இந்தியாவில் அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!
இந்தியாவில் அறிவியல் பிரிவில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் முன்மாதிரிகளாகத் திகழ்பவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
“கரையில் இருக்கும் கப்பல் பாதுகாப்பாகவே இருக்கும், ஆனால் கப்பல் அதற்காக உருவாக்கப்பட்டதல்ல,” என்கிறார் கணிணி வரலாற்றில் முதல் புரோக்ராமர்களில் ஒருவரான கிரேஸ் ஹாப்பர்.
ஆங்கில மொழி போன்றே புரோகிராமிங் லேங்குவேஜ் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கவேண்டும் என்பதே இவரது சிந்தனையாக இருந்தது. இந்த எண்ணமே COBOL என்கிற முதல் கம்ப்யூட்டர் புரோகிராமிங் லேங்குவேஜ் உருவாக்குவதற்கு உத்வேகம் அளித்துள்ளது.
கிட்டத்தட்ட நூறாண்டுகளாகவே பெண்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். 'கம்ப்யூட்டர்’ என்கிற வார்த்தை பெண்கள் அடங்கிய குழுவால் 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண்கள் ஹார்வர்ட் அப்சர்வேட்டரி இயக்குநர் எட்வர்ட் சார்லஸ் பிக்கரிங் அவர்களுக்கு வானியல் தரவுகள் தொடர்பாக உதவியவர்கள்.

இன்று பெண்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
இந்தியாவில் அறிவியல் துறையில் வெவ்வேறு பிரிவுகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளனர். ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக பொறுப்பேற்று இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார்.
புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிரியா அப்ரகாம் இந்தியாவில் கொரோனா வைரஸை பிரித்தெடுத்து நோய்த்தன்மை குறித்து சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கு உதவியுள்ளார்.
டெசி தாமஸ் டிஆர்டிஓ ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் இயக்குநர் ஜெனரல். இவர் இந்தியாவில் ஏவுகணைத் திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் விஞ்ஞானி என்கிற பெருமைக்கு உரியவர். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தத் துறையில் தடைகளைத் தகர்த்தெறிந்து செயல்படத் தொடங்கி தலைமைப் பொறுப்பு வரை முன்னேறியவர் டெசி தாமஸ். இவர் இந்தியாவின் ‘ஏவுகணைப் பெண்’ என்றே அழைக்கப்படுகிறார்.
மங்களா மணி இஸ்ரோவின் போலார் பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். 2016-ம் ஆண்டு 23 பேர் கொண்ட குழுவுடன் இவர் அண்டார்டிகா சென்றார். அண்டார்டிகாவில் உறைபனியில் ஓராண்டிற்கும் மேலாக தங்கியிருந்த முதல் பெண் விஞ்ஞானி என்கிற பெருமைக்குரியவர் இவர்.
’இந்தியாவின் ராக்கெட் பெண்மணி’ என்றழைக்கப்படும் ரிது கரிதால் சந்திராயன்-2 திட்ட இயக்குநராக இருந்தவர்.
இந்தியாவில் இருந்து ராயல் சொசைட்டிக்கு தேர்வான முதல் பெண் டாக்டர் ககந்தீப் காங். பிரபல தடுப்பூசி விஞ்ஞானியாக மதிக்கப்படும் இவர் பலருக்கு உத்வேகம் அளிக்கிறார்.
சந்திரிமா சாஹா உயிரியல் அறிஞர். இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் முதல் பெண் தலைவர்.
ரேணு ஸ்வரூப் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறை செயலராக நாட்டில் பயோடெக்னாலஜியின் பயன்பாட்டை ஊக்குவிக்க அயராது பாடுபட்டு வருகிறார்.
விண்வெளி தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, ஏவுகணை, கணிதம் என பெண்கள் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
மேலும் சாதனை படைக்கவேண்டும்
பெண்கள் பல்வேறு பிரிவுகளில் கால்பதித்து உயர்பதவி வரை முன்னேறி இருந்தாலும்கூட இன்னமும் அவர்கள் ஏராளமான சாதனைகள் படைக்கவேண்டும். இந்தியாவில் கணிசமான அளவு பெண்கள் அறிவியல் படித்தாலும்கூட வெகு சிலரே அதை தொழில்முறையாகத் தேர்வு செய்து தொடர்கிறார்கள்.
இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் போக்கு அல்ல. 67 நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டதில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் அறிவியல் பிரிவில் ஆண்களுக்கு நிகராகவோ அல்லது அவர்களைக் காட்டிலும் சிறப்பாகவோ பெண்கள் செயல்படுகிறார்கள் என்பது உளவியல் மற்றும் அறிவியல் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
STEM பிரிவில் கல்லூரி அளவில் திறன்மிக்கவர்களாக பல மாணவர்கள் திகழும்போதும் அந்தத் துறைகளில் தொடர்ந்து செயல்படுவதில்லை என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு 10 பேர்களிலும் இரண்டிற்கும் குறைவான பெண் ஆராய்ச்சியாளர்களே இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த பொறியியல் மாணவர்களில் 30 சதவீதத்தினர் பெண்கள். ஆனால் ஐஐடி போன்ற பிரபல தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மிகக்குறைந்த சதவீதத்தினரே உள்ளனர். அதேபோல் நாட்டின் மருத்துவ மாணவர்களில் 45 சதவீதத்தினர் பெண்கள் என்றபோதும் எய்ம்ஸ் போன்ற முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த சதவீதத்தினரே உள்ளனர். ‘வுமன் சயிண்டிஸ்ட் ஆஃப் இந்தியா’ ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
சுகாதார பராமரிப்புப் பிரிவில் பெண்களின் பங்களிப்பு
உலகளவில் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவில் கிட்டத்தட்ட 3 டிரில்லியன் டாலர் அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது. இது உலகளவிலான ஜிடிபி-யில் 5 சதவீதம் ஆகும். உலகளவில் செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என சுகாதார பராமரிப்பு பிரிவில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக லேன்செட் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்பங்களைப் பொருத்தவரை 80 சதவீதம் என்கிற அளவில் பெண்களே சுகாதார பராமரிப்பு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை மதிப்பிட்டு பார்த்தோமானால் உலகளவிலான ஜிடிபி-யில் 2.35 சதவீதம் பங்களிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள். பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வரும் போக்கினை இது உணர்த்துகிறது. மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவம் – 85 சதவீதம், மனநல மருத்துவம் – 57 சதவீதம், குடும்ப மருத்துவம் – 58 சதவீதம், குழந்தைகள் மருத்துவம் – 75 சதவீதம் என பெண்கள் மருத்துவத் துறையில் சிறப்பாகப் பங்களித்து வருகிறார்கள்.
மூலோபாய திட்டமிடலில் பெண்களின் பங்களிப்பு அவசியம்
பெண்கள் மனித வளம் போன்ற வழக்கமான துறைகளில் மட்டும் செயல்படாமல் அதிலிருந்து விலகி தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி மற்றும் இதர அறிவியல் சார்ந்த துறைகளில் செயல்பட்டு வருகின்றனர்.
பயோகான் நிறுவனம் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிப்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அறிவியல் ஆராய்ச்சி உட்பட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுகிறது. வெறும் பாலின அடிப்படையில் மட்டுமே பெண்கள் பணியமர்த்தப் படுவதில்லை. அவர்களுக்கு சிறப்பாக சக்தியளிக்கப்படும் வகையில் உகந்த சூழலையும் வசதியையும் ஏற்படுத்திக்கொடுக்கிறோம். பயோகான் நிறுவனத்தின் அறிவியல் சார்ந்த திறன்மிக்கவர்களில் 40-45 சதவீதம் பேர் பெண்கள்.
முன்மாதிரிகள் தேவை
இந்தியாவில் அறிவியல் பிரிவில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் முன்மாதிரிகளாகத் திகழ்பவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். எனவே அடுத்த தலைமுறை பெண் விஞ்ஞானிகளைத் தயார்படுத்தும் சவால் நிறைந்த பணியை நாம் கையிலெடுக்கவேண்டும்.
இன்று உலகமே இந்தியாவை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகிறது. எந்த ஒரு துறையாக இருந்தாலும் சாதனை படைக்கமுடியும்; ஆண்களுக்கு நிகராக போட்டியிடமுடியும்; தலைமைப் பொறுப்பு வகிக்கமுடியும்; மற்ற பெண்களுக்கு முன்மாதிரிகளாகத் திகழமுடியும்; இந்த தன்னம்பிக்கை பெண்கள் மனதில் உள்ளது. இத்துடன் கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருக்குமானால் பெண்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் நிச்சயம் சாதிக்கமுடியும்.
இந்தியாவில் அறிவியல் பிரிவில் பெண்களின் பங்களிப்பு மெல்ல அதிகரித்து வருவது அவர்களுக்கு உகந்ததாக சூழல் மெல்ல மாறி வருவதையே உணர்த்துகிறது. இந்த எண்ணிக்கையானது வரும் நாட்களில் மென்மேலும் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
இந்நிலையில் பெண்களின் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, கடினமான நேரங்களில் ஆதரவளிக்கும் சூழலே அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்தியாவில் பெண் விஞ்ஞானிகள் சிறப்பிக்க இது உகந்த நேரம் என்பதே என் கருத்து. புத்தாக்க சிந்தனைகளுடன் தங்கள் உள்ளுணர்வு, அறிவுத்திறன், சிக்கல்களில் இருந்து விரைந்து மீளும் திறன், அர்ப்பணிப்பு போன்றவையே பெண்களிடம் தேவைப்படுகிறது.
பரிவு, உணர்திறன், ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளை செய்யும் திறன், சிறப்பிக்கவேண்டும் என்கிற மன உறுதி ஆகியவை பெண்களிடம் இயற்கையாகவே இருக்கும் குணாதிசயங்கள். அவர்கள் இவற்றை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இவை சரிவிகிதத்தில் இருக்குமானால் எத்தகைய தடைகளையும் எளிதாகத் தகர்த்தெறிந்து வெற்றியை வசப்படுத்தலாம்.
பெண்களுக்கு அறிவியல் புரியாது என்கிற சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தை நாம் ஒன்றிணைந்து மாற்றவேண்டும்.
“நம்மிடம் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கவேண்டும். ஏதோ ஒன்றை சாதிக்கும் திறன் நம்மிடன் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் அதை சாதித்துக்காட்டவேண்டும,” என்கிறார் நோபல் பரிசு வென்ற அறிவியல் மேதை மேரி கியூரி.
ஆங்கில கட்டுரையாளர்: கிரண் மசூம்தார் ஷா | தமிழில்: ஸ்ரீவித்யா