எலான் மஸ்க் SpaceX உடன் கைக்கோர்த்த ஏர்டெல் - இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை!
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்ய, அரசிடம் ஸ்பேஸ் எக்ஸ் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளதாகவும், ஏர்டெல் உடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணைய வசதியை கொண்டு வருவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அரசிடம் ஸ்பேஸ் எக்ஸ் அனுமதி பெறுவதை பொறுத்து இந்தியாவில் ஸ்டார்லிங்க் இண்டெர்நெட் சேவையை அறிமுகம் அமையும்.
இந்த கூட்டு மூலம், ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணையத்தை கொண்டுவர இணைந்து செயல்படும், என இது தொடர்பாக ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதன்படி, ஏர்டெல் தனது விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் சாதனங்களை விற்பனை செய்யலாம், ஸ்டார்லிங்க் சேவைகளை வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கலாம். மேலும், கிராமப்புற பள்ளிகள், சுகாதார மையங்கள், தொலைவான பகுதிகளில் இணைய வசதி அளிக்கவும் இதை பயன்படுத்தலாம்.
ஏர்டெல் நெட்வொர்கிற்கு எப்படி ஆதரவாக இருக்கலாம், என ஸ்பேஸ் எக்ஸும், இந்தியாவில் ஏர்டெல் உள்கட்டமைப்பை எப்படி ஸ்பேஸ் எக்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இரு நிறுவனங்களும் கண்டறியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் ஏற்கனவே, Eutelsat OneWeb நிறுவனத்துடன் இணைந்து செயற்கைகோள் இணைய வசதி அளிக்கிறது. ஸ்டார்ட்லிங்க் வசதியும் இணைவது ஏர்டெல் வீச்சை மேலும் அதிகமாக்க உதவும். தொலைவான பகுதிகளில் உள்ள வர்த்தகங்கள் அதிவேக இணைய இணைப்பு பெற இது வழிவகுக்கும்.
“ஸ்பேஸ் எக் உடன் இணைந்து இந்தியாவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டாட்லிங்க் இணைய வசதி அளிப்பது, முக்கிய மைல்கல்லாக அமைந்து, அடுத்த தலைமுறை இணைய வசதியை அளிக்கும் எங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது,” என பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை தலைவர் கோபால் விட்டல் கூறியுள்ளார்.

"இந்த கூட்டு, இந்தியாவின் தொலைவான பகுதிகளுக்கு கூட, உலகத்தரம் வாய்ந்த அதிவேக இணைய வசதியை கொண்டு வரும் எங்கள் ஆற்றலை மேம்படுத்தி, தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்கள், சமூகம் நல்ல இணைய வசதியை பெறுவதை உறுதி செய்கிறது. எங்கு வசித்தாலும் இந்தியர்களுக்கு நம்பகமான, இணைய வசதியை அளிப்பதற்கான ஏர்டெல் சேவைகள் தொகுப்பிற்கு ஸ்டார்லிங்க் உதவியாக இருக்கும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஏர்டெலுடன் இணைந்து செயல்படுவதிலும், இந்திய மக்களுக்கு ஸ்டார்லிங்க் கொண்டு வரக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை சாத்தியமாக்குவதிலும் உற்சாகம் கொள்கிறோம். ஸ்டார்லிங்க் வாயிலாக வர்த்தகங்களும், அமைப்புகளும், மனிதர்களும் செய்யும் விஷயங்கள் எங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கிறது,” என்று ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் Gwynne Shotwell கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan