30000 சதுர அடி கட்டிடம்; 15ஆயிரம் ஊழியர்கள், 49 லிப்ட்கள்: இந்தியாவில் திறக்கப்பட்ட உலகின் பிரம்மாண்ட அமேசான் அலுவலகம்!
சுமார் 68 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகம், 24 மணி நேர உணவகம், ஹெலிபேட் வசதி, சுற்றி 300 மரங்கள் என சகல வசதிகளுடன் பிரம்மண்டமாய் உயர்ந்து நிற்கிறது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அலுவலகத்தை திறந்துள்ளது. 15000 ஊழியர்கள் பணிபுரியும் அளவிற்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உலகில் மிகப்பெரிய அமேசான் நிறுவன கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
1566759957447.jpg?fm=png&auto=format&w=800)
இந்தியாவில் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த, வேலை வாய்ப்பினையும் வழங்க இந்த பிரம்மாண்ட அலுவலகத்தை நிறுவியுள்ளது அமேசான். ஹைதராபாத்தில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி மிகப்பெரிய வர்த்தக மையத்தை கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியது அமேசான் நிறுவனம்.
30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இதில், அலுவலகம் மட்டும் 18 ஆயிரம் சதுரஅடி கொண்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21 ஆம் தேதி திறப்புவிழா நடைபெற்றது.
இந்திய அளவில் மற்ற நகரங்களிலும் சேர்த்து நேரடியாக, 62,000 க்கும் மேலான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் ஹைதராபாத்தில் அலுவலகத்தில் இருந்து மட்டும் 15000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரே இடத்தில் அமேசான் நிறுவனம் கட்டியுள்ள உலகளவிலான மிகப்பெரிய கட்டிடம் இது.
9.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் அலுவலகத்தைத் தாண்டி தொழுகை அறை, தாய்களுக்கான அறை, சற்று ஓய்வெடுக்க அமைதிக்கான அறை, குளியல் அறை என ஊழியர்களுக்கு சகல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கேன்டீனும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ஒரே சமையத்தில் 49 அதிவேக மின்தூக்கிகள் 972 ஊழியர்களைத் தாங்கிச் செல்லும் விதம் அமைக்கப்பட்டுள்ளது.
இவைகளைத் தாண்டி கட்டிடத்தின் மேல் ஹெலிகாப்டர் தரையிறங்க ஹெலிபேட், கட்டிடத்தைச் சுற்றி 300 மரங்கள், 8.5 லட்சம் லிட்டர் நீர் மறுசுழற்சி செய்யும் ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது.
1566760036372.jpg?fm=png&auto=format&w=800)
சீனாவை தொடர்ந்து மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு இந்தியா, இதனால் பல வர்த்தகர்கள் போட்டிப்போட்டு கொண்டு இந்தியாவில் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டை வால்மார்ட் நிறுவனம் 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது; அதேபோல் இன்று அமேசான் இந்தியாவில் அதிக முதலீடை செய்ய முன்வந்துள்ளது.

ஹைதராபாத் அலுவலகம் திறந்ததுபோல, சென்னை உட்பட மேலும் புதிய இடங்களில் டெலிவரி சென்டர்களை தொடங்க உள்ளதாகவும், அமேசான் குறிப்பிட்டுள்ளது.