32 வயதில் 10 சொந்த ஜெட்; ரூ.420 கோடி மதிப்பு JetSetGo உருவாக்கிய கனிகா!
வெறும் 32 வயதில் விமானத்தில் டாக்ஸி சேவை வழங்கும் JetSetGo ஏவியேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாகியாக ரூ 420 கோடி சொத்து மதிப்புடன் இளம் தொழில்முனைவராக வலம்வரும் கனிகா டெக்ரிவாலின் கதை.
நான்கு வயதிலிருந்து விமானத்தில் பறக்க எண்ணிய பெண்ணின் கனவை, அவள் பெண் என்பதால் மட்டுமே நிராகரித்து சிறகை கிள்ளியது அவளது குடும்பம். ஆனால், அவளோ விமானத்தில் பறக்க எனக்கு உரிமையில்லை என்றால் என்ன அந்த விமானத்தையே சொந்தமாக்கிக் காட்டுகிறேன் என தனியார் ஜெட்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை தொடங்கி, பெண்களுக்கு வானமே இல்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் கனிகா டெக்ரிவால்.
சமீபத்தில் கார்ப்பரேட் உலகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்ட, ‘கோட்டக் பிரைவேட் பேங்க்கிங் ஹுருன் (Kotak Private Banking Hurun)' பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் பணக்கார பெண்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் பட்டியலில் இளம் வயதிலேயே இடம் பிடித்த கனிகா டேக்ரிவால், இளம் வயதிலேயே சுயமாக தொழில் தொடங்கி வெற்றி கண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
வெறும் 32 வயதில் விமானத்தில் டாக்ஸி சேவை வழங்கும் JetSetGo ஏவியேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக வலம் வருகிறார் கனிகா. பாலினப் பாகுபாடு, புற்றுநோய் உட்பட பல தடைகளை எதிர்த்துப் போராடி சாதித்துக்காட்டிய கனிகாவின் கதை...
JetSetGo கனிகா தொடங்கியது எப்படி?
உபெர் ஆப்பின் வழியாக தற்போது எப்படி கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறோமோ, அதே போன்று விமானச் சேவையை பெறுவதற்கு வழிச் செய்கிறது ஜெட்செட்கோ.
விமானத்தில் டாக்ஸி சேவை வழங்கும் ஸ்டார்ட் அப் இன்றைய தொழில்நுட்பத்திற்கு புதிதாக தெரியாவிட்டாலும், 10 ஆண்டுகளுக்கு முன்பே அதை செயலாக்கிக் காட்டியவர் கனிகா. இன்று ரூ.420 கோடி சொத்து மதிப்புடன் 10 தனியார் ஜெட்களை கொண்டு சக்சஸ்புல்லாய் அவரது நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த பாரம்பரிய மார்வாடி வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் கனிகா டெக்ரிவால். பேங்க் செக்குகளை நிரப்பும் பேனாக்கள், அவ்வப்போது டக் டக் சத்தத்தை எழுப்பும் டைப் ரைட்டர் மிஷின், நிதித் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மத்தியிலே கனிகாவின் குழந்தைப் பருவம் கழிந்தோடியது.
பள்ளிப் படிப்பை முடித்த அவர், கல்லுாரியில் படிக்க சென்றபோதுதான், சிறுவயதில் துளிர்விட்ட பைலட் கனவு விசாலமாகி உள்ளது.
"என்னுடைய 4 வயதில் ஏற்பட்டது பைலட் ஆக வேண்டும் என்ற கனவு. ஆனால், பெண்களை பணிக்குச் செல்ல அனுமதிக்காத ஒரு குடும்பத்தில் பிறந்த எனக்கோ அதற்கான சாத்தியக்கூறுகள் வெகுக் குறைவாக இருந்தன. பைலட் கனவு கலைந்துவிட்டாலும், விமானப் போக்குவரத்தோடு ஒன்றிணைக்க எண்ணி, விமான வடிவமைப்பு படிப்பை மேற்கொள்ள அனுமதிக்குமாறு பெற்றோர்களை வேண்டி கேட்டுக்கொண்டு மும்பைக்கு சென்றேன்.
கல்லுாரி படிப்பின் போது இன்டர்ன்ஷிப்பிற்காக விமான வடிவமைப்பு நிறுவனம் ஒன்றில் பயிற்சி பணியில் சேர்ந்தேன். அதன் நிறுவனரிடம் எனக்குள் இருந்த ஏவியஷன் ஆர்வத்தை பற்றி தெரிவித்தேன். அவர் உடனடியாக என்னிடம் அவருடைய விமான நிறுவனத்தை நிறுவ உதவுவீர்களா என்று கேட்டார். அது தான் இன்றைய நிறுவனத்திற்கானத் தொடக்கம்.
”சிறிது காலம் அங்கு பணிபுரிந்த பிறகு, லண்டனுக்குச் சென்று விமான போக்குவரத்து படிப்பைத் தொடர்ந்தேன். அப்போது எனக்கு 16 வயது, என்று ஆரம்பக் கால நினைவுகளை பகிர்ந்தார் கனிகா.
ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது. ஆம், அவர் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.
கனவுக்கு இடையூறாக வந்த கேன்சர்
"எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன் என்னால் வேலை செய்ய முடியவில்லை. உடனே இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு வருட போராட்டத்திற்குப் பிறகு புற்றுநோயை வென்றேன். அதுதான் ஜெட் செட் கோ-வைத் தொடங்குவதற்கான துாண்டுக்கோலாக இருந்தது. ஏனெனில் வாழ்க்கை எனக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியிருந்தது," என்கிறார்.
கேன்சரில் இருந்து மீண்டு வந்த கனிகா, மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். பல்வேறு நிறுவனங்களில் பணி வேண்டி விண்ணப்பித்தார். ஆனால், அனைத்து நிறுவனங்களும் கனிகாவினை பணியில் அமர்த்த மறுத்தனர்.
"நான் மீண்டும் நோய்வாய்ப்படுவேன் அல்லது புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளதால் இறந்துவிடுவேன் என்று எண்ணி எனக்கு வேலை கொடுக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டின. அப்போதுதான் நான் சொந்தமாக ஏதாவது தொடங்க முடிவு செய்தேன். விமான டிக்கெட்களை ஆன்லைனில் புக்கிங் செய்யும் பிளாட்ஃபார்ம்-ஐத் தொடங்கினேன்.
அதற்கு, திடீரென்று சிந்தையில் எட்டிய Jet Set Go என்ற பெயரைச் சூட்டி ஒரு டிஷ்யூ பேப்பரிலே லோகோவை வரைந்தேன். நன்தொடக்கத்திற்கு அப்பெயர் நன்றாகயிருந்தது. பணக்கார விமான உரிமையாளர்கள் அவர்களது விமானங்களை பட்டியலிடுவார்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் தளத்திலிருந்து முன்பதிவு செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால்,
"பைலட் வராததால் எங்கள் முதல் விமானம் புறப்படவே இல்லை. அப்போது தான், முன்பதிவு தளம் பாதி பிரச்சினைகளை மட்டுமே தீர்க்கும் என்பதை உணர்ந்தேன். மெதுவாக, நாங்கள் ஒரு விமான மேலாண்மை நிறுவனமாக மாறினோம். எங்கள் பட்டயத் தேவை கிடைக்கக்கூடிய சப்ளையை மீறியதும், நாங்கள் எங்கள் சொந்த விமானங்களை வாங்க முடிவு செய்தோம்,” எனும் கனிகா தனியார் விமானத் துறையில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்யும் வேட்கையில் இறங்கினார்.
"தனியார் ஜெட் விமானத்தில் ஒருவர் பறக்க விரும்பினால் அவர் ஒரு தரகர் அல்லது ஆபரேட்டரையே அணுக வேண்டும். அவர்கள் வாடிக்கையாளரின் தேவையில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக அதிகபட்ச கமிஷன் கிடைக்கக்கூடிய ஜெட் அல்லது ஹெலிகாப்டரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை இல்லாததாலும், வாடகைக்கு விமானங்கள் கிடைக்காததாலும், வாடிக்கையாளர்கள் அதிகபட்ச தொகையை செலுத்து வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்," என்று கனிகா இந்தியா டைம்ஸ் செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
விமானப் போக்குவரத்துத்துறையில் நிலவும் இச்சிக்கலை நன்கு கணித்த கனிகா, மலிவான விலையில் அனைவருக்கும் பலனிக்கும் வகையிலான பிளைட் சார்ட் சேவை நிறுவனத்தை தொடங்கினார்.
விமானங்கள்/ ஜெட்களுக்கான ஓலா, உபெர் தான் JetSetGo
உபெர் ஆப்'பின் வழியாக தற்போது கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறோமோ, அதே போன்று விமானச் சேவையை பெறுவதற்கு வழிச் செய்கிறது ஜெட்செட்கோ. விமானத்தில் டாக்ஸி சேவை என்பது கோவிட்டுக்கு முன்பு வரை லக்சரியான ஒன்றாக தெரிந்த நிலையில், கோவிட் தொற்று அந்த எண்ணைத்தை தலைகீழாக மாற்றியுள்ளது என்கிறார் கனிகா.
"கோவிட்டுக்கு முன்பு வரை தனி ஜெட்களில் பயணிப்பது ஆடம்பரத்தின் வெளிப்பாடாக இருந்தது. தொற்றுக்காலம் மக்களின் இக்கருத்தை மாற்றியமைத்துள்ளது. இப்போது இது ஆரோக்கியம் மற்றும் பிரைவேசிக்காகனது என்று நார்மல் பயணங்களுள் ஒன்றாகிவிட்டது. பெரும்பாலும் வணிக நோக்கங்களுக்காகவும், வணிகர்களுமே வாடகை விமானங்களை நாடி வந்தநிலையில், இப்போது தனிநபர்களும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
ஒரு வாடிக்கையாளர் அவரது தாயின் 40வது பிறந்தநாளைக் கொண்டாட வாடகை விமானத்தை கோரினார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ ஆகாயத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் அரங்கேறியது, எனும் அவர் ஜெட் செட் கோவின் சிஇஓ- ஆகும் பாதையை எளிதில் கடந்துவிடவில்லை.
"எங்கள் நிறுவனத்திற்காக நாங்கள் ஒரு ஆப்பை உருவாக்கியபோது, அது ஒரு கேமிங் ஆப் என்று என் தந்தை கேலி செய்தார். யாருமே நான் மேற்கொள்ளும் செயலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
என்னுடைய முதல் விற்பனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு பெரிய கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தேன். அந்த அறைக்குள் நுழைந்த கடைசி நபர் நான் தான் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
அவர்களில் ஒருவர் என்னைப் பார்த்து, 'எக்ஸ் க்யூஸ் மீ மிஸ், அனைவருக்கும் டீ மற்றும் காபி வழங்க முடியுமா?' என்று கேட்டார். அதைக் கேட்டு எனக்கு அழுகைப் பெருக்கெடுத்தது. ஆனால், நான் தைரியத்தை வரவழைத்து, நான் எதற்காக அங்கு வந்திருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன், என்று பகிர்ந்த அவர், இன்று பரீட்சயமற்றவர்களுக்கும் பரீட்சயமான முகமாக மாறியுளர்ளார்.
ஏணியின் உச்சத்தை அடைந்தாலும் கனிகாவால் ஒவ்வொரு நாளையும் கொண்டாட்ட தினமாக கடக்க முடியவில்லை. அவ்வாறான நாட்களில் சுய ஊக்கமே அவருடைய தாரக மந்திரமாக இருந்துள்ளது.
"சில நாட்கள் மிகவும் கடினமாக இருக்கும். விடியும் பொழுதே மோசமான வானிலை, வாடிக்கையாளர்களது பிரச்சினை, கேட்டரிங் பிரச்சினை என ஏதொவொரு சிக்கலுடன் தான் விடியும். துரதிர்ஷ்டவசமாக, ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்கள் இதுபோன்ற பிரச்சினைகளுடன் விடியும் நாட்களாக இருந்தன. அந்த நாட்களை எதிர்கொள்வது கடினமாக இருப்பினும், முகத்தில் புன்னகையுடனே பெட்-ஐ விட்டு எழுவேன். ஏனெனில், நான் தொடந்து செயல்பட வேண்டும். நான் இதை நேசிப்பதாலும், உலகை மாற்ற விரும்புவதாலும் இப்பணியைச் செய்கிறேன் என்பதை எனக்கு நானே நினைவூட்டுவதற்கு நிறைய சுய உந்துதல் தேவைப்படும்," என்று கூறி முடித்தார் கனிகா.
படங்கள் உதவி : ஃபெமினா