தோட்டக்காரரின் மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் பிரபல கால்பந்து சூப்பர் ஸ்டார் ஆன கதை!
இன்று விளையாட்டுத்துறையில் அதிக சம்பளம் பெறும் கால் பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உற்சாகமூட்டும் கதையைப் பற்றி பார்க்கலாம்...
இன்று பெயர், புகழ், ஆடம்பரமான வீடுகள், சொகுசு கார்கள், உலக சுற்றுப்பயணம், கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் என பார்க்கவே பகட்டாக தெரியும் பிரபலங்களின், ஆரம்ப கட்ட வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்த்தோமேயானால்... எவ்வித பின்னணியும் இன்றி, வறுமையால் படிப்பைக் கூட தொடர முடியாமல் போராடி முன்னுக்கு வந்தவர்களாகத் தான் இருப்பார்கள்...
குறிப்பாக விளையாட்டைப் பொறுத்தவரை எம்.எஸ் தோனி முதல் தற்போது செஸ் உலகில் சாதனை படைத்து வரும் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வரை பலரும் சாதாரணக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் தான்.
ஒருவேளை உணவுக்குக் கூட கஷ்டப்பட்ட நிலையில் இருந்து இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் கிறிஸ்டியானோ ரெனால்டோ. இன்று விளையாட்டுத்துறையில் அதிக சம்பளம் பெறும் கால் பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உற்சாகமூட்டும் கதையைப் பற்றி பார்க்கலாம்...
வறுமையின் பிடியில் கழித்த வாழ்க்கை:
போர்ச்சுக்கலில் இருந்து 1000 மைகல்களைக் கடந்து வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் உள்ள சின்னஞ்சிறுத் தீவு மடீரா. வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த மரியா டோலோரஸ் டோஸ் சாண்டோஸ் மற்றும் ஜோஸ் டினிஸ் அவிரோ தம்பதியின் குடும்பத்தில் 4வது குழந்தையாக பிறந்தவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ டோஸ் சாண்டோஸ் அவிரோ.
வறுமை காரணமாக அவரது தாய் கருவை கலைக்க நினைத்த போதும், கடவுள் கொடுத்த குழந்தையாக எண்ணி, 5 பிப்ரவரி 1985ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோவை பெற்றொடுத்தார். இதுகுறித்து பின் நாட்களில் ரொனால்டாவின் தாயார் அவரிடம் இதுபற்ரி கூறியபோது, ரொனால்டோ அதற்குச் சொன்ன பதில்,
“பாருங்க அம்மா... நீங்கள் என்னை கருக்கலைப்பு செய்ய விரும்பினீர்கள், ஆனால், நான் தான் இப்போது வீட்டுக்குத் தேவையானவற்றை கொண்டுவந்து உங்கள் அனைவரையும் பார்த்துக்கொள்ளும் நபராக உள்ளேன்...” எனத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஹ்யூகோ என்ற ஒரு சகோதரரும், காடியா மற்றும் எல்மா என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். கிறிஸ்டியானோவின் தந்தை நகராட்சியில் தோட்டக்காரராகவும், அவரது தாயார் சமையல்காரராகவும் வேலை பார்த்துள்ளனர்.
சிறு வயதில் இருந்தே ரொனால்டோவிற்கு படிப்பை விட கால்பந்து போட்டியில் தான் அதிக விருப்பம் இருந்தது. ஒருமுறை பள்ளியில் ஆசிரியரை தாக்கியதற்காக பள்ளியை விட்டு நீக்கப்பட்ட ரொனால்டோ, தனது 8 வயதிலேயே உள்ளூர் கால்பந்து அணிக்காக விளையாடத் தொடங்கினார்.
உயிரை விட விளையாட்டே முக்கியம்:
ரொனால்டோவுக்கு 15 வயதில் இதயத்தில் ’டாக்கி கார்டியா’ ( Tachychardia) என்ற பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது ரெனால்டோவிற்கு இரண்டு ஆப்ஷன்கள் இருந்தன ஒன்று உயிருக்கே ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொள்வது, மற்றொன்று வாழ்நாள் முழுவதும் ஓடுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது. ஆனால், தனது கால்பந்து விளையாட்டிற்காக உயிரையே கொடுக்கத் துணிந்த ரொனால்டோ அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
1995ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான மடீராவில் உள்ள 'நேஷனல்' கிளப்பில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதன் பின்னர், 1997ல், 12 வயதான ரொனால்டோ ஸ்போர்ட்டிங் சிபி என்ற கிளப்பிற்காக 1,500 டாலருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். களத்தில் புயலாக செயல்பட்ட ரொனால்டோவின் ஆட்டம் பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பையும், எதிர் அணியினரையும் கடும் போட்டியைக் கொடுத்தது.
அதனையடுத்து, முதல் முறையாக 2003ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் என்ற பெரிய கிளப்பில் இணைந்தார். 18 வயதிலேயே £12.24 மில்லியன் டாலர்களுடன் மான்செஸ்டர் அணிக்காக ஒப்பந்தமான ரொனால்டோ, எஃப்ஏ கோப்பை, சாம்பியன்ஸ் லீக், ஃபிஃபா என மூன்று உலகப் புகழ் பெற்ற கோப்பைகளை தொடர்ச்சியாக வெல்லக் காரணமாக அமைந்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ஊக்கத்தைப் பற்றி பேசுகையில்,
“பெரும்பாலான நேரங்களில், என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன். நான் சுய உந்துதல் மூலம் உற்சாகமடைபவன்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் கால் பந்து விளையாட்டின் மிகவும் உயரிய விருதான பலோன் டி ஆர் (Ballon d'Or) விருதை தனது 23 வயதிலேயே வென்றார்.
பணக்கார விளையாட்டு வீரர்:
2009ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக 94 மில்லியன் ஈரோ டாலருக்கு (சுமார் ரூ.834 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் மூலம் உலகிலேயே அதிகத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ரியல் மாட்ரிட் வீரராக அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை காண மட்டும் சாண்டியாகோ பெர்னாபு மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தது இன்று வரை உலகச் சாதனையாக உள்ளது.
ஆகஸ்ட் 2009 அன்று டிபோர்டிவோ டி லா கொருனாவுக்கு எதிரான லா லிகா ஆட்டத்தில் ரொனால்டோவின் வெறித்தனமான ஆட்டம் மாட்ரிட் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. 23 அக்டோபர் 2010 அன்று, ரேசிங் டி சான்டாண்டருக்கு எதிரான 6-1 வெற்றியின் போது ரொனால்டோ தனது வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு போட்டியில் 4 கோல்களை அடித்தார்.
2010-11 சீசனின் முடிவில், லா லிகாவில் 40 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மாட்ரிட் அணியுடன் லா லீக் தொடர், கோபா தொடர் என அடுத்தடுத்து 15 கோப்பைகளை வென்று கொடுத்து ஒட்டுமொத்த கால்பந்து உலகின் கவனத்தை பெற்றார். மேலும் 2013, 2014, 2016, 2017 என தொடர்ச்சியாக பலோன் டி ஆர் விருதுகளை தட்டிச்சென்றார்.
18 ஏப்ரல் 2017 அன்று, பேயர்ன் முனிச் அணிக்கு எதிராக ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினர். இதன் மூலமாக UEFA சாம்பியன்ஸ் லீக்கில் 100 கோல்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையப் பெற்றார்.
2018ம் ஆண்டு ஜிரோனாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ தனது 50வது கேரியர் ஹாட்ரிக்கை எட்டினார்.
ஜூலை 2018ம் ஆண்டு ஜுவாண்டஸ் அணிக்காக 100 மில்லியன் ஈரோப்பியன் டாலருக்கு ( சுமார் ரூ.850 கோடிக்கு) ஒப்பந்தம் ஆனார். இந்த அணியில் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் விளையாடிய ரொனால்டோ, 2021, ஆகஸ்ட் 31ம் தேதி அன்று ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பினார்.
ரொனால்டோ சொத்து மதிப்பு:
ரொனால்டோ 23.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஜுவென்டஸால் ஆகஸ்ட் 2021ல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2022ம் ஆண்டின் கணக்கின் படி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நிகர மதிப்பு 115 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
கிறிஸ்டியானோ ஒவ்வொரு கால்பந்து போட்டிகளிலும் விளையாட 60 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுகிறார். டெலிவரி ஹீரோ, ஹெர்பலைஃப், எம்டிஜி, நைக், யூனிலீவர் போன்ற பல்வேறு நிறுவனங்களின் பிராண்ட் மாடலாக இருப்பதற்கு மில்லியன் கணக்கில் சம்பளம் பெற்று வருகிறார்.
ரொனால்டோவின் சொந்த நிறுவனமான CR7-யை கண்ணாடிகள், உள்ளாடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை விற்பதன் மூலமாக ஆண்டுக்கு பல மில்லியன் லாபம் சம்பாதிக்கிறார்.
ரொனால்டோவை தற்போது இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஒருபதிவை பதிவிட ஒரு மில்லியன் டாலர்களை வசூலிக்கிறார். இதன் மூலமாக ஆண்டுக்கு ஆண்டுக்கு 47 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார்.
ரொனால்டோ பற்றிய சுவாரஸ்யங்கள்:
- ரொனால்டோவின் தந்தை குடி மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைந்தார். இதனால் அவருக்கு குடி மற்றும் சிகரெட் புகைப்பது போன்ற பழக்கம் கிடையாது.
- சிறு வயதில் ரொனால்டோவிற்கு ‘லிட்டில் பீ’, ‘கிரையிங் பேபி’ போன்ற செல்லப்பெயர்கள் இருந்துள்ளது.
- பிற கால் பந்து வீரர்களைப் போல் ரொனால்டோ உடலில் ஒரு டாட்டூ கூட கிடையாது. ஏனெனில் இவர் ஆண்டு தோறும் தனது சொந்த ஊரில் ரத்த தானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
- சேவ் தி சில்ட்ரன், யுனிசெஃப் மற்றும் வேர்ல்ட் விஷன் மூன்று நிறுவனங்களின் தூதுவராக ரொனால்டோ உள்ளார்.
- 2013ம் ஆண்டு முதன் முறையாக தான் வாங்கிய Ballon d'Or விருதை விற்று, ஆபத்தான நோயால் உயிருக்கு போராடி வரும் குழந்தைகளுக்கு உதவக்கூடிய மேக்-ஏ-விஷ் அறக்கட்டளைக்காக $800,000-க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
- 40 கோல்களை அடித்ததற்காக வழங்கப்பட்ட 2011 ஐரோப்பிய கோல்டன் பூட் விருதை விற்று, போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் பள்ளி கட்டுமானத்திற்காக $1.6 மில்லியன் டாலர்கள் அளவிற்கு நிதி திரட்டியுள்ளார்.
- 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போர்ச்சுக்கலுக்கு 1.3 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளித்துள்ளார்.
- மே 2014ல், ஃபோர்ப்ஸ் உலகின் அதிக ஊதியம் பெறும் வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். அப்போது சம்பளம், போனஸ் மற்றும் ஆஃப் ஃபீல்டு வருவாய் ஆகியவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 73 மில்லியன் ஆகும்.