மியூச்சுவல் பண்ட் மீது 30 நிமிடத்தில் கடன் பெற உதவும் ஸ்டார்ட் அப்!
Quicklend எனும் ஸ்டார்ட்-அப், மியூச்சுவல் பண்ட் மீது கடன் வசதி பெற வாடிக்கையாளர்களை நிதி நிறுவனங்களுடன் இணைத்து வைக்கும் டிஜிட்டல் மேடையாக திகழ்கிறது.
எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் கடன் வசதி மிக முக்கியம். குறைந்த காகித செயல்முறையில், போட்டிமிக்க வட்டி விகிதத்தில் மக்கள் கடன் பெற வழி செய்யும் சேவை ஈர்ப்புடைய வர்த்தக மாதிரியாக அமையும்.
இந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, மூன்று இளம் தொழில்முனைவோர்கள் இனைந்து, தனிநபர்கள் மியூச்சுவல் பண்ட் முதலீடு மீது கடன் பெறும் டிஜிட்டல் மேடையை உருவாக்கியுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த இந்த 'குவிக்லெண்ட்' (Quicklend) ஸ்டார்ட் அப், ரகுராம் திர்குடம், அருண் ஜாதவ் மற்றும் அபிஷெக் உப்பாலா ஆகியோரால் 2023 டிசம்பரில் துவக்கப்பட்டது. இந்த மேடை வாயிலாக பயனாளிகள் 30 நிமிடத்திற்குள், மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் மீது கடன் பெறலாம்.

நிறுவனர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் பலவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவக்ரள். கூகுள், அமேசான், கிரெட், பிரிசார்ஜ், ரெட்பஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த அனுவபத்தின் அடிப்படையில் நிறுவனர்கள் தங்களால் தனித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் கடன் மேடையை உருவாக்க முடியும், என தீர்மானித்தனர்.
இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் துறையின் அளவை கணக்கில் கொள்ளும் போது இது மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது. இந்திய மியூச்சுவல் பண்ட்கள் சங்கத்தின் (AMFI) தகவல்படி,
2024 டிசம்பர் இறுதி வரை, மியூச்சுவல் பண்ட் துறையால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.66.93 லட்சம் கோடியாகும். மேலும், எஸ்.ஐ.பி முறையில் சில்லறை முதலீட்டாளர்கள் செய்துள்ள முதலீடு ரூ.26,459 கோடி ஆகும்.
இருப்பினும், நிதி நுட்ப சேனல்கள் வாயிலாக கடன் வழங்க ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் தற்போதைய சூழல் இத்தகைய வர்த்தகத்தை துவக்க சவாலாக உள்ளது. இதனால் பல ஸ்டார்ட் அப்கள் தங்கள் வர்த்தக மாதிரியை சீரமைக்க வேண்டியிருந்தது.
ஆனால், குவிக்லெண்ட் நிறுவனம், நாட்டில் கடன் சேவைக்கான தேவை அதிகம் இருப்பதை உணர்ந்திருந்தது.
“கடன் சேவை என்பது மறைந்திருக்கும் சந்தையாக காண்கிறோம். ஏனெனில், நிதி நிறுவனங்கள் பணம் கொண்டிருந்தாலும், கடன் சேவைக்கான வாய்ப்பு கண்டறியப்பட வேண்டியுள்ளது,” என்று யுவர்ஸ்டோரியிடம் திர்குடம் கூறினார்.
செயல்முறை
கண்டறிதல் முறை என்பது கடன் தகுதி கொண்ட வாடிக்கையாளர்களை கண்டறிவதாகும். கடன் தேவை உள்ள வாடிக்கையாளரை கண்டறிந்து, கடன் தர தயாராக இருக்கும் நிதி நிறுவனத்துடன் இணைத்து வைப்பது குவிக்லெண்ட் நிறுவனத்தின் தற்போதைய வர்த்தக மாதிரியாக இருக்கிறது.
“கடன் வழங்கும் நிறுவனங்களிடம் உங்கள் விகிதம் உங்களுக்கு, எங்கள் விகிதத்தை பார்த்துக்கொள்கிறோம், என கூறினோம். வாடிக்கையாளர்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது,” என்கிறார்.
குவிக்லெண்ட், தனது எம்.எப் ஹோல்டிங் மூலம் கடன் செயல்முறைம் முழுவதையும் பார்த்துக்கொள்கிறது. தகுதியுள்ள வாடிக்கையாளர்களை கண்டறிய, மியூச்சுவல் பண்ட் விநியோக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. அதன் பிறகு வாடிக்கையாளர்களை நிதி நிறுவனத்துடன் இணைத்து வைக்கிறது.
இந்த செயல்முறை 30 நிமிடத்தில் முடிவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. நிறுவனம் ரூ.25 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்கிறது. பயனாளிகள், தங்கள் மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம்.
கடன் வழங்கலுக்கு நிதி நிறுவனங்களிடம் இருந்து குவிக்லெண்ட் கமிஷன் பெறுகிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த கட்டணமும் நிறுவனம் பெறுவதில்லை. இந்தியா போன்ற கடன் வசதி குறைவாக உள்ள நாட்டில், கடன் வசதி அர்த்தமுள்ள காரணிகளுடன் அமைய வேண்டும், என திர்குடம் கருதுகிறார்.
மேலும், இதன் வர்த்தக மாதிரி ஈட்டுறுதி கடன் கீழ் வருகிறது.
“ஈட்டுறுதி கடனில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் அனைவரும் பலன் பெறுவார்கள், என்கிறார். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளும், பெரும்பாலும் அதிக வட்டி உள்ள ஈட்டுறுதி இல்லா கடன் பிரிவில் அமைகின்றன.
குவிக்லெண்ட், வாடிக்கையாளர்களுக்கு இரு வகை சேவை அளிக்கிறது. முதலில், அது கடன் வழங்கும் சேவை செயல்முறையை கவனித்துக்கொள்கிறது. வாடிக்கையாளர்களைக் கண்டறிவது முதல் கடன் வழங்குவதை வரை உதவுகிறது.
இரண்டாவதாக, இந்த செயல்முறையை நிதி நிறுவனங்கள் நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப மேடையை அளிக்கிறது. பஜாஜ் பின்சர்வ், பிரமல் பைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது. தற்போது நிறுவனம் மாதம் 40 முதல் 50 கடன்களை வழங்க ஏற்பாடு செய்கிறது.

எதிர்கால திட்டம்
நிறுவனம் விதைக்கு முந்தைய சுற்றில் ரூ.7 கோடி நிதி திரட்டியுள்ளது. அப்ஸ்பார்க்ஸ், எக்சிமியஸ் வென்சர்ஸ், இனுகா கேபிடல் மற்றும் ஏற்கனவே உள்ள ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த நிதி திரட்டப்பட்டது.
"ஈட்டுறுதி இல்லாத கடன்கள் மீதான கண்காணிப்பு அதிகரிக்கும் நிலையில், ஈட்டுறுதி கடன்கள் அதிகம் வளர்கின்றன. இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் மியூச்சுவல் பண்ட்கள் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. மியூச்சுவல் பண்ட் மீது கடன் பெறும் வசதியை டிஜிட்டல் மயமாக்குவதில் குவிக்லெண்ட் முன்னிலை வகிக்கிறது,” என எஜ்சிமியஸ் வென்சர்ஸ் நிறுவனர் மற்றும் மேனேஜிங் பாட்னர் பியர்ல் அகர்வால் தெரிவித்தார்.
ஈட்டுறுதி கடனில் கவனம் செலுத்துவது நிறுவனத்தின் பலமாக அமைகிறது. மேலும், அது சொந்தமாக கடன் வழங்காமல், வாடிக்கையாளர் மற்றும் நிதி நிறுவனங்கள் இடையே பாலமாக விளங்குகிறது.
அதோடு, மியூச்சுவல் பண்ட் முதலீடு அதிகரித்து வரும் நிலையில், இந்த கடன் வசதிக்கான தேவையும் பெருகும், என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் தனது எதிர்கால திட்டத்தின் ஒரு பகுதியாக, பங்குகள் மீது கடன் வழங்கும் வசதியையும் பரிசீலிக்கிறது. ஆனால் இது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும், தனது தொழில்நுட்ப மேடையையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பொருத்தமான நிதி நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
“வாடிக்கையாளர்கள் முதல் நிதி நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் சிறந்த சேவையை உருவாக்கி வருகிறோம்,“ என திர்குடம் கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: திம்மையா பூஜாரி, தமிழில்: சைபர் சிம்மன்

Edited by Induja Raghunathan