பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை விட்டு டீ கடை நடத்தும் முதுகலை பட்டதாரி பெண் - ஏன் தெரியுமா?
செய்யும் வேலை சிறியதோ, பெரியதோ, சேர வேண்டிய லட்சியம் பெரிதாக இருந்தால் வெற்றி நிச்சயம். அதை டெல்லியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஒருவர் நிரூபித்து வருகிறார்.
செய்யும் வேலை சிறியதோ, பெரியதோ, சேர வேண்டிய லட்சியம் பெரிதாக இருந்தால் வெற்றி நிச்சயம். அதை டெல்லியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஒருவர் நிரூபித்து வருகிறார்.
இந்தியாவில் மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட 'சாயோஸ்' '
' எனப்படும் தேநீர் கபேயை போல நாமும் ஒருநாள் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு டெல்லியில் தெருவோரம் டீ கடை நடத்தி வரும் பட்டதாரி பெண்மணியின் கதை பலருக்கும் உந்துதலாக அமைந்துள்ளது.பெரிய கனவுகளால் ஆன சிறிய கடை:
டெல்லி கான்ட் கோபிநாத் பஜாரில் தள்ளுவண்டியில் டீ கடை நடத்தி வருகிறார் ஷர்மிஸ்தா கோஷ். ஆங்கிலத்தில் முதுகலை பட்டதாரியான ஷர்மிஸ்தா, பிரிட்டிஷ் கவுன்சிலில் கைநிறைய சம்பளம் தரக்கூடிய பணியில் இருந்து வந்துள்ளார். இருப்பினும், தனக்கென சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பித்து அதனை மிகப்பெரியதாக உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் சாலையோர தேநீர் கடையை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
புத்திசாலி பெண்ணின் கனவு:
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரிகேடியரான சஞ்சய் கன்னா தனது லிங்கிடு இன் பக்கத்தில் பதிவிட்ட பதிவின் மூலமாக ஷர்மிஸ்தா சோசியல் மீடியாவில் அதிக கவனம் பெற்ற பெண்மணியாக மாறியுள்ளார்.
அந்த பதிவில், சில நாட்களுக்கு முன்பு நான் டெல்லி கான்ட் கோபிநாத் பஜார் சென்றிருந்தேன். தேநீர் சாப்பிட ஆசைப்பட்டேன். அப்போது தான் ஆங்கிலம் பேசக்கூடிய புத்திசாலியான பெண் ஒருவர், தள்ளுவண்டியில் சிறிய டீ ஸ்டாலை நடத்துவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இவ்வளவு புத்திசாலியான ஒரு பெண் ஏன் இந்த தேநீர் கடையை நடத்துகிறாள் என ஆச்சர்யப்பட்டு, அதற்கான காரணத்தைக் கேட்டேன்.
இந்தியா முழுவதும் உள்ள பிரபல டீ செயின் நிறுவனமான சாயோஸைப் போல் தன்னுடைய தேநீர் கடையையும் பிரபலமான செயினாக மாற்ற வேண்டும் என்ற கனவுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டதாரியான ஷர்மிஸ்தா கோஷ், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர், லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸில் பணிபுரிந்து வரும் தனது தோழியான பாவனா ராவ்வுடன் இணைந்து இந்த சிறிய கடையை நடத்தி வருகிறார்.
”மாலை வேளையில் தோழிகள் இருவரும் இணைந்து இந்த கடையை நடத்தி வருகிறார்கள். இந்த கதையையும், அவரது புகைப்படத்தையும் ஷர்மிஸ்தாவின் அனுமதியுடன் இங்கு பதிவிடுகிறேன். இதற்கான காரணம் சிறிய வேலை என்று எதுவுமில்லை ஒருவருக்கு அவர்களின் கனவை நனவாக்குவதற்காக உழைக்கும் ஆர்வமும் நேர்மையும் இருக்க வேண்டும். விரக்தியில் இருக்கும் உயர் தகுதி வாய்ந்த பல இளைஞர்களை நான் கண்டிருக்கிறேன் அவர்களுக்கு இந்த செய்தி சென்றடைய வேண்டும்,” என பதிவிட்டுள்ளார்.
இந்த ஸ்டோரி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், ஏராளமான லிங்கிடு இன் பயனர்கள் ஷர்மிஸ்தாவை பாராட்டி வருகின்றனர்.
வங்கி வேலை கிடைக்கலனா என்ன; டீக்கடை நடத்தி வெற்றி பெற்ற ‘கிராஜுவேட் சாய்வாலி’