Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

10,000 மரங்களுடன் 10 ஏக்கரில் பசுமைக் காடு: கவனம் ஈர்க்கும் கர்நாடக பல்கலை.யின் ‘ஜன வனம்’!

கர்நாடகாவில் எவ்வித லாப நோக்கமும் இன்றி மண்ணையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விதமாக ‘மக்கள் வனம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு நன்மை பயக்கும் ஒரு காடே உருவாக்கப்பட்டுள்ளது.

10,000 மரங்களுடன் 10 ஏக்கரில் பசுமைக் காடு: கவனம் ஈர்க்கும் கர்நாடக பல்கலை.யின் ‘ஜன வனம்’!

Thursday March 09, 2023 , 3 min Read

மண்ணுக்கு மட்டுமல்ல, மனித வாழ்க்கைக்கும் பாதுகாப்பாக விளங்கும் மரங்களை சாலை விரிவாக்கம், கட்டுமானம் போன்ற பணிகளுக்காக வெட்டப்படுவது மிகப் பெரிய சுற்றுச்சூழல் அபாயத்தை உருவாக்கக்கூடும் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள கடக் மாவட்டத்தின் வடக்கு சமவெளியில் பசுமையான காடுகளை உருவாக்கும் முயற்சியாக 'ஜன வன', அதாவது ‘மக்கள் வனம்’ என்ற திட்டம் கவனம் ஈர்த்து வருகிறது.

‘ஜன வனம்’ திட்டம் என்றால் என்ன?

விவசாயத்தை பாதுகாக்கும் விதமாகவும், தனி மனிதனின் உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலும் உணவுக் காட்டை உருவாக்குவது பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஆனால், கர்நாடகாவில் எவ்வித லாப நோக்கமும் இன்றி மண்ணையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விதமாக 'ஜன வன' (மக்கள் வனம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காடுகளை அழித்து கட்டிடங்களை உருவாக்குவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கவும் கர்நாடக மாநில ஊரக வளர்ச்சி அமைப்பு, பஞ்சாயத்து ராஜ் பல்கலைக்கழகம் (KSRDPRU), சங்கல்பா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி மற்றும் எஸ்பிஐ அறக்கட்டளை ஆகியவை ஒன்றிணைந்து 'ஜன வன' (மக்கள் வனம்) திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கப்பதகுடா பகுதியில் ஜன வனம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மூலிகை மற்றும் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த காடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பல்லுயிர் பெருக்கம்:

பஞ்சாயத்து ராஜ் பல்கலைக்கழகத்திற்கு கப்பதகுடா அருகே உள்ள நாகாவி கிராமத்திற்கு அருகே 350 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 125 ஏக்கர் நிலம் கட்டிடம் கட்ட ஏற்றது அல்ல என சான்றளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிலத்தில் சுமார் 10 ஏக்கரை காடு வளர்ப்புக்கு பயன்படுத்தலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்தது. இவ்வாறு காட்டை உருவாக்குவது பல்லுயிர் பெருக்கத்திற்கு மட்டுமின்றி, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும் என தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து துணைவேந்தர் பேராசிரியர் விஷ்ணுகாந்த் சத்தப்பள்ளி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, சங்கல்பா மற்றும் எஸ்பிஐ அறக்கட்டளையுடன் கைகோர்த்து பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Jana

2022-ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று (ஜூன் 5) தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் படி, தற்போது வரை இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அடுத்ததாக 15 ஆயிரம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தில் ஷீ-ஓக், நெல்லி, புங்கன், சிவப்பு மந்தாரை, மஹோகனி போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

காடு வளர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு பல்கலைக்கழக ஊழியர் கூறுகையில், “10 ஏக்கர் நிலப்பரப்பை பசுமை மண்டலமாக மாற்றியுள்ளோம். எஸ்பிஐ அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளுக்கு மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது” என்றார்.

மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமின்றி அவற்றிற்கு தினந்தோறும் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. கால்நடைகள் மற்றும் பிற விலங்குகள் வனப்பகுதிக்குள் நுழையாமல் இருக்க ஜன வனத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

சங்கல்பாவைச் சேர்ந்த சிக்கந்தர் மீராநாயக் கூறுகையில், ​​“கோடை காலத்தில் செடிகளைப் பராமரிப்பது கொஞ்சம் சிரமமாக இருப்பதால், இப்போதிலிருந்தே அதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். தற்போது டேங்கர்களை பயன்படுத்தி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதுடன் செயற்கை குளத்தையும் உருவாக்கி வருகிறோம். திட்டத்தில் எங்களை ஈடுபடுத்தியதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், நிதியளித்த SBI அறக்கட்டளைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜன வன திட்ட நன்மைகள்:

தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் ஜன வனம் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தக் காடானது பல்வேறு வகையான பறவைகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது. தரிசாக கிடந்த நிலத்தை செப்பனிட்டு மரக்கன்றுகளை நட்டு வளர்த்ததால், ஒன்றுக்கும் உதவாது என நினைத்த நிலம் இன்று பல்வேறு வகையான உயிரினங்கள் வாழும் புகலிடமாக உருபெற்றுள்ளது.

பறவைகள், உயிரினங்களுக்கு மட்டுமின்றி இந்தக் காடு தற்போது மனிதர்களுக்கும் பயனுள்ளதாக மாறியுள்ளது. ஆம், தினமும் காலையில் ஆரோக்கியமான ஆக்ஸிஜனை சுவாசிக்கவும், இளைப்பாறவும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Jana
எஸ்பிஐ அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சித்தலிங்கேஷ் கூறுகையில், ​​“காடு வளர்ப்பை ஊக்குவிக்க இந்த தனித்துவமான வனவியல் முயற்சியை நாங்கள் தொடங்கினோம். இது சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பதற்காக உள்ளூர் இன மரங்களை வளர்ப்பதன் மூலம் காடுகளை புத்துயிர் பெறச் செய்துள்ளது” என்கிறார்.

இதன் மூலம் கிடைத்த உத்வேகத்தை அடுத்து ‘ஜன வன’ திட்டத்தை சமூக காடு வளர்க்கும் திட்டமாக மாற்ற குழு முயற்சித்து வருகிறது. பயன்படுத்தப்படாத அல்லது தரிசு நிலங்களில் அதிக அளவிலான மரக்கன்றுகளை நட்டு மிகப்பெரிய காடுகளை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி