150 அரிய வகை சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 150 வகையான பாரம்பரியான சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாத்து வரும் 27 வயது இளம் பெண் கவனம் ஈர்த்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 150 வகையான பாரம்பரியான சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாத்து வரும் 27 வயது இளம் பெண் கவனம் ஈர்த்து வருகிறார்.
காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு, தண்ணீர் தட்டுப்பாடு, விதை முதல் உரம் வரை ரசாயன கலப்பு என பல பிரச்சனைகள் இந்திய வேளாண்மைக்கு பெரும் சவாலாக அமைந்தாலும், அதனை காக்கவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றிச் செல்லவும் அடுத்தடுத்து விவசாயிகள் இளம் தலைமுறையில் இருந்தும் வர ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஒருவர் பாரம்பரிய விதைகளின் மீட்பராக விளங்கி வருகிறார்.
பழங்குடியின பெண்ணின் சாதனை:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவை ’தினை சாகுபடி’ மற்றும் ஆராய்ச்சியின் உலகளாவிய மையமாக மாற்ற கடுமையாக முயற்சித்து வருகிறது. உலகிலேயே சிறு தானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஏமன், எகிப்து, துனிஷியா, ஓமன், சவுதி அரேபியா, லிபியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சிறு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், நடந்து முடிந்த 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூட கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் போன்ற பல்வேறு முக்கிய வேளாண் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரி மாவட்டத்தில் சில்பாடி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பைகா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் லஹரி பாய். இவர் தனது சிறிய வீட்டில் இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றை சமையலறையாகவும், மற்றொன்றை பாரம்பரிய விதைகளுக்கான சேமிப்பகமாகவும் மாற்றியுள்ளார்.
150 வகை விதைகள்:
கருவரகு, சாமை, வெள்ளை தினை, ராகி, பனி வரகு உள்ளிட்ட பாரம்பரிய சிறுதானியங்களின் விதைகளை சேமித்து வரும் லஹரி பாய், முதலில் அவற்றை தனது நிலத்தில் விதைத்து, விளைவித்துள்ளார். அதன் பின்னர்,, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை பத்திரமாக சேமித்து வைத்ததோடு, அதனை சுற்றியுள்ள 15 முதல் 20 கிராம விவசாயிகளுக்கு வழங்கி விதை உற்பத்திக்கும் உதவி வருகிறார்.
லஹரி பாயின் விதைகள் தற்போது 54 கிராமங்கள் வரை பரவியுள்ளன. குறிப்பாக பைகா பழங்குடியினர்களுக்கு விதைகளை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறார். அதற்கு பதிலாக விவசாயிகள் விளைச்சலில் கிடைக்கும் சிறிய பகுதியை லஹரிக்கு பரிசாக வழங்கி வருகின்றனர்.
"மக்கள் என்னை கேலி செய்தார்கள் மற்றும் என்னை புறக்கணித்தார்கள். ஆனால், எனக்கு இரண்டு பணிகள் மட்டுமே சரியாக இருக்கும் என நினைத்தேன். ஒன்று திருமணம் செய்து பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய வேண்டும், இரண்டாவது தினை விதைகளை பாதுகாத்து அவர்களின் விவசாயத்தை மேம்படுத்துவது, இப்போது யாரும் என்னை அவமானப்படுத்துவதில்லை,” என்கிறார்.
ஜோதூரைச் சேர்ந்த ஐசிஏஆர் ஒன்றின் விரும்பத்தக்க ’10 லட்சம் உதவித்தொகைக்கு லஹரியை பரிந்துரைத்துள்ள திண்டோரி மாவட்ட ஆட்சியர் விகாஸ் மிஸ்ரா, “ஒருவேளை லஹரிக்கு அந்த உதவித்தொகை கிடைத்தால், பிஎச்டி மாணவர்களுக்கே அவர் வழிகாட்டியாவார்,” எனக்கூறியுள்ளார்.