வெள்ளை மாளிகை ஏஐ ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார் என்று, ட்ரம்ப் சமூக ஊடக மேடை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் முன்னாள் பார்ட்னர் ஸ்ரீராம் கிருஷ்ணனை வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.
“வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார்,“ என்று டிரம்ப் சமூக ஊடக மேடை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
“டேவிட் சேக்ஸுடன் இணைந்து, ஸ்ரீராம் கிருஷ்ணன், செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவின் முன்னிலை தொடர்வதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதோடு, அதிபருக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் கவுன்சில் உள்ளிட்ட அரசு துறைகளில் ஏஐ கொள்கையை வடிவமைப்பிலும், ஒருங்கிணைப்பதிலும் கவனம் செலுத்துவார்.
"எங்கள் நாட்டிற்கு சேவையாற்றும் வாய்ப்புக்கு பெருமிதம் கொள்கிறேன் , செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவை முன்னிலையில் தொடர வைப்பதில் டேவிட் சேக்சுடன் இணைந்து செயல்படுவேன்,” என்று ஸ்ரீராம் கிருஷ்ணன் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், இவர் எக்ஸ், மெட்டா மற்றும் ஸ்னேப் உள்ளிட்ட நிறுவனங்களில் பிராடகட் மற்றும் பொறியியல் அணிகளை வழிநடத்தியுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பணி வாழ்க்கையைத் துவக்கியவர், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்துள்ளார்.
வென்சர் கேபிடல் நிறுவனம் ஆண்டிரீசன் ஹோரோவிட்சில் இருந்து கடந்த நவம்பரில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விலகினார்.
“நான்கு ஆண்டுக்குப்பிறகு a16z-இல் இருந்து விலகுகிறேன். அடுத்து என்ன? விரைவில் அது பற்றி பகிர்வேன். வரலாற்றின் தனித்தன்மையான காலத்தில் வாழ்கிறோம். என் ஆற்றல் முழுவதையும் செலவிடு விரும்பும் ஒன்றில் ஈடுபட இருக்கிறேன். அதைப்பற்றி தெரிவிக்கிறேன்,” என அப்போது அவர் எக்ஸ் பதிவில் கூறியிருந்தார்.
ஆங்கிலத்தில்: அபா வாரியர், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan