அதிவேக சைக்கிளில் உலகை வலம் வந்து சாதனை படைத்துள்ள புனேவைச் சேர்ந்த 20 வயதுப் பெண்!
20 வயதான வேதாங்கி குல்கர்னி ஆசியாவிலேயே அதிவேகமாக சைக்கிளில் உலகை வலம் வந்தவர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். புனே நகரைச் சேர்ந்த இவர், 29,000 கி.மீ தூரம் பயணித்து, சைக்கிளில் உலகை வலம் வந்தவர் என்கிற தகுதியைப் பெற்றுள்ளார்.
ஜூலை மாதம் பெர்த் நகரில் தனது பயணத்தைத் துவங்கிய இவர் இந்தச் சாதனையை நிறைவு செய்யும் விதமாக கடந்த வாரம் ஆஸ்திரேலியா திரும்பினார். 14 நாடுகளில் ஒரு நாளைக்கு 300 கி.மீ பயணம் செய்ததன் மூலம் தன்னிடமும் உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த மற்றும் மோசமான விஷயங்களைத் தெரிந்துகொண்டதாக வேதாங்கி பிடிஐ உடன் உரையாடுகையில் தெரிவித்தார்.
இத்தகைய கடினமான முயற்சியை வெகு சிலரே மேற்கொள்வதாக அவரது அப்பா விவேக் குல்கர்னி கூறினார். 38 வயதான பிரிட்டிஷ் சாகசக்காரர் ஜென்னி கிரஹாம் 2018-ம் ஆண்டில் 124 நாட்களில் சைக்கிளில் உலகை வந்து சாதனை படைத்தார். இதற்கு முந்தைய சாதனையைக் காட்டிலும் மூன்று வாரங்கள் விரைவாக சைக்கிளில் உலகை வலம் வந்து இவர் சாதனையை முறியடித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த வேதாங்கி இந்தப் பயணத்தில் இயற்கையாலும் மனிதர்களாலும் ஏற்பட்ட பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டுள்ளார். கனடாவில் இவரை கொடூரமான கரடி ஒன்று துரத்தியுள்ளது. ரஷ்யாவில் பனி நிறைந்த இரவுகளைப் பெரும்பாலும் தனியாகவே கழித்துள்ளார். ஸ்பெயினில் கத்தி முனையில் இவரிடமிருந்து திருடிச் சென்றுள்ளனர். விசா பெறுவதிலும் சிக்கல்களைச் சந்தித்துள்ளார். இதனால் திட்டமிட்டபடி அவரால் புறப்பட இயலாத சூழல் ஏற்பட்டது. இதன் விளைவாக குளிர்காலம் துவங்கியிருந்த ஐரோப்பாவில் மோசமான வானிலையை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று.
வேதாங்கி யூகே-வின் பார்னேமோத் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேலாண்மைப் பிரிவில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்திற்காக நீண்ட தூரம் சைக்கிளில் செல்வது, பயணத்திற்கு ஏற்ற வடிவமைப்புடன்கூடிய சைக்கிளைப் பெறுவது, செல்லவேண்டிய பாதையையும் நேரத்தையும் முறையாக திட்டமிடல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை இரண்டாண்டுகளுக்கு முன்பு செய்யத் துவங்கியதாக தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் 80 சதவீத தூரத்தை தனியாகவே கடந்துள்ளார். முகாம் அமைக்கத் தேவையானப் பொருட்கள், துணிமணிகள் என அனைத்தையும் அவரே சுமந்து சென்றுள்ளார். பயணம் தொடர்பான செலவுகளை அவரது பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.
வேதாங்கி பெர்த் நகரில் துவங்கி ஆஸ்திரேயா முழுவதும் பயணித்து பிரிஸ்பேன் வந்தடைந்தார். அங்கிருந்து நியூஸிலாந்தின் வெலிங்டன் நகருக்கு விமானத்தில் பயணித்தார். வடக்கிலிருந்து துவங்கி தெற்கு வரை சைக்கிளில் பயணம் செய்தார். பின்னர் கனடாவின் வான்கூவர் பகுதியைக் கடந்து அங்கிருந்து ஹாலிபாக்ஸ் வரை கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
அடுத்ததாக ஐரோப்பாவில் ஐஸ்லாந்து பகுதியில் தனது பயணத்தைத் துவங்கினார். பின்னர் அங்கிருந்து போர்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து வழியாக சைக்கிளில் பயணித்து ரஷ்யா வந்தடைந்தார். அங்கிருந்து இறுதியான 4,000 கி.மீ தொலைவைக் கடக்க இந்தியாவிற்கு விமானத்தில் பயணம் செய்தார்.
வேதாங்கி -20 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பல்வேறு வெப்பநிலையில் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
”என் பெற்றோர் என்னுடன் போனில் தொடர்பில் இருந்தனர். உலகைச் சுற்றிவரும் என்னுடைய பயணத்தில் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டபோதும் என்னுடைய ஆர்வம் குறையாமல் இருக்கும் வகையில் தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் என்னுடைய பெற்றோர் வழங்கினர்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA