ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியா: நெல்லை தம்பதியின் இயற்கை திராட்சை மூலிகை பானம்!
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் தங்களின் சிறு பங்களிப்பாக 23 வகை பலன்களை அளிக்கும் மூலிகை ஊட்டச்சத்து பானம் KERDI-யை தயாரித்து இந்தியா முழுவதும் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகின்றனர் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜோஸ் பிரகாஷ், இவரது மனைவி மேரி ஆன்டனி.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் தங்களின் சிறு பங்களிப்பாக ஊட்டச்சத்து பானம் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர் திருநெல்வேலியைச் சேர்ந்த ஓர் தம்பதி.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜோஸ் பிரகாஷ் (40), இவரது மனைவி மேரி ஆன்டனி (38). மேரி ஆன்டனியின் பூர்வீகம் கேரள மாநிலம், ஆலப்புழா. இவரது குடும்பத்தில் கடந்த 3 தலைமுறைகளாக திராட்சை உள்ளிட்ட 23 வகை மூலிகைப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானம் தயாரிப்பதை தொழிலாகக் கொண்டவர்கள்.
தற்போது 3ஆவது தலைமுறையாக இந்த ஊட்டச்சத்து பானம் தயாரிப்பில் கொடிகட்டி பறந்து வருகிறார் மேரி ஆன்டனி.
KERDI எனப் பெயரிடப்பட்ட இந்த ஊட்டச்சத்து பானத்தை பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை யார் வேண்டுமானாலும் அருந்தலாம் எனக் கூறும் மேரி ஆன்டனி தனது வெற்றிப்பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
பிளஸ் 2 வரை படித்துள்ள நான் சராசரி குடும்பப் பெண்ணாகத்தான் இதுவரை வாழ்ந்து வந்தேன். ஜோமல் ஆன்றே, ஜோநிக்ஸ் ஆன்றே என்ற 2 குழந்தைகள் எனக்கு உள்ளனர். இந்நிலையில், எனது கணவர் திருவனந்தபுரத்தில் செய்து வந்த தொழிலில் சிறு தொய்வு ஏற்படவே, அவருக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என சிந்தித்து வந்தேன். அப்போதுதான் என் கணவர் என்னிடம் நீங்கள் பாரம்பரியமாக தயாரித்து வரும் ஊட்டச்சத்து பானத்தை தயாரித்து விற்பனை செய்யலாமே என யோசனை தெரிவித்தார்.
அத்தோடு நில்லாமல் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், அவ்வங்கியின் மேலாண் இயக்குநர் குருமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மரு.பிரியதர்ஷினி ஆகியோரின் உதவியின்பேரில் ரூ.1 லட்சம் கடனுதவியும் பெற்றுத் தந்தார்.
இதையடுத்து SUN HERBAL PRODUCTS என்ற பெயரில் எனது ஊட்டச்சத்து பானத்தை பதிவு செய்து நாங்கள் வசிக்கும் வாடகை வீட்டில் இருந்தே முதலில் உறபத்தியைத் தொடங்கினேன்.
நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வாங்கிக் குடித்துவிட்டு நல்ல பலன் இருப்பதாகத் தெரிவித்தனர். தற்போது தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு எங்களது பானம் செல்கிறது. 2018ல் தொடங்கிய எங்களது KERDI ஊட்டச்சத்து பானத்தின் வெற்றிப் பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது என்கிறார்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் மேரியின் ஸ்டாலை பார்வையிட்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பெண் தொழில் முனைவோரான மேரி ஆன்டனியை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழிலை மேம்படுத்தவும் ரூ.10 லட்சம் வங்கி கடனுதவி பெற உதவியுள்ளார்.
மேலும், சுயஉதவிக் குழு கண்காட்சி, புத்தகக் கண்காட்சி போன்றவற்றில் இலவசமாக ஸ்டால்களை அமைக்க உதவியிருக்கிறார். இதையடுத்து வங்கி கடனுதவி பெற்ற மேரி ஆன்டனி, சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக ஓர் ஊட்டச்சத்து பானம், மூலிகை குளியல் சோப், முகத்தைப் பொலிவாக்கும் பேஸ் மாஸ்க் என பல்வேறு பாரம்பரிய பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
மேரி ஆன்டனிக்கு பக்கபலமாய் அவரது கணவர் ஜோஸ் பிரகாஷும் இத்தொழிலில் கைகோர்த்து, மூலப் பொருள்களை வாங்குவது, மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை போன்றவற்றை கையிலெடுத்து தங்களது தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் இத்தம்பதி. தற்போது தனியாக ஓர் சிறு தொழிலகத்தை தற்காலிமாக நிறுவி, அதன் மூலம் தம்பதியர் தங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்து வெற்றிகரமாக விற்பனை வருகின்றனர்.
இதுகுறித்து மேரி ஆன்டனியின் கணவர் ஜோஸ் பிரகாஷ் தெரிவித்ததாவது, இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு எனது மனைவி தனியாக இத்தொழிலில் போராடி வருவதைப் பார்த்த நான், அவரது தொழில் முயற்சிக்கு வலு சேர்க்கும் விதமாக நானும் முழுமூச்சாக இத்தொழிலில் களமிறங்கினேன்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்குச் சென்று இந்த ஊட்டச்சத்து பானத்தை தயாரிக்கத் தேவையான மூலிகைப் பொருள்களை நேரடியாக தோட்டத்துக்குச் சென்று அங்குள்ள மண் வகை, அவர்கள் விவசாய முறை, பயன்படுத்தும் உரம் போன்றவற்றை ஆய்வு செய்து திருப்தி ஏற்பட்டால் மூலிகைகளை வாங்கி வருவேன். மேலும், தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானத்தை சூப்பர் மார்க்கெட்டுகள், ஆர்கானிக் கடைகள் போன்றவற்றுக்கு விற்பனை செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்கிறார்.
இந்த ஊட்டச்சத்து பானத்தை தயாரிக்க குறைந்தபட்சம் சுமார் 100 நாட்களுக்கு மேலாகுமாம். இதில் திராட்சை, அத்திப்பழம், ஆவாரம் பூ, மருதம்பட்டை, ஜாதிக்காய், சிறுதானியங்கள் உள்ளிட்ட 23 வகையான மூலப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பானம் தயாரிக்க சில மூலிகைகளை நேரடியாக சேர்த்தும், சிலவற்றை வேக வைத்தும், சிலவற்றை வறுத்து பொடியாக்கி எனக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த பல்வேறு மூலிகைகளை சேர்த்து ஊட்டச்சத்து பானத்தை தயாரிக்கின்றனர்.
இப்பானத்தில் சுவைக்காக, நிறத்துக்காக என எவ்வித செயற்கைப் பொருள்களும் கலக்கப்படுவது கிடையாதாம். இது முழுக்கமுழுக்க 100 சதவீத இயற்கை ஊட்டச்சத்து பானம் எனத் தெரிவிக்கிறார் மேரி ஆன்டனி.
இந்த KERDI ஊட்டச்சத்துப் பானத்தை 700 மிலி ரூ.1,500க்கு விற்பனை செய்து வருகின்றனர். KERDI-யை இவர்களிடம் நேரடியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும், நாட்டு மருந்துக் கடைகள், ஆயுர்வேத மருந்துக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், ஆர்கானிக் கடைகள் போன்றவற்றிலும் வாங்கிக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் நேச்சுரோபதி, அக்குபஞ்சர் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இந்த பானத்தை பரிந்துரை செய்கின்றனர். KERDI தமிழகம் முழுவதும் மட்டுமன்றி, பஞ்சாப், கொல்கத்தா, மும்பை, கேரளம் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிடைக்கிறது என்கின்றனர்.
மாதமொன்றுக்கு சுமார் 200 பாட்டில்கள் முதல் 300 பாட்டில்கள் வரை KERDI ஊட்டச்சத்து பானம் விற்பனையாகிறதாம். இதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை வருமானம் வருகிறது என்கின்றனர். இதில் மூலப் பொருள்கள் வாங்குவது, தொழிலாளர்கள் ஊதியம், வங்கிக் கடன் தவணை என எல்லாவற்றையும் கழித்தால் குறைந்தபட்சம் மாதம் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது என்கிறார் மேரி ஆன்டனி.
மேலும், வருமானத்தை விட ஓர் நல்ல ஊட்டச்சத்து பானத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தோம் என்கிற திருப்தி ஏற்படுகிறது என்கிறார் இவர்.
KERDIயின் பயன்கள் குறித்து மேரி ஆன்டனி தெரிவிக்கும்போது, இந்த பானத்தை பயன்படுத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் இதை அருந்திய பிறகு மிக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் தெரிவிக்கின்றனர்.
கேன்சர் நோயால் உடல் மிக நலிந்தவர்கள் இப்பானத்தை அருந்திய பின் நல்ல உடல் நலம் பெற்றுள்ளனர். இதேபோல 22 வருடமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்ற ஓர் பெண், 4ஆம் கட்டத்தில் மிக சீரியசாக உணவு உண்ண முடியாமல், வாந்தி எடுத்துக் கொண்டு படுத்த படுக்கையாய் இருந்தார். ஆனால், இந்த பானத்தை அருந்திய பிறகு வாந்தி நின்றது. 2 வாரங்களில் அவர் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, தற்போது 100 நாள் வேலைத்திட்ட பணிக்குச் சென்று வருகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம்.
இதே போல அல்சர் உள்ளிட்ட வயிறு தொடர்பான நோய்கள், மலச்சிக்கல், நெஞ்சு எரிச்சல், சிறுநீரக கல் என நீண்ட நாள்களாக நோய் வாய்ப்ட்டவர்கள் கூட இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி நல்ல பலனை பெற்றுள்ளனர் என பல்வேறு நபர்கள் எங்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், எனது சொந்த அனுபவமாக எங்களது இளைய மகன் ஜோநிக்ஸ் அன்றோ, டிச.5, 2020 இல் பிறந்தார். பிறந்த முதல் 3 மாதங்களுக்கு கிர்கிர் என அவரது நெஞ்சில் இருந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது. சரியாக 4 வது மாதத் தொடக்கத்தில் அவரது வாயில் சில துளி KERDI –யை விட்டேன். அன்று முதல் இன்று வரை அந்த சத்தமே இல்லாமல் எனது மகன் ஆரோக்கியமாக இருந்து வருகிறார்.
இந்த பானம் மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலிக்கு மிகச்சிறந்த மருந்து. மேலும், இந்தியாவில் அதிகபட்சமாக பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை அறவே அழிக்க வல்லது. விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது. முதியோர்களுக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கிறது. உடல் சூட்டைத் தணிக்கிறது. காய்ச்சல் சளியை குணமாக்குகிறது. இவ்வாறு குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற அருமருந்தே இந்த ஊட்டச்சத்து பானம் என்கிறார் மேரி ஆன்டனி.
மேரி ஆன்டனி இது தவிர சிறப்பு ரகமாக சர்க்கரை நோயாளிகளுக்கான பானத்தையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதனை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் எடை கூடாமலும், சர்க்கரையின் அளவு கட்டுக்குள்ளும் இருக்கிறது, என்கிறார். மேலும், அவர்களின் நரம்புகளுக்கு நல்ல பலம் அளிக்கிறது. இதனால் நோயின் தாக்கமின்றி அவர்கள் எப்போதும் போல வாழ முடியுமாம்.
சாதாரண இல்லத்தரசியாக இருந்த என்னை இன்று தென்னிந்தியா முழுவதும் ஊட்டச்சத்துப் பானம் விற்பனை செய்யும் ஓர் பெண் தொழில் முனைவோராக உருவாக்கிய பெருமை முழுக்க முழுக்க என் கணவரையே சேரும் எனத் தெரிவிக்கும் மேரி ஆன்டனி, தொடக்கத்தில், எங்களது வாடகை வீட்டில் நான் தொழில் தொடங்கிய போது, நான், எனது கணவர், எனது மூத்த மகன் ஜோமல் ஆகியோர் மட்டுமே வேலை செய்தோம். எனவே எனது முன்னேற்றத்தில் எனது கணவருக்கும், மகனுக்கும் முக்கியப் பங்கு உண்டு. அதேபோல, எனது நண்பர்கள், உறவினர்கள், வங்கி மேலாளர்கள், அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் என நான் நன்றி கடமைப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்கிறார் மேரி ஆன்டனி.
இந்தியாவில் வாழும் 80 சதவீத பெண்களுக்கும். பெரும்பாலான ஆண்களுக்கும் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளது. ஆனால் இதனை அவர்கள் உணராமல் உடம்பு வீக்காக இருக்கிறது. அசதியாக இருக்கிறது என சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இதுவே பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்து விடுகிறது. எனவே,
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் எனது பங்காக KERDI-யை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தி, நாடு முழுவதும் விநியோகிஸ்தர்களை ஏற்பாடு செய்து, இப்பானம் நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தயார் செய்வதே தற்போது எனது எதிர்கால லட்சியமாகும் என்கிறார் மேரி ஆன்டனி.