உப்பை பல கோடி வர்த்தகமாக மாற்றிய 21 வயது மதுரை இளைஞர்! - Naked Nature வெற்றி கண்டது எப்படி?
சூரிய வர்ஷனின் ‘நேக்கட் நேச்சர்’ (Naked Nature) நிறுவனத்தின் பயணம், இளம் தொழில்முனைவோர் மனப்பான்மைக்கு ஓர் ஊக்கமளிக்கும் சான்றாக விளங்குகிறது.
தூத்துக்குடியின் உப்பு முதல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வரையில் சூரிய வர்ஷனின் ‘நேக்கட் நேச்சர்’ (
) நிறுவனத்தின் பயணம், இளம் தொழில்முனைவோர் மனப்பான்மைக்கு ஓர் ஊக்கமளிக்கும் சான்றாக விளங்குகிறது.பரபரப்பான மதுரை நகரில் 21 வயது சூரிய வர்ஷனின் தொலைநோக்குப் பார்வை என்பது தோல் பராமரிப்பு முதல் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகள் வரை இந்தத் துறையை மறு வரையறை செய்துள்ளது. சமையலறை போன்ற ஓர் எளிமையான இடத்தில்தான் சூர்ய வர்ஷன் தனது கனவுத் திட்டமான D2C பிராண்டான Naked Nature நிறுவனத்தைத் தொடங்கினார்.
அதன்பிறகு, தனது உழைப்பினாலும் சாமர்த்தியத்தினாலும் அறிவினாலும் புதுமையின் கலங்கரை விளக்கமாக விளங்கும் உறுதிப்பாடு கொண்ட ஒரு பேரரசை உருவாக்கியுள்ளார் என்றால் மிகையாகாது.

Naked Nature நிறுவனர் சூர்ய வர்ஷன்
குளியல் உப்பில் தொடங்கி...
துறைமுகத்தைக் கொண்ட தூத்துக்குடியில் உப்புக்குப் பஞ்சமில்லை. இங்குதான் சூர்ய வர்ஷன் தன் முதல் தயாரிப்பை வடிவமைத்தார். பூக்களுடன் உப்பைக் கலந்து 320 ரூபாய் விலையில் ‘செம்பருத்தி குளியல் உப்பு’ (Hibiscus Bath Salt) என்பதைத் தயாரித்தார்.
பொதுவாக அனுபவம் வாய்ந்தவர்களே திண்டாடும் இத்தகைய ஒரு தொழிலில் 12-வது படிக்கும் ஓர் இளைஞன் ஒரு தயாரிப்பைச் சந்தைக்கு எடுத்துச் சென்றால் என்ன எதிர்வினை ஏற்படுமோ, அது சூரியாவுக்கும் ஏற்பட்டது. பெரிய சவால்களைச் சந்தித்தார். ஆனால், சென்னையில் தன் பொறியியல் பட்டப்படிப்பை தொடர்ந்தபடியே விடுமுறை நாட்களில் மதுரைக்குச் சென்று தன் தொழிலையும் கவனித்தார். ஓய்வின்றி தன் தொழிலை வளர்த்தெடுத்தார்.
திருப்புமுனைத் தருணம்
வாழ்க்கையில் அனைவருக்கும் திருப்புமுனை ஏற்படுத்தும் தருணங்கள் உண்டு. ஆனால், பெரும்பாலும் திருப்புமுனையைக் கொடுப்பவர்கள் தனிநபர்களாகவே இருப்பார்கள். அந்த வகையில் சூரியாவுக்கு திருப்பு முனை கொடுத்தவர் ஓர் ஆயுர்வேத மருத்துவர்.
அந்த மருத்துவருக்கு ‘செம்பருத்தி பாத் சால்ட்’ மிகவும் பிடித்துப் போக, பெரிய அளவில் ஆர்டர் செய்தபோது சூர்யாவின் பிசினசில் திருப்புமுனை ஏற்பட்டது. இந்தத் திருப்பு முனை சூர்யாவை மதுரைக்கு தனது கல்வி முயற்சிகளை மாற்றுவதற்கு வழிவகுத்தது. இதனால் அவர் தனது கனவு முயற்சிக்கு நெருக்கமாக இருந்தார்.
டிஜிட்டல் சகாப்தத்தின் திறனை உணர்ந்த சூரியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஆழ்ந்தார். யூடியூபின் கல்வி உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி, சூர்யா தான் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், ஆன்லைன் வகுப்புகளையும் தொடங்கினார். இதில் திரட்டப்பட்ட நிதி ரூ.2.20 லட்சம். இந்தத் தொகையை மீண்டும் நேக்கட் நேச்சரில் முதலீடு செய்ய, அவரது பிராண்ட் முன்னோக்கிச் சென்றது.

இன்று நேக்கட் நேச்சர்...
நேக்கட் நேச்சரின் இன்றைய நிலையைப் பார்த்தால் ஆச்சரியமாகவே இருக்கும். 47 வகையான பல்வேறு தயாரிப்புகளுடன் குளியல் அத்தியாவசிய பொருட்கள் முதல் குழந்தை பராமரிப்புப் பொருட்கள் வரை, இந்த பிராண்ட் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை தனக்காகச் செதுக்கியுள்ளது.
2021-22 நிதியாண்டு அதன் வளர்ந்து வரும் நிலைக்கு ஒரு சான்றாகும். வர்த்தகம் ரூ.56 லட்சத்தை எட்டி ரூ.10 கோடி மதிப்பீட்டை எட்டியுள்ளது.
6 பேர் கொண்ட பிரத்யேகக் குழுவுடன் மதுரையில் இருந்து செயல்படும் இந்த பிராண்ட் சென்றடையும் பரப்பு விரிவானது. ஆன்லைன் விற்பனை மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அதன் இருப்பு திட்பமாக உள்ளது.
நேக்கட் நேச்சர் நிறுவனத்தின் கதை தொழில்முனைவோர் வெற்றியின் கதை மட்டுமல்ல; இது இளமையின் உறுதி, தகவமைப்பு மற்றும் புதுமையின் உணர்வுக்கான ஓர் அடையாளமாகும்.
ஆரம்ப தடைகள் இருந்தபோதிலும், சூர்யாவின் பிராண்டின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும், மாறிவரும் டிஜிட்டல் நிலப்பரப்புக்கு ஏற்ப அவரது திறமையும் நேக்கட் நேச்சரை தொழில்துறையில் முன்னணியில் நிறுத்தியுள்ளது. அதன் மேல்நோக்கி செல்லும் வளர்ச்சிப் பாதையில், நேக்கட் நேச்சர் இளம் ஆர்வலர்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக செயல்படுகிறது.
ஆர்வமும் விடாமுயற்சியும் இருப்பின், வெற்றிக்கு வயது ஒரு தடையே அல்ல என்பதையும் நிரூபிக்கிறது, சூரிய வர்ஷனின் தொழில்முனைவுப் பயணம்.
தொகுப்பு: ஜெய்

19 வயதில் 1 கோடி ரூபாய்க்கு சாக்லெட் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தும் இளைஞர்!
Edited by Induja Raghunathan