ரூ.717 கோடி மதிப்பில் மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்!
சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மதுரை மற்றும் திருச்சியில் அமைய உள்ள டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, மதுரை மற்றும் திருச்சியில் அமைய உள்ள டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் தமிழக இளைஞர்களுக்கு ஐடி துறையில் மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க, ஐடி உள்கட்டமைப்பு வசதி கொண்ட டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் கோவையை அடுத்து மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், இரண்டாம் கட்ட நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் மற்றும் திருச்சி அருகே பஞ்சப்பூர் ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க, முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் அடிக்கள் நாட்டினார்.
மதுரை மாட்டுத்தாவணியில், 314 கோடி மதிப்பீட்டில், 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் எட்டு தளங்கள் கொண்டதாக டைடல் பூங்கா அமைய உள்ளது. திருச்சியில், 403 கோடி மதிப்பீட்டில், 5.58 லட்சம் சதுர அடி பரப்பில், தரை தளம் மற்றும் ஆறு தளங்கள் கொண்டதாக டைடல் பூங்கா அமைய உள்ளது.
இந்த பூங்காக்கள் ஐடி, ஐடி.இ.எஸ், பிபிஓ, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட உள்ளன.

தமிழ்நாட்டில் ஐடி புரட்சி சென்னையை கடந்து அனைத்து பகுதிகளுக்கும் விரிவடைந்து வருவதாக, டைடல் பூங்கா அடிக்கல் நாட்டப்படுவது தொடர்பான தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
இந்த இரண்டு புதிய டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் மாநிலத்தில் இரண்டாம் கட்ட நகரங்களில் ஐடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மு.கருணாநிதி முதல்வராக இருந்த போது, சென்னையில் கொண்டு வந்த முதல் டைடல் பூங்கா எப்படி சென்னையை ஐடி துறையில் முன்னிலைக்கு கொண்டு வந்ததோ அதே போல, புதிய டைடல் பூங்காக்கள் மதுரை மற்றும் திருச்சியில் ஆயிரக்கணக்கான ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Induja Raghunathan