உலகின் அதிக மாசடைந்த தலைநகரம்; 4வது முறையாக முதலிடத்தில் டெல்லி: அரியலூருக்கு கிடைத்த பாராட்டு!
உலகின் மிகவும் மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலில், டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.
உலகின் மிகவும் மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலில், டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள், உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை விட மாசு நிறைந்த காற்றை சுவாசிக்கின்றனர். மேலும், காலநிலை மாற்றம் மாசுபாட்டை மேலும் மோசமாக்குவதாக பல்லாயிரக்கணக்கான கண்காணிப்பு நிலையங்களில் இருந்து நிகழ்நேர காற்றின் தர தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு ஆண்டுக்கு சராசரியாக PM 2.5 ஒரு கனமீட்டருக்கு 96.4 மைக்ரோகிராம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2021ல், உலக சுகாதார அமைப்பு PM2.5 க்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வருடாந்திர வெளிப்பாடுகளை பாதியாக குறைக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
ஒரு கன மீட்டர் காற்றில் 5 மைக்ரோகிராம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2021 ஆம் ஆண்டில் எந்த நாடும் அந்த கடுமையான தரத்தை அடையவில்லை என்றும், குறிப்பாக வட இந்தியாவில் என்றும் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir என்ற நிறுவனம், 2021ம் ஆண்டில் உலக அளவில் காற்று மாசு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் காற்றின் தர கண்காணிப்பு மற்றும் காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
சராசரி காற்று மாசுபாடு, கொடிய மற்றும் நுண்ணிய PM2.5 மாசுபடுத்தலில் அளவிடப்படுகிறது, இது ஒரு கன மீட்டருக்கு 58.1 மைக்ரோகிராம் ஆக உள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்றின் தர வழிகாட்டுதல்களை விட 10 மடங்கு அதிகமாகும்.
காற்று மாசில் முதலிடம் பிடித்த டெல்லி:
உலக அளவில் மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலில், டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட காற்று மாசு கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்குள்ள காற்று மாசுபாட்டின் அளவு WHO-viன் பாதுகாப்பு வரம்புகளை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் புகையால் மட்டும் 45 சதவீதம் வரை காற்று மாசு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. டெல்லிக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களை எரிப்பது, குறிப்பாக குளிர்காலத்தில், டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
காற்று மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்களாக வாகன உமிழ்வுகள், நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், சமையலுக்கு மற்றும் கட்டுமானத் துறைக்கான உயிரி எரிப்பு ஆகியவை உள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில், கடுமையான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியைச் சுற்றியுள்ள பல பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பல தொழிற்சாலைகள் முதல் முறையாக மூடப்பட்டன.
இந்தியாவிற்கு நெருக்கடியின் பொருளாதாரச் செலவு ஆண்டுக்கு $150 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் மற்றும் பல கடுமையான உடல்நல பாதிப்புகள் தவிர காற்று மாசுபாட்டால் ஒவ்வொரு நிமிடமும் மூன்று மரணங்கள் நிகழ்வதும் தெரியவந்துள்ளது.
மோசமான 15 இந்திய நகரங்கள் எவை?
இந்தியாவில் எந்த நகரமும் WHO வெளியிட்ட காற்றின் தரநிலையை எட்டவில்லை. குறிப்பாக வடமாநிலங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அதிகளவில் மாசடைந்த முதல் 15 நகரங்களில் இந்தியாவில் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
வாகன மாசு, அனல் மின் நிலையங்கள், தொழில்துறை கழிவுகள் மற்றும் கட்டுமானங்கள் காரணமாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக ராஜஸ்தானில் உள்ள பிவாடி உள்ளது. PM2.5 மாசுபடுத்தலில், இது ஒரு கன மீட்டருக்கு 106.2 மைக்ரோகிராம் என்ற உச்சபட்ட நிலையை எட்டியுள்ளது. இந்தியாவில் அதிக மாசடைந்த நகரங்கள் உத்தர பிரதேசத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரும், 5வது இடத்தில் ஜானுபூர், 7வது இடத்தில் நொய்டா, 10வது இடத்தில் பாக்பத்,11வது இடத்தில் கிரேட்டர் நொய்டா என உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
4வது இடத்தில் டெல்லி உள்ளது. பஞ்சாப்பில் பைசலாபாத், பகவால்பூர், லாகூர் ஆகிய நகரங்கள் முறையே 6வது, 8வது, 15வது இடத்தை பிடித்துள்ளது. ஹரியானாவில் ஹிசார், பரிதாபாத், ரோத்தக் ஆகிய நகரங்கள் முறையே 11,12,14 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
சுவிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலகிலேயே மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 63 நகரங்கள் இடம் பிடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய WHO காற்றின் தர வழிகாட்டுதல்களின்படி, எந்தவொரு பெரிய நகரமும் அல்லது நாடும் தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான காற்றை வழங்குவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை வெளியாகியுள்ளது.
இதுகுறித்து IQAir நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறிகையில் ஃபிராங்க் ஹேம்ஸ்,
"அனைவரும் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் இருப்பதை உறுதிசெய்ய இன்னும் எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பதை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மற்றும் சுவாசிக்க ஆரோக்கியமான காற்றுக்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் நேரம் வந்துவிட்டது,” எனத் தெரிவித்துள்ளார்.
சுத்தமான காற்றைக் கொண்ட அரியலூர்:
சுவிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவிலேயே சுத்தமான காற்று தமிழ்நாட்டில் அரியலூர் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதுவும் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான அளவை விட மூன்று மடங்கு அதிகமாகவே உள்ளது. கடந்த ஆண்டில் சென்னையைத் தவிர மற்ற 6 மெட்ரோ நகரங்களிலும் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்க்கும் போது,
டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் 168 நாட்கள் காற்றின் தரம் மோசமாக இருந்துள்ளது. கொல்கத்தாவில் 74 நாட்களும், மும்பை 39 நாட்களும் காற்று மாசடைந்துள்ளது.