2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் ‘நவீன்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒப்பந்தம்!
சென்னையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான நவீன்ஸ் (Navin's) தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசுடன் கையெழுத்திட்டுள்ளது.
சென்னையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான 'நவீன்ஸ்' (Navin's) தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசுடன் கையெழுத்திட்டுள்ளது. தமிழ்நாட்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த அறிவிப்பின் மூலம், இந்நிறுவனம் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி பகுதிகளில் அதி நவீன வசதி கொண்ட குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்கள் உருவாக்க உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்ததின் மூலம் செய்யப்படும் இம்முதலீடு மாநிலத்தின் பல்வேறு துறையில் 1,050 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், எங்கள் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய தருணமாக அமைகிறது. மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான எங்கள் ஈடுப்பாட்டின் அடையாளமாக இது அமைகிறது. மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பங்களிக்கும்,” என்று இந்த ஒப்பந்தம் தொடர்பாக நவீன்ஸ் இயக்குனர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.
நவீன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ள கட்டுமான திட்டங்கள், பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கானதாக அமையும். நிறுவனம், அதிக தரம் வாய்ந்த குடியிருப்புகள், வர்த்தக இடங்களை உருவாக்கி வருகிறது. நவீனமான, நீடித்த தன்மை கொண்ட குடியிருப்புகளை வழங்குகிறது.
சென்னையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான நவீன்ஸ் 125க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பல்வேறு சர்வதேச தரச்சான்றிதழ்கள் மற்றும் சிறந்த கட்டுமான விருது உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாடு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
Edited by Induja Raghunathan