ITC Market Cap: ரூ.5 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கடந்த 11வது இந்திய நிறுவனமானது ITC!
ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5 டிரில்லியன், அதாவது 5 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.
ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5 டிரில்லியன், அதாவது 5 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.
ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு 21 சதவீதம் உயர்ந்த நிலையில், தற்போது 5 டிரில்லியன் சந்தை மதிப்பைக் கடந்த இந்தியாவின் 11வது நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.
2023ம் ஆண்டின் தொடக்கம் முதலே பங்குச்சந்தையில் சொல்லிக்கொள்ளும் படியாக முன்னேற்றம் இல்லை. பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வங்கி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஐ.டி. மற்றும் நிதி நிறுவன பங்குகள் கூட சரிந்துள்ளன.
இதில் விதி விலக்காக சிகரெட் முதல் ஓட்டல் பிசினஸ் வரை கொடிகட்டி பறக்கும் ஐடிசி லிமிடெட் நிறுவன பங்குகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவது மட்டுமின்றி, நேற்று உச்சம் தொட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணில் ஐடிசியின் பங்கு மதிப்பு 11 சதவீதம் உயர்ந்து, 402.60 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. நடப்பு 2023ஆம் ஆண்டில் மட்டும் ஐடிசி பங்கு சுமார் 22% மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலமாக ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
இதுவரை ரிலையன்ஸ், டிசிஎஸ், எச்.டி.எஃப்.சி. பேங்க், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்யுஎல், எல்ஐசி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே 5 டிரில்லியன் என்ற சாதனையை படைத்துள்ள நிலையில், தற்போது 11வது இந்திய நிறுவனமாக ஐடிசி லிமிடெட் இணைந்துள்ளது.
சிகரெட் தொழிலில் பிரதானமாக செய்து வரும் ஐடிசி நிறுவனம், எஃப்எம்சிஜி, பேப்பர், ஓட்டல், பேக்கேஜிங், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறது. இதனால் இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஐடிசி நிறுவனத்தின் பணப்புழக்கம் மற்றும் பங்குதாரர்களுக்கு அந்நிறுவனம் பகிர்ந்தளிக்கும் டிவிடெண்ட் காரணமாகவும் முதலீட்டாளர்களின் விருப்பமான நிறுவனமாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் வலுவான செயல்பாட்டு செயல்திறன், சிகரெட் விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சி மற்றும் அதன் ஹோட்டல் வணிகத்தின் நிலைத்தன்மை ஆகியவையும் முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களாக அமைந்துள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்பு படி, சட்டவிரோத விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது, சிகரெட் விலையில் மாற்றமில்லாததும் ஐடிசியின் சிகரெட் வணிகத்தை மேலும் வளர்ச்சி அடையச் செய்யும் எனக்கூறியுள்ளனர். சிகரெட் மட்டுமின்றி, எஃப்எம்சிஜி மற்றும் பேக்கேஜிங் பிசினஸிலும் அதன் வலுவான வளர்ச்சி தொடரும் என்றும், இதன் விளைவாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ITC இரட்டை இலக்க வருவாய் மற்றும் PAT வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.