பிளம்பர் டு முதலாளி - டெல்லியில் குளியலறைப் பொருட்கள் ஷோரூம் ஓனர் ஆன இளைஞரின் கதை!
முறையான பட்டப்படிப்போ திறனோ இல்லாமல் டெல்லி என்சிஆர் பகுதியில் வேலை தேடிய உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அசுடோஷ் யாதவ் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, கற்றுக்கொண்டு தொழில் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்.
உத்திரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது அசுடோஷ் யாதவ் கரடுமுரடான பாதைகளைக் கடந்து இன்று தொழில்முனைவராக உருவெடுத்திருக்கிறார்.
வாழ்க்கையில் பெரிதாக சாதிக்கவேண்டும் என்கிற வெறி இவருக்குள் எப்போதும் இருந்து வந்தது. இவரது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வந்ததால், குடும்பத்தின் தரப்பில் பெரிதாக வழிகாட்டல் எதுவும் இவருக்குக் கிடைக்கவில்லை.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிப்பு. பெரிதாக திறன் எதையும் வளர்த்துக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் அசுடோஷ் 2006-ம் ஆண்டு டெல்லி என்சிஆர் பகுதிக்கு வந்தடைந்தார். அங்கு பிளம்பராக வேலை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. அதை செய்து வந்தார்.
2009ம் ஆண்டு நவம்பர் மாதம் LIXIL GROHE நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இதை கற்றலுக்கான ஒரு நல்ல தளமாக அசுடோஷ் கருதினார்.
எப்படியாவது தொழில் முயற்சி தொடங்கவேண்டும் என்கிற கனவு அவருக்கு இருந்து வந்தது. இந்தத் துறையின் நுணுக்கங்களைக் கற்றறிய புரோக்கிராம் ஒன்றில் தானாக முன்வந்து சேர்ந்திருக்கிறார்.
இப்படித் தொடங்கப்பட்டதுதான் இவரது பயணம். இன்று அசுடோஷ் A to Z Bath Solutions என்கிற நிறுவனத்தின் உரிமையாளர். வடக்கு மற்றும் மேற்கு டெல்லி, குருகிராம் போன்ற பகுதிகளில் GROHE அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குகிறார்.
”இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் நாம் வாழவேண்டும் என்பதில் தீர்மானமாகவும் உறுதியாகவும் இருந்தோமானால், எப்படியாவது கடுமையாக முயற்சி செய்து நினைத்ததை சாதித்துவிடுவோம். நம் முயற்சிகளில் தொய்வு ஏற்படாதவாறு தொடர்ந்து முழுமனதுடன் ஈடுபடவேண்டும். இந்தப் பயணத்தில் வெற்றியைக் காட்டிலும் தோல்விகளை அதிகம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். உங்கள் கனவு மட்டுமே உங்களைத் தளராமல் செயல்பட உந்துதல் அளிக்கும்,” என்கிறார் அசுடோஷ்.
ஆரம்ப நாட்கள்
குடும்பச் சூழல் காரணமாக அசுடோஷ் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. அவர் தனது தாய்மாமாவுடன் மும்பை சென்றிருக்கிறார். அசுடோஷின் தாய்மாமா மும்பையில் பிளம்பிங் தொழில் செய்து வந்தார். அவருடன் இரண்டு ஆண்டுகள் வரை தங்கியிருந்த அசுடோஷ் வணிக செயல்பாடுகளை அருகிலிருந்து தெரிந்துகொண்டார்.
எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட அசுடோஷ் பத்தாம் வகுப்பை முடிக்க விரும்பினார். 2005-ம் ஆண்டு வீடு திரும்பினார். பத்தாம் வகுப்பு படித்து முடித்தார். டெல்லி Jaguar நிறுவனத்தில் பிளம்பர்/டெக்னீஷியனாக வேலை செய்யத் தொடங்கினார்.
“சுயமாக சம்பாதிக்கவேண்டும். நல்ல வருமானம் ஈட்டவேண்டும். இதுவே என் கனவாக இருந்தது. இந்த சூழலில் இந்த பணியை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவே கருதினேன். இங்கு வேலை செய்துகொண்டே பன்னிரண்டாம் வகுப்பையும் முடித்தேன்,” என்கிறார்.
மூன்றாண்டுகள் வரை Jaguar நிறுவனத்தில் வேலை பார்த்தார். பிளம்பிங் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை ஆழமாகக் கற்றறிய இது உதவியது.
2009ம் ஆண்டு GROHE நிறுவனத்தில் டெக்னிக்கல் சர்வீஸ் என்ஜினியராக வேலையில் சேர்ந்தார். தெர்மோஸ்டாட்ஸ், சிஸ்டர்ன், இன்ஸ்டலேஷன் டிராயிங் போன்றவற்றுடன் MS Excel, இமெயில் எழுதுவது, சிஆர்எம் என அடிப்படை கணிணி திறன்களையும் வளர்த்துக்கொண்டார்.
தொழில்முனைவு
2021ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி அசுடோஷ் A to Z Bath Solutions தொடங்கினார்.
“தொழில்முனைவு என்பது என்னுடைய ஆழ்மனதில் இருந்துகொண்டே இருந்தது. அந்த உந்துதலே என்னை ஊக்குவிக்கது. அந்த சூழலில் சாத்தியமே இல்லாத கனவாக அது தோன்றியபோதும், இந்த எண்ணத்தை நான் புறக்கணிக்கவில்லை,” என்று அந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.
விரைவில் அசுடோஷ், LIXIL Entrepreneurship Programme திட்டத்தில் சேர்ந்தார். தனது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மூன்று மாதங்கள் ஆதரவளிக்குமாறு இந்நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தார்.
“அவர்கள் சம்மதித்தார்கள். அதுமட்டுமல்ல. ஆறு மாதம் வரை எனக்கு ஆதரவாக இருந்து உதவினார்கள். இதனால் என்னுடைய தொழில் முயற்சியில் முழு கவனம் செலுத்த முடிந்தது,” என்கிறார்.
அசுடோஷிற்கு முன் அனுபவமோ முறையான பயிற்சியோ எதுவும் இல்லை. ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டார். நம்பிக்கையுடன் துணிந்து களமிறங்கினார்.
”என் வணிகம் வெற்றிகரமாக செயல்படும்போது என் ஊழியர்களுக்கு இதேபோல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய ஊழியர்கள் ஆறு, ஏழு பேருக்கு திறன் பயிற்சி அளித்திருக்கிறேன்,” என்கிறார் அசுடோஷ்.
அவர் மேலும் கூறும்போது,
“நான் என் வாழ்க்கையில் இத்தனை தூரம் பயணிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இலக்கு நிர்ணயித்து அதை நோக்கி விடாமுயற்சியுடன் பயணித்தேன். என்னைப் பொருத்தவரை இதுதான் வெற்றி,” என்கிறார்.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தொடர் கற்றலும் இருந்தாலும் எட்டமுடியாத இலக்கையும் எட்டிவிடலாம் என்பதற்கு அசுடோஷ் மிகச்சிறந்த உதாரணம்.
“இன்று GROHE டீலர்கள் டெக்னீஷியன்களாக பார்ப்பதில்லை, அவர்களது வணிக பார்டனர்களாகவே பார்க்கிறேன். என் குடும்பத்தை நான் பெருமைப்படுத்தியிருக்கிறேன். அவர்களுடன் தரமான நேரம் செலவிடுகிறேன். என் கனவு நனவாகி வருவதில் எனக்கு மகிழ்ச்சி,” என்கிறார்.
அசுடோஷ் சமீபத்தில் கார் வாங்கியிருக்கிறார். எல்லாவற்றைக் காட்டிலும் தன் மகன்களுக்கு தரமான கல்வி வழங்கமுடிவதை அவர் மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா
'பிளம்பிங் வேலை செய்து என் நான்கு பிள்ளைகளைக் காப்பாற்றுகிறேன்' – கேரள பழங்குடி பெண்!