ஐஏஎஸ் பயிற்சி செல்லமுடியா வறுமை, பார்ட் டைம் வேலையுடன் படிப்பு: இலக்கை அடைந்த நிஷாந்த் ஜெயின்!
ஹிந்தி மீடியத்தில் கல்வியை பயின்று, கலெக்டர் ஆகும் கனவுடன் தொடர்ந்து உழைத்த சாதாரண குடும்பத்தில் பிறந்த நிஷாந்த் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன் நாயகனாக விளங்குகிறார்!
“நீங்கள் ஏதோவொன்றை தீவிரமாய் அடைய வேண்டுமென முடிவெடுத்து விட்டீர்களெனில், அதற்கான பாதையில் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை இறுகப்பற்றி தொடர்ந்து முன்னேறுங்கள், பின்னர் முழு பிரபஞ்சமும் உங்களுக்கு உதவ முன்வரும்” - பிரேசிலிய எழுத்தாளரான பாலோ கோயோஹோவின் புகழ்பெற்ற புத்தகமான ‘இரசவாதி’யில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வாசகம், பெரும்போராட்டத்துக்கு பிறகு வெற்றியை பெற்ற ஐஏஎஸ் நிஷாந்த் ஜெயினுக்கு பூரணமாய் பொருந்தும்.
உத்திரபிரதேசத்தின் மீராட் பகுதியைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பய்யனாக பிறந்து, கல்வி எனும் ஒற்றை வார்த்தை மந்திரத்தால் இன்று கலெக்டராகி, ஐஏஎஸ் கனவோடு காத்திருக்கும் இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் நாயகனாக விளங்குகிறார் அவர்.
“நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். என் தாத்தா நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அதிகாரியாக பணியாற்றினார். அவர் மிகவும் நேர்மையானவர். வீட்டிலிருந்தே சாப்பாட்டை எடுத்துக் சென்று, நடந்தே பணிக்கு சென்று, திரும்புவார். நான்கு சகோதரர்களுள் இரண்டாவதாக பிறந்த என் தந்தை பத்தாவது வரை படித்திருந்தார். என்னை படிக்க வைக்கவும் என் தந்தை பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஒரு சாதரணமான நடுத்தர குடும்பத்தின் நிலையறிந்து வளர்ந்தவன்.”
எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் காலத்தில் ரேஷன் கடைக்கு அடிக்கடி செல்வேன். அப்போ, ரேஷன்கடைக்காரர் பல நாள் கடையை திறந்திருக்கமாட்டார். இதுபோன்ற ஒழுங்கினமான அதிகாரிகளை திருத்தம் செய்யும் அதிகாரம் ஒரு அதிகாரிக்கு உண்டெனில், அந்த அதிகாரியாக நான் ஆக வேண்டும் என்று அம்மா, அப்பாவிடம் அப்போது சொல்வேன்.” என்று அவரது சிறுபால்ய வாழ்க்கையை பற்றி பகிரத்தொடங்கினார் நிஷாந்த்.
பருவ வயதில் இருந்தே செய்தித்தாள் வாசிக்கும்பழக்கம் கொண்ட நிஷாந்த், மீராட் மாவட்ட கலெக்டராக இருந்த ஸ்ரீ அவ்னீஷ் அவஸ்தி குறித்த செய்திகளை தேடித்தேடி படித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவராலும், அவரது முன்னேற்றம் மிக்கச் செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்ட நிஷாந்த் அவரும் அதுபோன்ற நன்காரியங்களை மக்களுக்கு செய்யும் அதிகாரியாக வேண்டும் என்று தீர்மானித்துள்ளார்.
அப்படியொரு அதிகாரியாக வேண்டும் என்றால் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அது மிகக் கடினமான தேர்வு என்றும் நிஷாந்தின் அண்ணன் தெரிவித்துள்ளார். கலெக்டர் ஆக வேண்டும் என்றால் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்ற தகவலே நிஷாந்தனுக்கு அப்போது தான் தெரியும். ஆனால், அதை தகவலாக மட்டுமே கருதி அதை அவர் கடந்துவிடவில்லை. நிச்சயம், கலெக்டராகுவேன் என மனதுள் உறுதி எடுத்துள்ளார்.
இன்று, தனக்குத் தானே விட்ட சவாலில் வெற்றியும் அடைந்துள்ளார். ஆம், 2014ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 13வது இடத்தில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார் நிஷாந்த். பள்ளிப்படிப்பை முடித்து எதிர்காலம் குறித்த பெரும் கனவுகளோடு இருந்த நிஷாந்திற்கு தடையாக நின்றது குடும்பச் சூழல்.
“என் கனவுகள் பெரியதாக இருந்தன, ஆனால் பொருளாதார பிரச்சினைகள் அதற்கு இடைமறித்து நின்றன. என் நண்பர்கள் அனைவரும் சிஏ படிப்பை தேர்ந்தெடுக்கும் போதும், நான் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தேன். அது மட்டுமின்றி டில்லி அல்லது அலகாபாத் பல்கலைகழகங்களில் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தினைகூட நான் ஏற்படுத்தி கொண்டதில்லை. ஏனெனில், வீட்டை விட்டு கல்லூரி வளாகத்திலோ அல்லது கல்லூரி அருகில் தங்கி படிப்பது என்பது காஸ்ட்லியான ஒன்று. பி.ஏ ஆங்கிலம், வரலாறு மற்றும் பொலிடிக்கல் சைன்ஸ் என்று மூன்று பட்டப்படிப்புகளை படித்தேன். கல்லூரியில் படித்த சமயத்தில் படிப்பு செலவுகளை பார்த்து கொள்ள பார்ட் டைம் வேலையும் செய்தேன். பின்பே அரசு பொதுத் தேர்வை நோக்கமாக கொண்டு படிக்க ஆரம்பித்தேன்,” என்று பகிர்ந்தார்.
2013ம் ஆண்டில், யூனியன் பொது சேவை ஆணைக்குழுவின், சிவில் சர்வீஸ் ப்ரீலில்ஸ் பரீட்சை மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிசிஎஸ் தேர்வுகளில் பங்கேற்றுள்ளார். அதுவரை, பள்ளியில் தொடங்கி அரசு பொதுத் தேர்வு வரை எந்த தேர்வு என்றாலும் அதிக மதிப்பெண் எடுத்தே தேர்ச்சி பெற்று வந்தார். ஆனால், இம்முறை அப்படியாக நடக்கவில்லை. இரண்டு பரீட்சைகளிலும் 2 முதல் 5 மதிப்பெண்களில் தோல்வி அடைந்தார்.
“ஒருவேளை என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் முதல் தோல்வி என்பதாலோ, என் கனவுகள் எல்லாம் உடைந்து போனதை போன்று உணர்ந்தேன். முழுநம்பிக்கையும் இழந்து மனச்சோர்வு அடைந்து என் தோல்வியை என்னால் கையாள முடியவில்லை. உண்மையில், எனது தொழிற்பயணத்தில் மிகவும் கடினமான நாட்கள் அவை. குழப்ப நிலையிலே அலைந்து அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற அச்சம் தொற்றி கொண்டது. ஆனால், அத்தோல்வியிலிருந்து என்னை குடும்பத்தாரும், நண்பர்களும் மீட்டெடுத்தனர். என்மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை விட அதிக நம்பிக்கை வைத்திருந்த என் குடும்பத்திற்கு மகிழ்ச்சி தரும்விதமாக லோக்சபாவில் மொழிப்பாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற செய்தி கிடைத்தது.”
அப்பணி நிஷாந்திற்கு பல படிப்பினைகளை கற்றுதந்துடன், யுபிஎஸ்சி தேர்விற்கு படிப்பதற்கான போதுமான நேரத்தையும் வழங்கியது. 2014ம் ஆண்டு மறுமுயற்சியாய் யுபிஎஸ்சி மற்றும் உ.பி பிசிஎஸ் ப்ரீலிம்ஸ் தேர்வுகளை முடித்து, அடுத்த ஒரு மாத இடைவேளையிலிலே இரண்டிற்குமான மெயின் தேர்வுகளையும் எதிர்கொண்டு நேர்காணல் அழைப்புக்காக காத்திருந்தார். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்காக்கும் தேர்வாகினார்.
“வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் நாமும் வெற்றி அடைந்து விடமாட்டோமா என்கிற ஏக்கம் என்னை நிற்க வைக்கவில்லை. 2014ம் ஆண்டு யுபிஎஸ்சி மற்றும் உ.பி பிசிஎஸ் ப்ரீலிம்ஸ் தேர்வு எழுதி அடுத்த மாதமே இரண்டிற்குமான முதன்மை தேர்வுகளையும் சந்தித்தேன். அதில் யுபிஎஸ்சி தேர்வுக்கிற்கான நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிலையில் உ.பி பிசிஎஸ் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடவில்லை. அதனால், 2015ம் ஆண்டுக்கான உ.பி பிசிஎஸ் ப்ரீலிம்ஸ் தேர்வும் எழுத, அதற்கான மெயின் தேர்வும், கடந்த ஆண்டுக்கான உ.பி பிசிஎஸ் இன்டர்வியூவும் ஒரே சமயத்தில் நடந்தேறியது. அதற்கு மறுநாள் யுபிஎஸ்சி நேர்காணல் முடிவுகள் என ஓடிக்கொண்டே இருந்த நாட்கள் அது,” எனும் அவர் அரசு தேர்வுகளை
என்னை விட என் குடும்பத்தாருக்கு பயங்கர டென்ஷன். எந்நேரமும் ரிசல்ட் வெளியாகலாம் என்ற நிலையில், தரவரிசை பட்டியலில் 13வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். அதிலும் முதன்மை தேர்வில் 851மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதன்மை தேர்வில் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். வாழ்த்துகள் நிஷாந்த் வெகு காலங்களை காத்துக்கிடந்த தினமும் வந்தது.
“இத்தனை ஆண்டு உழைப்புக்கு பலன் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க, பாராட்டு விழாவில் லோக்சபா சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் மற்றும் லோக்சபாவில் பணியாற்றிய அனைவரும் விழாவுக்கு வந்தனர். அது தனிப் பட்ட ஒரு மனிதருக்கு கிடைத்த மரியாதை அன்று. ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சிய கனவோடு உழைத்து சாதனை படைத்த சாதாரண பின்னணியிலிருந்து வந்த மனிதனுக்காக அளிக்கப்பட்ட கௌரவம் அது,” என்றார்.
தகவல் மற்றும் படங்கள் உதவி : www.insightsonindia.com