World Malaria Day - மலேரியா நோய் வராமல் தடுக்க டாக்டர் கூறும் ஆலோசனைகள்!
இன்று உலக மலேரியா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மலேரியாவில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி என பிரபல மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் சில அறிவுறைகளை வழங்கியுள்ளார்.
இன்று 'உலக மலேரியா தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மலேரியாவில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி என பிரபல Internal Medicine மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் சில அறிவுறைகளை வழங்கியுள்ளார்.
உலக மலேரியா தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று, உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று மலேரியாவிற்கான சிகிச்சை முறைகளில் பல்வேறு முன்னேற்றங்கள் எட்டப்பட்டாலும், மருத்துவத்துறைக்கு சவாலாகவே உள்ளது. உலகளவில் மலேரியாவால் இதுவரை 229 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 லட்சத்து 19 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர் என்கிறது தரவுகள்.

எனவே தான், மலேரியாவை எதிர்த்துப் போராட, உலக சுகாதார அமைப்பு (WHO) வளரும் நாடுகளில் பல்வேறு உத்திகளை செயல்படுத்தியுள்ளது. மலேரியா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக ’உலக மலேரியா தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சர்வதேச தினம் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் அதிக முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வாய்ப்பாகும். உலக மலேரியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது, மலேரியாவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்கவும், நோயினால் பாதிக்கப்பட்டோர் அனுபவிக்கும் சிரமங்கள் மற்றும் இறப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
மலேரியா பாதிப்பு:
மலேரியா என்பது பிளாஸ்மோடியம் குழுவின் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும், இது பாதிக்கப்பட்ட அனோபிலிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. மலேரியாவை தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும் என்றாலும் அது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கக்கூடிய வியாதியாக உள்ளது.
இந்தியாவில் பருவ மழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் "மலேரியா பருவம்" என்று கருதப்படுகிறது. ஏனெனில்,, இந்த மாதங்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் அதிக அளவிலான மலேரியா தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்
இதுகுறித்து மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் கூறுகையில்,
“இந்த உலக மலேரியா தினத்தில், மலேரியா அதிகரிப்பதை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் முயற்சிக்க வேண்டும். அதிகரித்து வரும் மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மற்றும் தங்களை ஆரோக்கியமாக காத்துக்கொள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நம்மில் இருந்து தொடங்கும் சின்ன சின்ன மாற்றங்கள் தான் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்கிறார்.
மலேரியா அறிகுறிகள் என்னென்ன?
மலேரியாவைக் கண்டறிவதற்கு கீழே உள்ள அறிகுறிகள் முக்கியமானவை,
- காய்ச்சல்
- சோம்பல்
- தலைவலி அல்லது தலை பாரம்
- வயிற்றுப்போக்கு
- மூட்டு மற்றும் தசைகளில் வலி
- இருமல்
- வாந்தி மற்றும் குமட்டல்
- குளிர், நடுக்கம்
- வயிற்று வலி
- இதயத் துடிப்பு அதிகரிப்பு
- வேகமான சுவாசம்

மலேரியாவை தடுக்கும் வழிமுறைகள்:
மலேரியாவுக்கு தடுப்பூசி போடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க உதவுவதாக மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் கூறியுள்ளார்.
- கொசு கடித்தால் பொதுவாக மலேரியா பரவுகிறது. இதைத் தடுப்பதற்கான எளிதான வழி உங்களின் வெளிப்படும் உடல் பாகங்களை மூடி வைப்பதுதான். நீங்கள் மலேரியா பரவியுள்ள பகுதியில் பயணம் செய்தாலோ அல்லது வசிச்சாலோ, இது கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது.
- பொதுவாக மலேரியா, டெங்கு உள்ளிட்ட கொசுவால் ஏற்படக்கூடிய நோய்களை தடுக்க கொசு விரட்டிகள் பயன்படுகின்றன. ஆனால், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள இடத்தில் கொசுவிரட்டிகளை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கொசு வலையை பயன்படுத்துவதோடு, மருத்துவர் பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.
- அதேபோல், பொது வெளிகளில் கொசு தொந்தரவு அதிகமிருக்கும் என்பதால், உடலை முற்றிலும் கவர் செய்யும் ஆடைகளை அணிவதோடு, ஆடைகள் மீது தடவக்கூடிய வகையிலான கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்.
தொகுப்பு- கனிமொழி

World Liver Day: கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க நாம் செய்யவேண்டியவை என்ன?