முதல் முயற்சியிலேயே யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற விவசாயி மகன்!
யூபிஎஸ்சி தேர்வுகளில் 8வது இடம் பிடித்த விவசாயி மகன்!
மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் உள்ள ஒரு விவசாயியின் மகன், யூபிஎஸ்சி தேர்வுகளில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று, லாக்டவுன் என 2020 கடினமான ஆண்டாக கடந்தாலும் பல மனித நேயக் கதைகள், வெற்றிக்கதைகள் நாம் கேட்கமுடிந்தது. அப்படி எழுச்சியூட்டும் கதைகளின் பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பது மகாராஷ்டிராவின் விவசாயி மகனின் கதை. சோலாப்பூர் மாவட்டம் பார்ஷி தாலுகாவைச் சேர்ந்தவர் ஷரன். அவரின் தந்தை கோபிநாத் காம்ப்ளே வயலில் கூலி வேலை செய்பவர். தாய் சுதமதி காய்கறிகளை விற்கும் வேலை பார்க்கிறார்.
இவர்கள் இருவரின் வருமானம் அவ்வளவு பெரிதாகக் கிடையாது. அவர்களின் நிதிப் போராட்டங்கள் காரணமாக, குடும்பம் வறுமை நிலையில் இருந்து வந்துள்ளது. இருந்தாலும், அவர்கள் ஷரனை யூபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கு அனுப்பினர். கஷ்டங்களை பெரிதுபடுத்தாமல், மகனின் ஆசைக்கு வழிவிட்டனர்.
ஷரனின் மூத்த சகோதரர் பி.டெக் படிப்பை முடித்திருக்கிறார். இவர் படித்துமுடித்த பின்பு வேலைக்கு செல்ல அவர்களது குடும்பத்தின் கஷ்டம் ஓரளவுக்கு குறைந்துள்ளது. இது வேறு எந்த இடையூறும் இல்லாமல் ஷரனுக்கு தனது படிப்பை மேலும் தொடர உதவியது.
அதற்கேற்ப ஷரனும் படித்தார். ஷரன் தனது எம்.டெக்கை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் 2018ல் முடித்தார். முதுகலைப் படிப்பை முடித்த பின்னர், ஒரு தனியார் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் அதிக சம்பளம் வாங்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது, ஆனால் யூபிஎஸ்சி தேர்வுகளில் கவனம் செலுத்துவதற்காக அவர் அதை நிராகரித்தார்.
பின்பு யூபிஎஸ்சி தேர்வுகளில் தீவிர கவனம் செலுத்தி படித்து வந்துள்ளார் ஷரன். ’முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கேற்ப ஷரனின் முயற்சி கைக்கூடியது. தனது முதல் முயற்சியில் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதுவும் 8வது இடம்பிடித்து. அவரது மாவட்ட மற்றும் ஊர் மக்கள் இந்த இளம் பையனின் வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியடைந்து கொண்டாடி வருகின்றனர்.
வெற்றி தொடர்பாக பேசிய ஷரனின் தந்தை கோபிநாத் காம்ப்ளே,
"எனது மகன் எதைச் சாதித்தான் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் என்ன செய்தாரோ அதுவே அவரை ஒரு மாஸ்டர் ஆக்கியது என்பது மட்டும் எனக்குத் தெரியும்," என்று இந்தியா டுடே பேட்டியில் உணர்ச்சி பெருக்குடன் கூறியுள்ளார்.
உழைப்புக்கேத்த ஊதியம் என்பது ஷரனின் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நாமும் அவரை வாழ்த்துவோம்.
வாழ்த்துக்கள் ஷரன்!
கட்டுரை: Think Change India | தமிழில்: மலையரசு