வெறும் 19 வயதில்; ரூ.1000 கோடி சொத்து - Zepto நிறுவனர்கள் சாதித்தது எப்படி?
Zepto நிறுவனர்கள் 19 வயது ஆதித் பலிச்சாவும், கைவல்யா வோஹ்ராவும் இளம் வயதில் சுயமாகத் 1000 கோடி ரூபாயை சம்பாதித்து 2022ம் ஆண்டுக்கான ஹுருன் இந்திய பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றனர். இது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!
நம்மூரில் அப்பத்தா, தாத்தாமார்கள் அவசரத்துக்கு பிறந்தவன் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி கேட்டிருப்பீர்கள். அதாவது, எதிலும் ஒரு அவசரம், அறக்க பறக்க என வேலைகளை கையாள்வது என்று இருப்பவர்களை அவ்வாறு அழைப்பர்.
அப்படி, அவசரத்துக்கு பிறந்தவர் தான் ஆதித் பலிச்சா. டீன் ஏஜ் பருவத்திலே வணிக உலகத்து காலடி எடுத்து வைத்தால் மட்டுமின்றி அவரை அப்படி அழைக்கவில்லை. அவரது ஸ்டார்ட் அப் நிறுவனமான 'ஜெப்டோ’ பல அனுபவமிக்க தொழில்முனைவர்கள் கனவு கண்டவற்றையும் அவசர அவசரமாக நிகழ்த்தி அசத்தியுள்ளது.
19 வயதில் சாதித்த இளம் நிறுவனர்கள்
'ஜெப்டோ’ நிறுவனம் தொடங்கிய 5 மாதங்களிலே அதன் மதிப்பை 570 மில்லியன் டாலராக உயர்த்தியது, பெரும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து முதலீடுகளை குவித்தது, இந்தியாவின் பெரு நகரங்களின் அதன் சேவையை விரிவுபடுத்தியது என வெறும் ஒரு வயதான ஸ்டார்ட் அப் நிறுவனம் அடைந்த மைக்கல்கள் ஏராளம்.
அதில், சமீபத்தில் ஜெப்டோவின் நிறுவனரான ஆதித் பலிச்சாவும், இணை நிறுவனரான 19 வயதான கைவல்யா வோஹ்ராவும் இளம் வயதில் சுயமாகத் 1000 கோடி ரூபாயை சம்பாதித்து 2022ம் ஆண்டுக்கான ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்திய பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
யார் இந்த ஜெப்டோ நிறுவனர்கள்? அதன் பின்னாலுள்ள கதை தான் என்ன?
9 வயதிலிருந்து நண்பர்களான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சாவும் துபாயில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளனர்.
மேற்படிப்பிற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம். அங்கு கணினி பொறியியல் படிப்பை முழுதாய் மேற்கொள்ளாமல் பாதியிலே கைவிட்டுள்ளனர். அதற்குக் காரணம் தொழில்முனைவு மீது அவர்களுக்கு ஏற்பட்ட நாட்டம்.
தொழில்முனைவர்களாக வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். ஆனால், அதற்கு முன்னரே ஆதித் பலிச்சா அவருடைய 17வது வயதில் தொழில்முனைவு பயணத்தைத் தொடங்கியுள்ளார். துபாயில் படித்து கொண்டிருந்த போதே மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து காரில் பயணிக்கும் வகையிலான சேவையை வழங்கும் 'கோஃஃபுல்' எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
அதன்பின், கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தியா திரும்பிய அவர்கள் மும்பையில் வசித்துள்ளனர். இரண்டு பேச்சிலர்களுக்கு வாடகைக்கு வீடு எனும் சவாலான விஷயத்தைகூட கையாண்ட அவர்களால், நேரத்திற்கு அத்தியாவசிய மற்றும் மளிகைப் பொருட்களை பெற முடியாமல் தவித்துள்ளனர்.
பெரும் தொற்றின் பொது முடக்கத்தின் காரணமாக சந்தையில் ஏற்கனவே கோலோச்சியிருந்த விநியோக நிறுவனங்களும் அதன் சேவைகளை தொடர்வதில் சிக்கலை சந்தித்தது. மளிகைப் பொருட்கள் கிடைப்பதற்கு 5 முதல் 6 நாட்கள் அவகாசமாகியுள்ளது. நேரடியாக கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதும் முடியாத காரியமாக இருந்துள்ளது.
இதில் விரக்தியடைந்த இருவரும் அவர்களே, அவர்களது சுற்றுப்புறத்தாருக்கும் பொருட்களை விநியோகிக்கும் சேவையை வழங்கத் தொடங்கியுள்ளனர். மும்பையில் உள்ள உள்ளூர் கடைகளில் இருந்து மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் தளமான 'கிரானாகார்ட்' என்ற ஸ்டார்ட்அப்பை ஆரம்பத்தில் துவக்கினர்.
2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மார்ச் 2021 வரை செயல்பாட்டில் இருந்த அந்த ஸ்டார்ட்அப் முயற்சியே பின்னாளில் 'Zepto' எனும் நிறுவனமாக வளர்ந்தது.
"உலகின் மிகப் பெரிய துறைகளில் ஒன்றான இந்திய மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் துறை, சில செயல்திட்டப் பிழைகளுடன் சிக்கியிருப்பதாக நாங்கள் உணர்ந்தோம்," என்று டெக்சர்ச் இணையதளத்திடம் பகிர்ந்துள்ளார் ஆதித்.
Zepto-வின் '10 நிமிட டெலிவரி' பார்முலா...
"10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் புதுமையை உருவாக்கிட நாங்கள் முயற்சிக்கவில்லை. ஆர்டர் செய்து 4 முதல் 5 நாட்கள் பொருட்களின் டெலிவரிக்காக காத்திருக்கும் மக்களுக்கு அதைவிட குறுகிய காலத்தில் பொருட்களை விநியோகிக்கும் சேவையை வழங்கிடவே நினைத்தோம்.
தொடக்கத்தில் 30 நிமிடங்கள் மற்றும் 45 நிமிடங்களுக்கு உள்ளாக பொருட்களை விநியோகிக்க முயற்சித்தோம். இறுதியில் மிக விரைவான டெலிவரிகளில் பரிசோதனை செய்ய ஆரம்பித்தோம். வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த ரியாக்ஷன்கள், நிகர ஊக்குவிப்பாளர் மதிப்பெண் அட்டவணை, பயன்பாட்டின் அதிர்வெண் மற்றும் பிற தரவுகளின்
அடிப்படையில் 15 நிமிட டெலிவரியாக குறைந்தது. வாடிக்கையாளர்கள் தங்கள் மளிகைப் பொருட்களை குறைந்தது வாரத்திற்கு 3-4 முறை பெறுகிறார்கள். நீங்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை செய்யும் போது, அதிலிருக்கும் சில சிக்கல்களை ஏற்றுக்கொள்வது கடினம்.
10-15 நிமிடங்களுக்கு அப்பால் அந்த சிக்கல்கள் நிலவியது. அப்போது தான் எங்களது 10 நிமிட விநியோக பார்மூலாவின் வெற்றியை உணர்ந்தோம்.
நாங்கள் மிகவும் தரவு சார்ந்த நிறுவனமாகும். மேலும், ஜெப்டோ- வை பயன்படுத்திய மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்ற தரவுகளே 10 நிமிட டெலிவரி தேவையா என்பதற்கு சாட்சி!
வாடிக்கையாளர்கள் 10 நிமிட டெலிவரி சேவையைப் பயன்படுத்துகின்றனர். மேலும், அவர்கள் அதை மீண்டும் பெற விரும்புகிறார்கள். நீங்கள் மாதத்திற்கு நான்கு முறை ஓட்டல் உணவைப் பெறுகிறீர்கள் என்றால், வாரத்திற்கு நான்கு முறை மளிகைப் பொருட்களையும் பெறுவீர்கள். ஏனென்றால், வீட்டில் சாப்பிடுவதை விட வெளி உணவை எத்தனை முறை சாப்பிடுகிறீர்கள்?
”மளிகைப் பொருட்களை ஒரு பெரிய சந்தையாக நாங்கள் பார்க்கிறோம். இது ஒட்டுமொத்த உணவு விநியோகத்தை விட 3-4 மடங்கு பெரியதாக இருக்கும். 10 நிமிட டெலிவரி பற்றி யாரும் உண்மையில் அக்கறை கொள்ளவில்லை என்றால், மிகவும் அதிநவீன முதலீட்டாளர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்று ஒரு பெரிய நிறுவனத்தை நாங்கள் உருவாக்க முடியாது," என்று தி வீக் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார் ஆதித்.
வெறும் 19 வயதில்... ரூ.1000கோடி சொத்து...
இந்தியாவில் பெரிய டெலிவரி நிறுவனங்களான பிக்பாஸ்கெட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், ஜொமாட்டோ நிறுவனத்தின் ப்ளிங்கிட், கூகுள் நிறுவனத்தின் டன்ஸோ, அமேசான், ஃப்ளிப்கார்ட் முதலான நிறுவனங்களுக்குப் போட்டியாக களம் இறங்கியுள்ள ஜெப்டோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வர்த்தகத்தைத் துவங்கிய ஒரு வருடத்திற்குள்ளே 3 முறை முதலீட்டைத் திரட்டியுள்ளது.
ஒய்சி என்ற முதலீடு பெற்றுத் தரும் நிறுவனத்தின் ஏலத்தின் போது ஜெப்டோ நிறுவனம் முதல் சுற்றில் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈன்றுள்ளது. பெரும் தொகையை முதலீடாக பெற்ற நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தின் போது சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது.
இதையடுத்து, கடந்த மே மாதம் இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை 11 நகரங்களில் விரிவாக்கம் செய்து 200க்கும் அதிகமான டார்க் ஸ்டோர்களை உருவாக்கி 900 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் புதிதாக 200 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகப் பெற்று இணையதள விநியோக நிறுவனங்களுக்கு மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா கூட்டணி ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்டு வரும் பணக்காரர்கள் பட்டியலை, சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், 19 வயதான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா ஆகிய இருவரும் இந்தியாவில் இளம் வயதில் சுயமாகத் 1000 கோடி ரூபாயை சம்பாதித்து பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில், 90களில் பிறந்த 13 பேர் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் கைவல்யா வோஹ்ரா-வின் சொத்து மதிப்பு சுமார் 1,000 கோடி ரூபாய் உடன் இப்பணக்காரர்கள் பட்டியலில் 1,036 வது இடத்தில் உள்ளார்.
இதேபோல், ஆதித் பலிச்சா 1,200 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இப்பணக்காரர்கள் பட்டியலில் 950வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் பொதுவாக 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள்.
இது வரையில் எப்போதும் இல்லாத வகையில் 2022 ஆம் ஆண்டுப் பட்டியலில் சுமார் 1,103 பேர் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளம் பணக்காரரின் வயது 37 ஆக இருந்தது. இன்று 19ஆக வளர்ச்சியடைந்துள்ளது என ஹுருன் இந்தியா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.