ரூ.20000 முதலீடு; ரூ.18 கோடி வருவாய்: கோவையில் பாக்கு மட்டை தட்டுகள் தயாரித்து வளர்ந்த நிறுவனர்கள்!
அமர்தீப் பர்தன், வைபவ் ஜெய்ஸ்வால் இருவரும் அசாமில் இருந்து பாக்கு மட்டைகள் கொள்முதல் செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பாக்கு மட்டை பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார்.
அமர்தீப் பர்தன், வைபவ் ஜெய்ஸ்வால் இருவரும் குருகிராமில் உள்ள ஐஐஎம்எல் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் பட்டதாரிகள். பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தட்டுகளால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவதால் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு சிறந்த மாற்றாக பாக்கு மட்டைகள் கொண்டு தட்டு தயாரிக்கத் தீர்மானித்தார்கள்.
அமர்தீப்பின் சொந்த மாநிலம் அசாம். இங்கு பாக்கு மட்டைகள் அதிகளவில் கிடைக்கும். எனவே நண்பர்கள் இருவரும் இங்கிருந்து பாக்கு மட்டைகள் வாங்கி தயாரிப்புப் பணியில் ஈடுபட முடிவெடுத்தனர்.
2012-ம் ஆண்டு Prakritii Cultivating Green தொடங்கினார்கள். இந்நிறுவனம் அசாமில் இன்குபேட் செய்யப்பட்டு டெல்லியில் இருந்து செயல்பட்டது.
“20,000 ரூபாய் முதலீட்டில் கோயமுத்தூரில் தொழிற்சாலை அமைத்து சிறியளவில் செயல்படத் தொடங்கினோம். அசாமில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாக்கு மட்டைகளைக் கொண்டு பல்வேறு அளவுகளில் தயாரிக்கத் தொடங்கினோம்,” என்று அமர்தீப் எஸ்எம்பிஸ்டோரி-இடம் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் கேட்டரிங் சேவையளிப்போர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்றோருக்கு இவர்கள் விற்பனை செய்தார்கள். நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்லெரி, கிளாஸ் உள்ளிட்ட மற்ற தயாரிப்புகளையும் இணைத்துக்கொண்டார்கள்.
இன்று Prakritii நிறுவனத்தின் டர்ன்ஓவர் 18 கோடி ரூபாய். இந்நிறுவனம் நேரடியாக 120 பேருக்கும் மறைமுகமாக 700 பேருக்கும் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதாக நிறுவனர்கள் தெரிவிக்கிறார்கள்.
சுற்றுச்சூழலுக்கு கிடைக்கும் நன்மைகள்
பிளாஸ்டிக் தட்டுகள் எளிதில் மக்கும்தன்மை கொண்டதல்ல. இவை மக்குவதற்கு ஆயிரம் அண்டுகள்கூட ஆகின்றன. இதனால் மண்ணிலும் நிலத்தடி நீரிலும் நச்சுப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.
ஆனால் பாக்கு மட்டையால் தயாரிக்கப்படும் தட்டுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
“எங்கள் தயாரிப்புகளில் ரசாயனங்கள், பூச்சுப்பொருட்கள், பசை உள்ளிட்ட உணவுக்கோ சுற்றுச்சூழலுக்கோ தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப்பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. 100% நச்சுப்பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. பாக்கு மட்டைகளால் ஆன தயாரிப்புகள் அனைத்துமே ஸ்டீம், வெப்பம், அழுத்தம் போன்ற செயல்முறைகளைப் பின்பற்றியே தயாரிக்கப்படுகின்றன,” என்று விவரித்தார்.
அதேபோல், மரங்களில் இருந்து கீழே விழும் பாக்கு மட்டைகளே பயன்படுத்தப்படுவதாக வைபவ் குறிப்பிட்டார், மூங்கில் போன்ற பிற தயாரிப்புகள் உருவாக மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆனால் இவர்கள் தயாரிக்கும் பாக்கு மட்டை தயாரிப்புகள் அதுபோல் இல்லை என்கிறார்.
இந்த பாக்கு மட்டை தயாரிப்பில் மற்றொரு முக்கிய நன்மையும் அடங்கியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இவை ஆக்சிஜினேட் செய்யப்பட்டவை. இதனால் பழங்களிலும் காய்கறிகளிலும் நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்னெஸ் தக்கவைக்கப்படுகின்றன. இவற்றை மைக்ரோவேவ் அவன், ஃப்ரிட்ஜ் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம்.
இந்தத் தயாரிப்பு ஒன்றின் விலை 1 ரூபாயில் தொடங்கி 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவை 12 முதல் 15 நாட்களில் மக்கிவிடும் என்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்றும் நிறுவனர்கள் தெரிவிக்கிறார்கள்.
தொழிற்சாலை
தமிழகத்தில் தொழிற்சாலை அமைப்பதில் மொழி மற்றும் கலாச்சாரம் சார்ந்த வேறுபாடுகள் தொடர்பாக சிக்கல்களை சந்தித்துள்ளனர் இந்நிறுவனர்கள். சிறியளவில் இயங்கியதால் தேவையான அளவில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது, மின் விநியோகம் பெறுவது, சரியான இயந்திரங்கள் வாங்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
ஆனால் அமர்தீப், வைபவ் இருவரும் தங்கள் பாக்கு மட்டை தயாரிப்புகள் பல்வேறு இடங்களில் பயன்படும் வகையில் விரிவடையச் செய்தார்கள். Prakritii நிறுவனத்தை 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக உருவாக்கியுள்ளார்கள்.
“பல்வேறு சூழல்களில் பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கான சிறந்த மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தமுடியும். இதை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே நாங்கள் மரத்தினால் ஆன கட்லெரி, பேப்பர் கிளாஸ், டேக் அவே பாக்ஸ் போன்றவற்றை தயாரிக்கத் தொடங்கினோம்,” என்கிறார் அமர்தீப்.
தற்சமயம் Prakritii நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை கர்நாடகாவின் பத்ராவதியில் இயங்கி வருகிறது. இதுதவிர 80-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், பேக்கேஜிங் நிறுவனங்கள், ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்டுகள், கேட்டரிங் சேவையளிப்பவர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்றோர் எங்கள் வாடிக்கையாளர்கள். இவர்களுக்கு சிறந்த விலையில் தயாரிப்புகளை வழங்குகிறோம். அதிக எண்ணிக்கையில் மொத்தமாக வாங்கும்போது சலுகைகள் வழங்குகிறோம்,” என்கிறார் அமர்தீப்.
இந்தத் தயாரிப்புகள் மின்வணிகத் தளங்களிலும் கிடைக்கின்றன. பாக்கு மட்டையில் பல்வேறு தயாரிப்பு வகைகளை வழங்குவது போட்டியாளர்களைக் காட்டிலும் தனித்துவமாகத் திகழ் உதவுவதாக நிறுவனர்கள் கருதுகிறார்கள்.
“அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரநிலைகளுக்கு ஏற்ப எங்கள் தயாரிப்புகள் இருப்பது ஏற்றுமதி செய்ய உதவுகிறது,” என்கிறார் வைபவ்.
கோவிட் பாதிப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
பெருந்தொற்று சமயத்தில் ஹோட்டல், கஃபே, ரெஸ்டாரண்ட் போன்றவை மூடப்பட்டதால் விற்பனை குறைந்தது. இருப்பினும் அவர்களது உபரி கைகொடுத்துள்ளது. எந்த ஊழியரையும் வேலையை விட்டு அனுப்பாமல் தாக்குப்பிடிக்க முடிந்ததாக நிறுவனர்கள் தெரிவிக்கிறார்கள்.
“தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு வணிகம் சூடு பிடிக்க ஆரம்பித்தாலும் முழுமையாக மீளவில்லை. இருப்பினும் கொரோனா பெருந்தொற்று சூழலுக்குப் பிறகு விருந்தோம்பல் துறையில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தக்கூடிய தட்டு, கப் போன்றவற்றைக் காட்டிலும் பயன்பாட்டிற்குப் பின்னர் தூக்கியெறிக்ககூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நிலைமை மாறியுள்ளது,” என்கிறார் அமர்தீப்.
எனவே அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தித் திறனை மேம்படுத்த நிறுவனர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் பயன்பாடு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை உலகமே உணர்ந்துகொண்டுள்ளது. இதனால் இதற்கான சிறந்த மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை வழங்குவதில் Prakritii மேலும் சிறப்பாகப் பங்களிக்க உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா