‘ஒரு கையில் லேப்டாப்; மறு கையில் கலப்பை’ - கடலூர் கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் ஐடி பொறியாளர்!
சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஜீவிதா, உணவுப் பொருட்கள் பெரும்பாலும் ரசாயனங்கள் கலந்த பயிரில் விளைவிக்கப்படுவதால் ஏற்படும் நோய் பிரச்சனையை உணர்ந்து கடலூர் அருகே சிறுபாக்கம் கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
பெரும்பாலும் இப்போது நாம் உண்ணுகிற உணவு முழுவதும் ரசாயனமயமாக்கப்பட்ட உணவுகளாகவே உள்ளது. ஒரு பயிர் வளர்வதற்கு பல்வேறு விதமான ரசாயனங்களை நாம் பயன்படுத்தி வருவதை எல்லோரும் அறிவோம். அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்து போவதுடன் பல புதிய புதிய நோய்கள் உற்பத்தியாகின்றன.
சம்பாதிக்கிற பணத்தில் பெரும்பாலும் மருத்துவத்திற்கே செலவு செய்யக்கூடிய அளவு சூழ்நிலையை ரசாயத்தால் விளைவிக்கப்படும் பயிர்கள், அதை நம் உணவாக உண்ணுவதால் ஏற்படுகின்ற விளைவு ஆகும். இதை மாற்ற வேண்டும் என்று சொன்னால் ரசாயனத்தை தவிர்க்க வேண்டும்.
ஆனால், இன்று 90 சதவீதத்திற்கு மேல் ரசாயனம் கலந்த உணவுப் பொருள்கள் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. கிராமப்புறங்களில் இயற்கையாக உணவு தயாரித்து வந்த நிலையில், அங்கும் இப்போது முழுமையாக ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலை இப்படியே போனால் பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாவது உறுதி என்கிற இந்த நிலையில் தான் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சென்னையில் பணியாற்றும் பெண் ஜீவிதா சேகர் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள திட்டமிட்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தில் நான்கு ஏக்கர் விலை நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.

இயற்கை விவசாய நிலத்தில் ஜீவிதா சேகர்
ரசாயனம் இல்லா உணவினை உலகுக்கு வழங்க விரும்பும் ஜீவிதா
ஜீவிதாவுக்கு பூர்வீகமாக நிலங்கள் ஏதுமில்லை. விவசாயத்தைப் பற்றி தனக்கும் தன் குடும்பத்தாருக்கு பெரிதாக எதுவும் தெரியாது, என்கிறார். அப்பா சேகர் ஒரு பள்ளி ஆசிரியர் இரண்டு பெண்கள் ஒரு ஆண் பிள்ளை அந்த குடும்பத்தில். அப்பாவின் கனவெல்லாம் பிள்ளைகள் படித்து ஏதாவது ஒரு வேலைக்கு சென்று தங்களுடைய வறுமையை போக்க வேண்டும் என்பதுதான்.
அப்படித்தான் தன் முதல் பெண்ணை பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார். அதற்குப் பிறகு உடல் நலக் கோளாறு காரணமாக தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து அம்மா அமுதா தான் குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஜீவிதா சேகரும் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் அரசுப் பள்ளியில் பயின்றவர் ஜீவிதா. காஞ்சிபுரம் கல்லூரியில் பிஎஸ்சி சமஸ்கிருதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவுகளில் சேர்க்கப்பட்டு பயின்று வந்துள்ளார். நல்ல மதிப்பெண் எடுத்த நிலையில் கல்லூரி தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த பின்னர், ராஜஸ்தானில் உள்ள ஒரு கல்லூரியில் எம் எஸ் பயின்றுள்ளார் ஜீவிதா.
அதன் பின்னர், சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து வருமானம் ஈட்ட தொடங்கியுள்ளார். இந்த நிலையில் சீனிவாசன் என்பவரை ஜீவிதா திருமணம் செய்துள்ளார். அவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறவர். தொடர்ந்து ஐடி நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஜீவிதா, விவசாயத்தின் மீது அக்கறை ஏற்பட்டு விவசாயம் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்
அது பற்றி ஜீவிதா சொல்ல கேட்கலாம்...

ஐடி அலுவலகத்தில் ஜீவிதா
50 லட்சம் செலவு செய்து இயற்கை விவசாயத்தில் ஜீவிதா
அப்பா ஆசிரியர் அம்மா குடும்பத் தலைவி இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் எல்லோரும் படித்து ஒவ்வொருவராக ஒரு வேலைக்கு போனோம். அக்கா ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். தம்பி மெரைன் இன்ஜினியர். நானும் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நல்ல வருமானம் மாதம் இரண்டு லட்ச ரூபாய் வரை எனக்கு சம்பளம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இயற்கை மீது எனக்கு ஏற்பட்டது அந்த ஈர்ப்பு.
”உணவுப் பொருட்கள் பெரும்பாலும் ரசாயன மயமாக்கப்பட்டு உண்ணப்படுவதால் ஏற்படுகிற நோய் பிரச்சனையை நாம் அதிகம் சந்தித்து வருகிறோம். எனவே, தான் செயற்கையாக தயாராகும் உணவுகளை விடுத்து இயற்கையாக ரசாயனம் பயன்படுத்தி உணவுகளை தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் மேலோங்கியது. அதுதான் எனக்கு விவசாயத்தின் மீது ஒரு நாட்டத்தை ஏற்படுத்தியது,” என்கிறார்.
நான் பலரிடம் இப்படி விவசாயம் செய்வது பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய தம்பி மாமனார் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் என்கிற கிராமத்தில் நிலம் விற்பனைக்கு இருப்பதாகச் சொன்னார். எனக்கும் வீட்டிலிருந்தபடியே தான் வேலையும்.
எனவே, ஏன் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது விவசாயமும் செய்யக்கூடாது? எனத் தோன்றியது அந்த நிலத்தை வாங்குவது என முடிவு செய்தோம். ரூபாய் 40 லட்சத்திற்கு மேலாக செலவு செய்து அந்த நிலத்தை வாங்கினோம். இந்த நிலத்தை வாங்குகின்ற போது வெறும் புதற்காடுகளாகவே காட்சியளித்தது இது எப்படி சீராக்கப் போகிறோம் என்கிற சந்தேகம் எனக்குள்ளும் இருந்தது அதைவிட ஊர் மக்கள் இதை வேடிக்கையாக பார்த்தனர்.
இவர்கள் எப்படி நிலத்தை சரி செய்யப்போகிறார்கள் என்று பார்த்தனர். நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை மேம்படுத்தும் வேலையை தொடங்கினோம். அப்போதுதான் இந்த நிலத்தில் ஒரு கிணறு இருப்பதும் எங்களுக்கு தெரிந்தது. சுமார் 60 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றை, தூர்வாரினோம் .
”சுமார் பத்து லட்சத்திற்கு மேல் செலவு செய்து அந்த நிலத்தை சீர்படுத்தினோம். கிணற்றின் சுற்றுச்சூழலை புதிதாக கட்டி எழுப்பினோம். இப்போது தரை வட்டத்திற்கு அந்த கிணற்றில் தண்ணீர் தேங்கி இருப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. முதலில் சொட்டுநீர் பாசனத்தின் மூலமாகத்தான் தண்ணீர் பயன்படுத்தினோம் அதன் பிறகு, இப்போது பாரம்பரிய நெல் விதைகளை உருவாக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்,” என உற்சாகமாக கூறினார் ஜீவிதா.

காடாக இருந்த விவசாய நிலம்
இப்போது நாங்கள் குழியடிச்சான், மிளகு சம்பா, நொறுங்கன், சின்னார், ஆணைகொம்பன், சிகப்பு கவுணி, 60ஆம் குருவை, என பாரம்பரிய நெல் விதைகளை விதைத்து விதை நெல் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கிறோம்.
இந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக உணவு பயன்பாட்டிற்குத் தேவையான நெல் வகைகளை விதைத்து உற்பத்தியை பெருக்க திட்டமிட்டு இருக்கிறோம். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் என்பதினால், இங்கே சுமார் 6-க்கும் மேற்பட்ட நாட்டு வகை மாடுகளை வளர்த்து வருகிறோம். அதன் சாணம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை உரமாக்கி எங்களுடைய விவசாய தேவைக்கு பயன்படுத்தி வருகிறோம்.
ஒரு நெல் ஒரு நாற்று முறை
’ஒரு நெல் ஒரு நாற்று’ என்கிற முறையில் நெற்பயிர்களை நடவு செய்து வருகிறோம். அதனால் பெருமளவு பொருளாதார சேமிப்பு எங்களுக்கு ஏற்படுகிறது. இன்னும் இந்த மண் இயற்கை விவசாயத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அதை அது சரி செய்யும்.

சீரமகைப்படும் தரிசு நிலம்
மேலும், நிலத்தை சுற்றிலும் அகழி தோண்டியிருக்கிறோம். மழைநீர் நிலத்தை பாதிக்காமல் இருக்கத்தான் இந்த அகழி. அதோடு, பாரம்பரிய மர வகைகளையும் காய்கறித் தோட்டங்களும் பயிரிடத் திட்டமிட்டு இருக்கிறோம்.
“ஒரு வகையில் இங்கே வேலை செய்வது ஒரு மன நிம்மதியை எங்களுக்கு வழங்குகிறது. நான் மட்டுமல்ல மேலும் ஓரிரு கிராமத்து நபர்களும் என்னோடு இங்கே பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு கௌரவமான சம்பளத்தையும் நான் வழங்கி வருகிறேன்.”
பெரும்பாலும் விவசாயம் செய்ய வேலை ஆட்கள் அதிகமாக வருவதில்லை வெவ்வேறு காரணங்கள் அதற்கு சொல்லலாம். அதனால் இயந்திரங்களை நாட வேண்டிய அவசியம் இருக்கிறது எனக்கு. மனித சக்தியை பயன்படுத்தி தான் விவசாயத்தை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் கூட அதற்கு ஆட்கள் கிடைக்காத ஒரு கவலை எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
வேறு வழி இல்லாமல் தான் சில நேரங்களில் இயந்திரங்களை பயன்படுத்தி விவசாயத்தை செய்து வருகிறோம். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பாரம்பரிய இயற்கை உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு அங்காடியை இந்த பகுதியிலோ அல்லது சென்னை போன்ற பெரு நகரங்களிலோ துவக்கவிருக்கிறோம். அது நம்முடைய உடலை பாதுகாக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் பயன்படும்.
“நல்ல பொருட்களை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கிற இந்த நேரத்தில் இயற்கை உணவுகளை விற்பனை செய்வதும் மக்களை வாங்க வைப்பதும் நன்றாக இருக்கும்,” என்று கருதுகிறேன் என்றார்.

காலம் காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளே விவசாயத்தில் ஒன்றும் இல்லை என்று நிலங்களை விற்றுவிட்டு நகர்ப்புறங்களில் வேலை தேடி செல்லுகிற இந்த நிலையில், நகர்ப்புறத்தில் கை நிறைய சம்பாதிக்கும் இந்த பெண் கிராமப் புறத்தை நோக்கி விவசாயம் செய்ய வந்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் கணினி மற்றொரு பக்கம் கலப்பை என இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது போல செய்து வருகிறார் மென்பொறியாளர் ஜீவிதா.
கட்டுரை: ஜோதி நரசிம்மன்

Edited by Induja Raghunathan