5 லட்ச ரூபாயில் தொடங்கி, 1,000 கோடி வருவாய் ஈட்டும் Kent RO!
1999-ம் ஆண்டு வீட்டின் சிறிய அறையில் மகேஷ் குப்தா தொடங்கிய ஆர்ஓ சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு முயற்சி இன்று Kent RO என்கிற பெயரில் இந்தியாவின் முன்னணி பிராண்டாக உருவெடுத்துள்ளது.
மகேஷ் குப்தா ஐஐடி பட்டதாரி. 90-களில் விடுமுறையின்போது இவர் தனது குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டார். அப்போது குழந்தைகள் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனை செய்ததில் அசுத்தமான தண்ணீரைக் குழந்தைகள் குடித்ததால் மஞ்சள்காமாலை நோய் பாதித்திருந்தது.
குழந்தைகள் நோயிலிருந்து மீண்டாலும்கூட மகேஷ் இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீளவில்லை. இதன் விளைவாக தண்ணீரை சுத்திகரிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். வழக்கமான யூவி சுத்திகரிப்பு முறையில் தண்ணீரில் கரைந்திருக்கும் அசுத்தங்கள் முறையாக நீக்கப்படுவதில்லை என்பதைக் கண்டறிந்தார்.
யூவி சுத்திகரிப்பு முறையில் யூவி கதிர்வீச்சு மூலம் தண்ணீரில் உள்ள கிருமிகள் நீக்கப்படுகிறது. ஆனால் இது குடிக்கப் பாதுகாப்பானது இல்லை.
“எண்ணெய் வளங்கள் தொடர்புடைய வணிகத்தில் ஈடுபட்டிருந்தபோதும் தண்ணீரை சுத்திரிகரிப்பது பற்றி தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டேன்,” என்று எஸ்எம்பிஸ்டோரி இடம் தெரிவித்தார் மகேஷ்.
அப்போது ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் இவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் தண்ணீரில் கலந்திருக்கும் வெவ்வேறு வகையான ரசாயன மற்றும் உயிரியல் அசுத்தங்களை நீக்கமுடியும்.
தண்ணீரைக் குடிப்பதற்கு உகந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற அந்த நாட்களில் யாரும் ஆர்ஓ பயன்படுத்தவில்லை. மகேஷ் இதை சோதனை செய்யத் தீர்மானித்தார்.
அமெரிக்காவில் இருந்து மெம்பரேன் மற்றும் பம்ப் இறக்குமதி செய்தார். வீட்டில் முதல் ஆர்ஓ சுத்திகரிப்பு அமைப்பை நிறுவினார்.
பிராண்ட் உருவானது
ஆர்ஓ தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கும் அமைப்பை அதிகளவில் தயாரிக்க முடிவெடுத்தார்.
“1998-ம் ஆண்டு 5 லட்ச ரூபாய் சீட் முதலீட்டுடன் ஆர்ஓ அமைப்புகளுக்கான உபகரணங்களை வாங்கினேன். என் வீட்டில் உள்ள சிறிய அறை ஒன்றில் தண்ணீர் சுத்திகரிக்கும் சாதனத்தை உருவாக்கத் தொடங்கினேன்,” என்றார்.
மகேஷ் இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்று 1999-ம் ஆண்டு நொய்டாவில் Kent RO தொடங்கினார்.
ஆரம்பத்தில் 20,000 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டது. இந்த விலை மிகவும் அதிகம் என்பதே அனைவரின் கருத்தாகவும் இருந்தது.
தயாரிப்பை உருவாக்குவது மட்டுமல்லாது ஆர்ஓ சுத்திகரிப்பு சாதனத்தின் அவசியத்தை மக்களுக்குப் புரியவைப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்பதை மகேஷ் உணர்ந்தார்.
இந்தப் புதிய தொழில்நுட்பம் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை. குறைந்த விலையில் கிடைக்கும் யூவி சுத்திகரிக்கும் கருவிகளுடன் Kent RO ஒப்பிடப்பட்டது.
வீடு வீடாகச் சென்று இந்தப் புதிய பிராண்ட் விற்பனை செய்யப்பட்டது. மாதத்திற்கு 10-15 சுத்திகரிப்பு இயந்திரங்களை மட்டுமெ விற்பனை செய்ய முடிந்தது. வழக்கமான சுத்திகரிப்பு இயந்திரங்களை விற்பனை செய்யும் பிரபல பிராண்டுகளுடன் போட்டி, அனுமதி தொடர்பான சிக்கல், போதிய மூலதனம் இல்லாமை என பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார்.
இப்படி எத்தனையோ சவால்களை இருப்பினும் ஆர்ஓ சுத்திகரிப்பு சாதனங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியை மகேஷ் கைவிடவில்லை. இவரது நம்பிக்கை வீண்போகவில்லை. 2000-ம் ஆண்டுகளில் மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களின் செலவிடும் திறன் மேம்பட்டது.
மக்கள் பாதுகாப்பான குடிநீரை விரும்பினார்கள். தண்ணீர் மூலம் ஏற்படும் நோய் தொற்று பாதிக்காமல் தற்காத்துக்கொள்ள விரும்பினார்கள். யூவி சுத்திகரிப்புடன் ஒப்பிடுகையில் ஆர்ஓ சுத்திகரிப்பு முறையில் பல நன்மைகள் இருப்பதை உணர்ந்தனர்.
இதன் காரணமாக ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிக்கும் சாதனங்களின் தேவை அதிகரித்தது. Kent RO முயற்சிக்கும் பலன் கிடைத்தது.
அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உத்தர்காண்ட் மாநிலம் ரூர்கியில் தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தார் மகேஷ். விநியோகஸ்தர்கள், டீலர்கள், சில்லறை வர்த்தகர்கள் என மிகப்பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி விற்பனை செய்தார்.
Kent பிராண்ட் அம்பாசிடர் பாலிவுட் நடிகை ஹேமமாலினி இடம்பெற்ற விளம்பரங்கள் பிரபலமாகி இந்த பிராண்ட் பலரைச் சென்றடைந்தது.
வளர்ச்சி
இந்தியாவின் முன்னணி ஆர்ஓ சுத்திகரிப்பு சாதனங்களின் தயாரிப்பாளராக Kent RO வளர்ச்சியடைந்தது.
இன்று 1,000 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்டுள்ள இந்த பிராண்ட் ஆர்ஓ சுத்திகரிப்பு சாதனங்கள் சந்தையில் 40 சதவீதம் பங்களிக்கிறது.
“12,000 சில்லறை வர்த்தக அவுட்லெட்கள், 3,000 விநியோகஸ்தர்கள், 300 நேரடி மார்க்கெட்டிங் நிர்வாகிகள், 1,500 பேர் அடங்கிய விற்பனையாளர் குழு ஆகியவற்றுடன் செயல்படுகிறோம்,” என்றார் மகேஷ்.
இவைதவிர இந்த பிராண்ட் இலங்கை, வங்காளம், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. எத்தனையோ போட்டிகள் இருந்தாலும் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்துவதில் முதலீடு செய்து வருவதே இந்நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கு காரணம் என்கிறார் மகேஷ்.
“ஆர்ஓ சுத்திகரிப்பில் தண்ணீரில் உள்ள ஆரோக்கியமான மினரல்கள் நீக்கப்படுவதே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. மினரல்களைத் தக்கவைத்து அசுத்தங்களை மட்டுமே தண்ணீரில் இருந்து நீக்கும் வகையில் சமீபத்தில் இதற்குத் தீர்வு உருவாக்கியுள்ளோம்,” என்றார்.
வருங்காலத் திட்டம்
மகேஷ் தற்போது இந்திய சந்தையில் அதிக கவனம் செலுத்தினாலும் ஏற்றுமதியிலும் கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார்.
“ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பாகவும் திட்டமிட்டு வருகிறோம். கடந்த ஆண்டு ஏற்றுமதி மூலம் 24 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில் இந்த ஆண்டு 35-40 கோடி ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டுள்ளோம்,” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
100 கோடி ரூபாய் முதலீட்டுடன் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புதிய தொழிற்சாலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு மில்லியன் ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களைத் தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மெட்ரோ மற்றும் பெருநகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்களிலும் செயல்படவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம். நாடு முழுவதும் இருக்கும் வாடிக்கையாளர்களைச் சென்றடைய ஆன்லைன் விற்பனையும் செய்யப்படுகிறது.
“இந்தியாவில் அசுத்தமான தண்ணீரால் பல நோய்கள் ஏற்படுகின்றன. கிணறு, குளம் போன்றவை அதிகம் மாசுப்பட்டுள்ளதாக எங்களது ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. பல கிராமங்களில் மின்சாரம் இல்லாததும் சவாலாக உள்ளது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அதற்கேற்ற தயாரிப்புகளை உருவாக்கி வருகிறோம். மக்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தையும் விரிவாக எடுத்துரைத்து வருகிறோம்,” என்றார் மகேஷ்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா