளில் எந்த மனிதனும் தங்கள் உயிரையோ அல்லது கண்ணியத்தையோ பணயம் வைக்க வேண்டிய அவசியமில்லாத எதிர்காலத்தை உருவாக்கும் முனைப்பில், ரோபோடிக் துப்புரவு இயந்திரத்தை உருவாக்கி, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது "ஜென்ரோபோட்டிக்ஸ் இன்னோவெஷன்" ஸ்டார்ட்அப்.
தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்களை நாடு அடையும் அதே வேளை, மனிதாபிமானமற்ற நடைமுறைகளில் ஒன்றான கையால் துப்புரவு செய்து மரணங்கள் நிகழ்வதும் கசப்பான முரண். துப்புரவுப் பணிகளில் எந்த மனிதனும் தங்கள் உயிரையோ அல்லது கண்ணியத்தையோ பணயம் வைக்க வேண்டிய அவசியமில்லாத எதிர்காலத்தை உருவாக்கும் முனைப்பில், ரோபோடிக் துப்புரவு இயந்திரத்தை உருவாக்கி, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது 'ஜென்ரோபோட்டிக்ஸ் இன்னோவெஷன்' (GenRobotics Innovations) ஸ்டார்ட்அப்.
திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்ட நிறுவனத்தின் கண்டுபிடிப்பான பண்டிகூட், முதன்முதலில் கேரளாவில் பயன்படுத்தப்பட்டு, பின் 19 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களை சென்றடைந்துள்ளது.
இன்று, 37 இடங்களில் 300 பண்டிகூட்கள் இயங்குகின்றன. மேலும், 6,000க்கும் மேற்பட்ட மேன்ஹோல்களை சுத்தம் செய்துள்ளன. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் மதக் கூட்டமான மஹாகும்ப மேளாவில், தூய்மையைப் பராமரிக்க இந்நிறுவனத்தின் மூன்று பண்டிகூட் ரோபோக்கள் 24 மணி நேரமும் வேலை செய்தன.

2016ம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோட்டில் சாக்கடையை சுத்தம் செய்கையில், ஏற்பட்ட அசாம்பாவிதத்தில் மூவர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்த நாட்டில், இளம் பொறியாளர்களாக பணிபுரிந்த ரஷீத் கே, அருண் ஜார்ஜ், விமல் கோவிந்த் எம்.கே, மற்றும் நிகில் என்.பி ஆகியோரை இச்சம்பவம் பெரிதும் தாக்கியது.
இந்தியாவின் மிகவும் மனிதாபிமானமற்ற நடைமுறைகளில் ஒன்றான கையால் துப்புரவு செய்வதை நிவர்த்தி செய்வதில் தொழில்நுட்பத்தின் பங்கை மறுபரிசீலனை செய்ய அவர்களை தூண்டியது.
"அதுவரை, மேன்ஹோல் என்றால் என்னவென்று கூட எங்களுக்குத் தெரியாது. எங்கள் கிராமத்தில், மேன்ஹோல் அமைப்பு இல்லை, செப்டிக் டாங்குகள் மட்டுமே இருந்தன. இந்த சம்பவத்தைப் பற்றி நாங்கள் அறிந்தபோது, பிரச்சினையின் அளவையும் பிரச்சினை எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதையும் உணர்ந்தோம்," என்று ரஷீத் நினைவு கூர்ந்தார்.
ஆனால், ஹார்டுவேர் ஸ்டார்ட்அப்கள் வளங்களை மையமாகக் கொண்டவை என்பதால், நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு நண்பர்களுக்கும் ரோபோட்டிக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான நிதியினை சேகரிப்பது சிரமமாக இருந்துள்ளது.
இருப்பினும், முயற்சியினை கைவிடாத அவர்கள், கேரள அரசு உதவியை நாடி, கேரள ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) அளித்த நிதியில் உட்டன் டைப் முன்மாதிரியை வடிவமைத்து அவர்களின் முதல் கருத்துருவின் ஆதாரத்தை (PoC) உருவாக்கினர். KSUM மூலம், அவர்கள் யூனிகார்ன் வென்ச்சர் கேபிட்டலில் இருந்து முதல் சுற்று நிதியைப் பெற்று அவர்களது "பண்டிகூட்" (Bandicoot) என்ற ரோபோடிக் துப்புரவு இயந்திரத்தை உருவாக்கினர்.
2018ம் ஆண்டு கேரள அரசு அவர்களது கண்டுப்பிடிப்பை அங்கீகரித்து, கோவில் நகரமான குருவாயூரில் கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக "பண்டிகூட்"-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதன் அனைத்து செயல்பாட்டு மேன்ஹோல்களையும் சுத்தம் செய்ய ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாட்டின் முதல் மாநிலமாக மாறியது.
முதற்கட்ட கருத்துகளை சேகரித்து மேம்படுத்தப்பட்ட பண்டிகூட்டின் வெர்ஷன் 2.0, அதே ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பண்டிகூட்டிற்கு கிடைத்த அங்கீகாரங்களை தாண்டி, அவை மக்களின் இன்னலை தீர்த்துள்ளது என்பது கண்டுபிடிப்பாளக் குழுவிற்கு மகிழ்ச்சியை அள்ளிதந்தது.
பண்டிகூட் என்றால் என்ன?
பண்டிகூட் என்பது மனித செயல்களைப் பிரதிபலிக்கும் திறன் கொண்ட ஒரு முழுமையான செயல்பாட்டு ரோபோ ஆகும். ரோபோவின் நான்கு கால்கள் மேன்ஹோல்களுக்குள் நிலைத்தன்மையை வழங்குகின்றன. அதே நேரத்தில் அதன் ரோபோ கை அனைத்து மூலைகளிலிருந்தும் கழிவுகளைச் சேகரித்து முழுமையான சுத்தம் செய்வதை உறுதி செய்கிறது. இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் உதவியுடன் ஆபரேட்டர், மேன்ஹோலின் உள்ளே தெளிவாக பார்க்க இயலும். மேலும், விஷ வாயுக்களைக் கண்டறியும் எரிவாயு சென்சாரும் உள்ளது.
"உறிஞ்சும் அமைப்புகள் அல்லது கிராப்பர்கள் போன்ற ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த இயந்திரங்கள் திடக்கழிவுகளைக் கையாளவோ அல்லது மேன்ஹோல்களின் மூலைகளை அடையவோ முடியாததால் அவை பயனற்றவையாக இருந்தன. மனித செயல்களைப் பிரதிபலிப்பதன் மூலமும் திறமையாக சுத்தம் செய்வதன் மூலமும் பண்டிகூட் அதை மாற்றுகிறது," என்றார் ரஷீத்.

Bandicoot
'மேன்ஹோல்' டூ 'மெஷின்ஹோல்'...
"இந்தியாவில் உள்ள 5,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் (ULBs) பண்டிகூட் பயன்படுத்தப்படுவதைக் காண்பதே எங்கள் குறிக்கோள்.
ஜென்ரோபோட்டிக்ஸின் நோக்கம் மனிதர்களின் இடத்தை ரோபோக்களால் மாற்றுவது மட்டுமல்ல; துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றுவது பற்றியது. சமூகத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டு பாகுபாடு காட்டப்படுகிறார்கள். எங்கள் நோக்கம் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. ரோபோக்களால் கையால் துப்புரவு செய்யும் வேலையை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை ரோபோ ஆபரேட்டர்களாக மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது.
"துப்புரவுத் தொழிலாளர்கள் தாங்களாகவே ரோபோக்களை இயக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இதை அடைய, கூகிள் உடன் இணைந்து பண்டிகூடுக்கு ஒரு எளிய பயனர் இடைமுகத்தை உருவாக்கினோம். இதன்மூலம், படிப்பறிவில்லாத நபர்கள் கூட ரோபோவை இயக்க முடியும் என்பதை உறுதி செய்தோம்," என்று பகிர்ந்தார் ரஷீத்.
ஜென்ரோபோடிக்ஸ் இதுவரை 3,000க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மேலும் 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ரோபோ ஆபரேட்டர்களாக மாற்றியுள்ளது. கூடுதலாக, கையால் துப்புரவு செய்வதன் ஆபத்துகள் மற்றும் ரோபோட்டிக்ஸின் நன்மைகள் குறித்து தொழிலாளர்களுக்குக் கல்வி கற்பிக்க இந்தியா முழுவதும் பட்டறைகளை நடத்துகிறது. ஜென்ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் மிக ஆழமான பங்களிப்புகளில் ஒன்று, அவர்கள் ஊக்கப்படுத்திய கலாச்சார மாற்றமாகும்.
"'மேன்ஹோல்' என்ற சொல் இயல்பாகவே ஒரு மனிதன் நுழைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்த மனநிலையை மாற்ற விரும்பினோம். அதற்கு மாற்றாக ரோபோஹோல் என்ற வார்த்தையை பரிந்துரைத்தோம். கடந்த ஆண்டு, இந்திய அரசு 'இயந்திர துளை' (machine hole)என்ற வார்த்தையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இது சமூகக் கருத்துக்களை மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். சுகாதாரப் பணிகளையும் அதில் ஈடுபட்டுள்ள மக்களையும் நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதை மறுவரையறை செய்வதற்கான ஒரு சிறிய ஆனால் சக்திவாய்ந்த படியாகும்," என்றார்.
பண்டிகூட், மேன்ஹோல் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், ஜென்ரோபோடிக்ஸ் அதன் கண்டுபிடிப்புகளை மற்ற முக்கியமான பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (STPs) கிணறுகளை சுத்தம் செய்வதற்காக வில்போர், மேன்ஹோல் சுத்தம் செய்யும் செயல்பாடுகளை நெறிப்படுத்த ஜி-க்ரோ பயன்பாடு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், முதுகுத் தண்டு காயம், பெருமூளை வாதம், விபத்துக்கள் மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்தை மேம்படுத்த AI- தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஜி கெய்டர் ஆகிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியுள்ளது.

"கண்ணியம் ஒரு அடிப்படை உரிமை..."
தொடக்கத்திலிருந்தே, ஜென்ரோபோடிக்ஸ் பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது. அவற்றில் பண்டிகூட் ரோபோடிக் ஸ்கேவெஞ்சரின் கண்டுபிடிப்புக்கான ஸ்வச்சதா ஸ்டார்ட்அப் விருது, அத்துடன் 'புதுமையான தீர்வுக்கு நம்பிக்கைக்குரியது' என்ற அம்ருத் தொழில்நுட்ப சவால் விருது மற்றும் 'உயர் சமூக தாக்கத்துடன் கூடிய புதுமை'க்கான BIRAC கண்டுபிடிப்பாளர் விருது ஆகியவை அடங்கும்.
எந்தவொரு ஸ்டார்ட்அப்பையும் போலவே, ஜென்ரோபோடிக்ஸ் சவால்களை எதிர்கொண்டுள்ளது. விற்பனையாக இருந்தாலும் சரி அல்லது திறமையான குழுவை உருவாக்குவதாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கட்டத்திலும், புதிய சிக்கல்களை எதிர்கொண்டது.
இருப்பினும், ஆனந்த் மஹிந்திரா போன்ற முதலீட்டாளர்களின் ஆதரவும் அரசாங்க அமைப்புகளுடனான கூட்டாண்மைகளும் இந்த தடைகளை கடக்க உதவியுள்ளன. ஜென்ரோபோடிக்ஸ் கூகிளின் முன்னாள் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தனிடமிருந்து சீட் நிதியைப் பெற்றது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிடமிருந்து முன்-தொடர் A நிதியுதவி; மற்றும் ஜோஹோ கார்ப் நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவிடமிருந்து சீட் A நிதியுதவியையும் பெற்றது.
"பண்டிகூட் மற்றும் எங்களது பிற கண்டுபிடிப்புகள் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது தொழில்நுட்பத்தைப் பற்றியது மட்டுமல்ல - கண்ணியம் ஒரு அடிப்படை உரிமையாக இருக்கும் ஒரு உலகத்தை உருவாக்குவது பற்றியது. மனிதகுலத்தின் மிகப்பெரிய சவால்களில் சிலவற்றைத் தீர்ப்பதற்கு தொழில்நுட்பம் முக்கியமானது. ஆனால், அதன் பின்னணியில் உள்ள நோக்கமே உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. யாரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தங்கள் கண்ணியத்தையோ அல்லது பாதுகாப்பையோ சமரசம் செய்ய வேண்டிய அவசியமில்லாத எதிர்காலத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்," என்றார்.