ஐடி To அக்ரி: சந்தன மர வளர்ப்பில் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருமானம் ஈட்டும் ஹோசச்சிகுரு!
ஹோசச்சிகுரு என்ற இந்நிறுவனம் வேளாண் வனத் துறையில் கவனம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இவர்கள் எப்படி இத்தனை வருமானம் ஈட்டமுடிகிறது?
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் அசோக் ஜே மற்றும் ஸ்ரீராம் சிட்லூர் ஆகியோர் தங்களின் நடுத்தர வயதில், தங்களின் ஓய்வூதிய இலக்குகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து விலகி இயற்கையோடு இணைந்திருக்கும்படியான ஓர் வித்தியாசமான வாய்ப்பை அவர்கள் தேடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் 2008ஆம் ஆண்டு அரசாங்கத்தின் தாராளமயமாக்கல் கொள்கையால், சந்தன மர சாகுபடியை மேற்கொள்ள அவர்கள் ஆர்வமாக இருந்தனர். இதையடுத்து, தங்களின் திட்டத்தைச் செயல்படுத்த தோதான நிலத்தைத் தேடத் தொடங்கினர். இதற்காக தங்களின் வார இறுதி ஓய்வு நாள்களில் கிராமப் பகுதிகளுக்கு பயணம் செய்து தங்களின் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.
2 வருட உழைப்புக்குப் பிறகு, அவர்கள் தேடியதுபோன்ற நிலத்தை கண்டறிந்தனர். இந்த இடம் ஆந்திராவின் ராயதுர்க் ஆகும். அங்கு சந்தனத்தை பயிரிடத் தொடங்கினர்.
இதுகுறித்து இவர்களின் குழுவில் இணைந்து தற்போது விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்கிவரும் ஸ்ரீநாத் செட்டி (37) எஸ்எம்பி ஸ்டோரியிடம் தெரிவித்ததாவது,
“அசோக் மற்றும் ஸ்ரீராம் இயற்கையை நேசிக்கிறார்கள். எனவேதான் விவசாயத்தை தேர்ந்தெடுத்து, தாங்களும் உயர்வதோடு, விவசாயத்தில் நுழைய விரும்புவோருக்கும் உதவி செய்து வருகிறார்கள். இதற்காக அசோக் மற்றும் ஸ்ரீராம்வ்ஆகியோர் தங்கள் சேமிப்பிலிருந்து மொத்தம் ரூ.1 கோடிவரை முதலீடு செய்து, தங்களின் வேளாண் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்காக முதல் விதைகள் அசோக்கின் மூதாதையர் சொத்தில் 30 ஏக்கர் நிலத்தில் விதைக்கப்பட்டன. ஆம் சந்தன மணத்தோடு, சந்தனத் தோட்டமாக இவர்களின் வேளாண் பணி தொடங்கியது. குறிப்பாக இருவரும் தகவல்தொழில்நுட்பத் துறையில் முழுநேர பணியில் ஈடுபட்டு இருப்பதால், அவர்களால் விவசாய நிலங்களுக்கு அடிக்கடி வருகை தர இயலாது. எனவேதான், அவர்கள் 15 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் சந்தன மரங்களை வளர்க்க முடிவு செய்தனர். மேலும், இது அதிக லாபம் அளிக்கக் கூடியதாகவும் இருந்தது என்கிறார் ஸ்ரீநாத்.
மேலும் அவர் கூறுகையில்,
இந்தியாவில் நவீன விவசாயத்துக்காக ரூ.40 லட்சம்வரை அரசு மானியம் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சந்தனத்துக்காக ஓர் தனியார் நர்சரியையும் வாங்கினர். எல்லாம் சிறப்பாக நடந்தாலும், இந்த இயற்கை விஷயங்களில் மக்களின் பங்கும் இருக்கவேண்டும் என கருதினர். இதன் வெளிப்பாடுதான். ஒரு விவசாய நில மேலாண்மை நிறுவனத்தை அமைக்க முடிவெடுத்தனர். ஆனால் அதற்குள் 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.
2013 ஆம் ஆண்டில், அவர்கள் ஓரளவுக்கு விவசாய நுட்பங்களைப் பற்றி அறிந்த பிறகு, ஹோசச்சிகுரு என்ற நிறுவனத்தை உருவாக்கினர். அதாவது கன்னடத்தில் புதிய முளை எனப் பொருள்படும் இந்நிறுவனம் வேளாண் வனத் துறையில் கவனம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்நேரத்தில்தான் ஸ்ரீநாத் இவர்களுடன் அணியில் இணைந்தார். இவர்களின் கூட்டணி பெரிய நிலப்பரப்புகளை வாங்கி, அதனை வளரும் பண்ணைகளாக உருமாற்றுகிறது. நில உரிமையாளர்களின் விருப்பத்தின் பேரில் மரங்கள் மற்றும் பிற துணை பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதன்மூலம் நீண்டகால செல்வத்தை, வருமானத்தை நிலையான வழியில் பெறமுடிகிறது.
மேலும் விவசாயத்தில் ஆர்வமுடைய தனி நபர்கள் இவர்களுடன் இணைந்து செயல்பட இரு வழிகள் உள்ளன. முதலாவதாக, விவசாய நிலங்களை வாங்க விரும்பும் மக்கள் ஹோசச்சிகுருவிடமிருந்து சொந்தமாக அல்லது நிறுவனத்தின் உதவியுடன் வளரக்கூடிய வகையில் நிலத்தை பெறலாம். இரண்டாவதாக, தனிநபர்கள் தற்போதுள்ள விவசாய நிலங்களை பயன்படுத்தி அபிவிருத்தி செய்து நிர்வகிக்கலாம்.
இத்திட்டத்தின்மூலம் வெறும் ஐந்து ஆண்டுகளில், ஹோசச்சிகுரு 800 ஏக்கர் நிலத்தில் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை நட்டு, சுமார் 18 விதமான திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியது.
இதன்மூலம் இந்நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடிவரை வருவாயும் ஈட்டுகிறது. ஹோசச்சிகுரு நிலத்தை சதுர அடிக்கு சுமார் 60 முதல் 65 ரூபாய்க்கு விற்கிறது என்கிறார் ஸ்ரீநாத்.
மேலும் ஹோசச்சிகுரு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்கும் அல்லது பராமரிக்க வழங்கும் நிலத்தை அவர்களை வைத்தே முறையாக நிர்வகிக்கிறது. மேலும், விரைவில் ஹைதராபாத், ஓசூர் போன்ற பகுதிகளுக்கும் தங்களின் நடவடிக்கைகளை விரிவுபடுத்த உத்தேசித்துள்ளனர். இவர்கள் பிரெஸ்டீஜ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட் நாராயணனிடமிருந்து நிதி திரட்டியுள்ளனர். ஹோசச்சிகுருவின் விவசாய நிலத்தில் வருவாய் அளிக்கக்கூடிய இரண்டு வயது திசு வளர்ப்பு தேக்கு மாதிரிகள் உள்ளன. மேலும், இவர்களிடம் நான்கு வருவாய் மாதிரிகள் இருப்பதாக ஸ்ரீநாத் கூறுகிறார்.
முதலில், அவர்கள் முழு அமைப்பையும் கொண்டுள்ள நிலங்களை தனிநபர்களுக்கு விற்கிறார்கள். இரண்டாவதாக தங்கள் நாற்றங்கால் வளர்க்கப்பட்ட வருவாய் விற்பனை மரக்கன்றுகளை உருவாக்குகிறார்கள். மூன்றாவதாக, அவர்கள் பண்ணைகளை வைத்திருக்கும் மக்களுக்காக தோட்டத்தை அமைத்து, திட்டத்தை செயல்படுத்துவதற்காக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
கடைசியாக, அவை தொடர்ந்து செயல்படுவதற்கும் பராமரிப்பதற்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். இது அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது ஆகும். இறுதியில் இவர்கள் 30 சதவீத உற்பத்தியை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும், இன்றைய டிஜிட்டல் உலகின் மீடியா மூலம் ஹோசச்சிகுரு பல்வேறு தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மேலும் அவர் கூறுகையில்,
எங்கள் நிறுவனம் ஒரு வலுவான சொத்து மேலாண்மை தளத்தை வைத்துள்ளது. விவசாயத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து பண்ணைகளிலும் வானிலை ஆய்வு நிலையங்கள், ஈரப்பதம் உணரிகள் மற்றும் நவீன சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் ஆட்டோமேஷன் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இயற்கையையும் சமூகத்தையும் மேம்படுத்துதலே எங்கள் திட்டங்களின் அடித்தளமாகும். இத்திட்டங்களால், வளிமண்டல கார்பனை அகற்றுவதற்கு ஹோசச்சிகுரு திறம்பட பங்களிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை ரீசார்ஜ் செய்ய மட்டும் 10க்கும் மேற்பட்ட வெவ்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தங்குமிடங்களையும் வழங்கியுள்ளோம் எனகிறார் ஸ்ரீநாத்.
விவசாயம் நமக்கு கற்பிக்கும் ஓர் முக்கியமான விஷயம் என்னவென்றால் ‘பொறுமை’. விவசாயத்தை பங்குச்சந்தையுடனோ அல்லது தங்க முதலீட்டோடு ஒப்பிட முடியாது. குறிப்பாக விளைநிலங்கள் பங்குகள் அல்லது தங்கத்தை விட மிக உயர்ந்தவை. ஆனாலும், விவசாயத்திலிருந்து கிடைக்கும் விளைச்சல் எப்போதும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டுள்ளது. நாங்கள் ஊர் பாராட்ட வேண்டுமென விவசாய நிலங்களை வாங்கி குழு சேர்க்கவில்லை.
மரங்கள் நட்டு வளிமண்டலத்தில் கார்பனின் அளவை ஈடுசெய்வது ஒவ்வொருவரின் கடமை என்றும் நம்புகிறோம் என்கிறார். ஹோசச்சிகுரு, ஓர் எளிய வணிக மாதிரி. இது விவசாயிகளை கடனில் இருந்து மீட்டு, விவசாய விளைபொருள்கள் மூலம் விவசாயிகளுக்கு வருமானத்துக்கு வழிவகை செய்வதோடு, சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும் அளித்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிதி தேவைப்படும்போது, அவர்கள் தங்கள் சொத்துகளை எளிதில் விற்கவும் நிறுவனம் உதவுகிறது.
இந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டமாக பெங்களூருவில் இருந்து சுமார் 90 நிமிட பயணத்தில் ஹிந்த்பூரின் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அபிவிருத்தி ஃபார்ம்ஸ் ஆகும். இத்திட்டத்தில் 108 ஏக்கர் வனப்பகுதி 5000 மா மரங்களால் வளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வார இறுதி வீடுகள், குடில்கள், உணவகங்கள், சைக்கிள் ஓட்டும் தளம், சிந்தனையை மேம்படுத்த வாசிப்பகங்கள், கண்காணிப்பு தளங்கள் என பல்வேறு வசதிகளுடன் குடியிருப்பவர்கள் (பண்ணை உரிமையாளர்கள்) இயற்கையுடன் இணைப்பதை உறுதி செய்வதற்கான வசதிகளை அபிவிருத்தி திட்டம் வழங்குகிறது என்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
ஆங்கிலத்தில்: பல்லக் அகர்வால் | தமிழில் திவ்யாதரன்