‘தப்பா புரிஞ்சிக்கிட்டேன்’ - ஆப்பிள் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த எலான் மஸ்க்!
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்கை நேரில் சந்தித்த எலான் மஸ்க் ஆப் ஸ்டோர் தொடர்பான விவகாரத்தை தவறாக புரிந்து கொண்டதாக தெரிவித்ததாகவும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்ட வாய்ப்பில்லை என்றும் விளக்கம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்கை நேரில் சந்தித்த எலான் மஸ்க், ஆப் ஸ்டோர் தொடர்பான விவகாரத்தை தவறாக புரிந்து கொண்டதாக தெரிவித்ததாகவும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்ட வாய்ப்பில்லை என்றும் விளக்கம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை தடை செய்து விடுவோம் என எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
ட்விட்டரை வாங்கினாலும், வாங்கிய உலகப் பணக்காரர் என்ற அடையாளத்துடன் வலம் வந்த எலான் மஸ்க், இப்போது சர்ச்சை நாயகனாகவே மாறிவிட்டார். ட்விட்டர் நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம், வேலை நேரம் மற்றும் விடுப்பு சம்பந்தமான பிரச்சனைகள், ப்ளூ டிக் பெற மாதம் 8 டாலர்கள் கட்டணம் என அடுத்தடுத்து பரபரப்பான செய்திகளை எலான் மஸ்க் வெளியிட்டு வருகிறார்.
போதாக்குறைக்கு ட்விட்டரில் தன்னை எதிர்த்து பேசிய ஊழியரை பணி நீக்கம் செய்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிவிட்டால், அது உண்மையான சுதந்திரமான கருத்துக்களை பகிரக்கூடிய தளமாக மாறிவிடும் என புகழ்ந்த பலரும், இப்போது அவரை ட்ரோல் கன்டென்ட்டாக அதே ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.
ட்விட்டர் - ஆப்பிள் பிரச்சனை
’ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரை தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிவிடுவேன்’ என பகிரங்க மிரட்டல் விடுப்பதாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தனது ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்குவதற்கான காரணத்தை ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை எனக்கூறியுள்ள எலான் மஸ்க், பேச்சு சுதந்திரத்தை ஆப்பிள் நிறுவனம் வெறுக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஏற்கனவே ட்விட்டர் விளம்பரத்தை ஆப்பிள் நிறுவனம் குறைத்துக்கொண்ட நிலையில், ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிவிடுவோம் என மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்தார். இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய், ஒருவேளை ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்க முடிவெடுத்தால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்குப் போட்டியாக புது ஸ்மார்ட் போனை உருவாக்கவும் தயங்க மாட்டேன், என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் டிம் குக்கை, ட்விட்டர் உரிமையாளரான எலான் மஸ்க் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர் ஆப் ஸ்டோர் தொடர்பான பிரச்சனைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நல்ல உரையாடல். ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்படும் என்ற தவறான புரிதலை சரி செய்துவிட்டோம். ஒருபோதும் ஆப்பிள் நிறுவனம் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என டிம் குக் உறுதிபடுத்தியுள்ளார்,” என பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்கின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடந்த 29ம் தேதி அவர் பதிவிட்ட ட்விட்டர் ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்து ‘அப்போ அதெல்லாம் பொய்யா எலான்’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
‘இதைத் தவிர வேறு வழியில்லை’ - மிரட்டல் விடுத்த ஆப்பிள் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் பதிலடி!