தனி ஆளாக 5 ஏக்கரில் ஒரு காட்டை உருவாக்கிய 85 வயது பாட்டி!
புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஒரு பெரிய பிரச்சனையாக வெடிக்கும் முன்னரே சுற்றுச் சூழலை காக்கும் பொறுப்பை தனியாளாக கையில் எடுத்து 40 வருடங்களாக இன்றும் பேணி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த 85 வயதான பாட்டி.
ஆலப்புழா முத்துக்குலம் நகரத்தைச் சேர்ந்த கொள்ளக்கையில் தேவகி அம்மா தனியாளாக ஒரு காடை உருவாக்கி அதை காத்து வாருகிறார். 6 சகாப்தங்களுக்கு முன் 70களில் தனது சொந்த 5 ஏக்கர் நிலத்தில் மரங்களை நடத் துவங்கினார். பல வருடம் கழித்து இன்று அது ஒரு பெரும் காடாக வளர்ந்துள்ளது. இதை செய்யத் துவங்கிய இவர் சுற்றுச்சூழல் விஞ்ஞானியோ அல்லது காடியல் நிபுணரோ அல்ல; உலக வெப்பமயமாதல் அல்லது சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய எந்த கருத்தரங்கிலும் கலந்து கொள்ளவுமில்லை. இவரது நோக்கம் எல்லாமே மரங்களால் மட்டுமே பூமியை காக்க முடியும் என்பது தான்.
தேவகி அம்மா திருமணத்திற்கு பிறகு தனது மாமியாருடன் இணைந்து விவசாயம் செய்யத் துவங்கினார். இது குறித்து ஒரு ஆவணப்படத்தில் பேசிய அவர்,
“எங்கள் குடும்பத்தில் பல வருடங்களாக பெண்களே விவசாயத்தை பார்த்துக்கொள்கிறோம் ஆண்கள் பெரும் நிறுவனங்களில் பணிப்புரிவார்கள். என மாமியார் வீட்டுடன் விவாசயம் செய்யத் துவங்கி இயற்கை மீது பற்று ஏற்பட்டது,” என்கிறார்.
அதன் பின் ஒரு விபத்தில் சிக்கயதால் தேவகி அம்மாவால் சில வருடம் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தனது மாமியாருக்கும் வயது முதிர்ச்சியால் முன்பு போல் விவசாயத்தில் ஈடுபட முடியாமல் போக, விவசாயத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.
இதனால் மனமுடைந்த தேவகி அம்மா, விபத்து ஆன 3 வருடங்களுக்குப் பிறகு இயற்கை மீது தனக்கு இருந்த ஈர்ப்பால் தனது வீட்டின் பின்புறத்திலே ஓர் மரத்தை விதைத்தார். ஒரு மரம் இரண்டாக மாற இன்று காடாக வளர்ந்துள்ளது.
மனைவியின் ஆசையை தெரிந்துக்கொண்ட தேவகி அம்மாவின் கணவர் கோபால கிருஷ்ணப்பிள்ளை தினமும் பல வகையான விதைகளை தன் மனைவிக்காக வாங்கி வந்துள்ளார். தான் இறந்து போகும் வரை மறக்காமல் தினமும் ஒரு விதைகளை கொடுத்துள்ளார் இவர்.
இதனால் இன்று 1000 கணக்கான 200 இன மரங்கள், பல அரிய தாவரங்கள், மருத்துவத் தாவரங்கள் மற்றும் புதர்கள் உள்ளது. இவர் உருவாக்கிய இந்த காடை தாவரவியல் மற்றும் இயற்கை வளத்தைப் பற்றி படிக்கும் பலர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
மரங்கள் மட்டுமின்றி; தண்ணீர் தேங்க இரு குட்டைகள், ஆடு மாடு என்ற பல கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். தேக்கு, புளி, மாம்பழம், மூங்கில், பைன் போன்ற மரங்களை அதிகமாக ஆர்கானிக் முறையிலே வளர்கிறார். இவரது காட்டில் இருக்கும் 1000 மரங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் கிடைக்கிறது.
அது மட்டுமின்றி பல அறிய வகை பறவைகளும் இடம்பெயரும் காலத்தில் இவரது காட்டை நோக்கி வருகின்றன. இது குறித்து பெட்டர் இந்தியாவிற்கு இவர் அளித்த பேட்டியில்,
“மிருகங்களும், பறவைகளும் காட்டிற்குள் வர வேலி போடுவதற்கு பதிலாக; கூண்டுகளும், தண்ணீர் வசதியும் செய்து வைத்தேன். அதன் விளைவாக இன்று என் காட்டில் குரங்குகள், மயில்கள், அமுர் ஃபால்கன், ப்ளூஹெரோட், பிளாக் விங்ஸ் ஸ்ட்ரீட் அண்ட் எமரால்டு டோவ் போன்ற அதிசயப் பறைவகள் உண்டு,” என தெரிவிக்கிறார்.
தினமும் காலை காட்டில் ஒரு 5 நிமிடமாவது செலவிடுகிறார் தேவகி அம்மா, புது மரங்களை நடுவது, மரங்களுடன் பேசுவது என தன் காலைப் பொழுதை கழிக்கிறார். இவரது பாதையைப் பின்பற்ற தேவகி அம்மாவின் ஒரு பேத்தி தாவரவியல் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.
நாட்டின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் இவரது செயலை பாராட்டி இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவரகளிடம் இருந்து ’நாரி சக்தி புரஸ்கார்’ விருதைப் பெற்றுள்ளார். இது அவருக்குக் கிடைத்த இரண்டாவது தேசிய விருது. இதற்கு முன்பு இந்திரா பிரியதர்ஷினி வ்ரிக்ஷமித்ரா விருதை பெற்றுள்ளார். இதோடு பல மாநில விருதகளையும் பெற்று குவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக இவர் செய்யும் இந்த செயல் இவரின் கார்பன் அடிச்சுவடுகள் மட்டுமின்றி இவரது வாரிசுகளின் கார்பன் அடிச்சுவடுகளையும் அழித்து வருகிறது. இது போன்ற எழுச்சிப் பயணங்களை படித்தாவது மரத்தின் தேவையை புரிந்துக்கொள்வோம்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: கேரளா டூரிசம்