சர்ச்சைன்னா இவருக்கு சர்க்கரைப் பொங்கல்: தீபிகாவும் ஜேஎன்யூ விஜயமும்!
தாக்குதலுக்கு உள்ளான டெல்லி ஜேஎன்யூ மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்த பாலிவுட் ஸ்டார் தீபிகா படுகோனை பலரும் பாராட்டி வருகின்றனர். அவருக்கு எதிரான விமர்சனங்களும் ‘பாய்காட்’ ஹேஷ்டேக்குகளும் வலம் வருகின்றன.
விமர்சனங்கள் இவருக்கு புதிதல்ல. அழகிலும், அசத்தலான நடிப்பிலும் பலரின் மனங்களை கட்டிப் போட்டிருப்பவர் தீபிகா படுகோன். புராதனக் கதைகளுக்கு ஏற்ற அழகு, வீரம், கம்பீரம் கொட்டிக்கிடக்கும் இவர் நடித்த பத்மாவத் திரைப்படம் வெளியாக இருந்த சமயத்தில் அந்த படத்தில் நடித்ததற்காக தீபிகாவின் தலையை துண்டிக்க ரூ.5 கோடி வரை விலை நிர்ணயம் செய்தது கர்னி சேனா அமைப்பு. தீபிகாவின் மூக்கை சூர்ப்பனகை போல அறுக்க வேண்டும் என்றும் பதற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாமல் விமர்சனங்களை புறந்தள்ளி மேலும் மேலம் உச்சம் தொட்டு வருகிறார் தீபிகா.

தற்போது அமில வீச்சால் பாதிக்கப்பட்ட 'லட்சுமி' என்ற பெண்ணின் கதையை அடிப்படையாக வைத்து ‘சபாக்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார். தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகதோற்றத்திலேயே தீபிகா தோன்றுகிறார். சபாக் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் சமயத்தில் எந்த சர்ச்சையிலும் சிக்க வேண்டாம் என்றே திரை நட்சத்திரங்கள் நினைப்பதுண்டு. ஆனால் தொழில் வேறு, கொள்கை வேறு என்று பிரித்து பார்க்கத் தெரிந்த தீபிகா படுகோன் கடந்த செவ்வாய் கிழமையன்று வன்முறை தாக்குதலுக்கு உள்ளான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் பாசிடிவ் மற்றும் நெகடிவ் எனர்ஜிகள் தீபிகாவை நோக்கி வீசத் தொடங்கிவிட்டன.
பாஜகவின் தெற்கு டெல்லி எம்.பி. ரமேஷ் பிதுரி, சமூகவிரோத கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீபிகா படுகோனின் சபாக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ், பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவின் சுயத்தை அழிப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாராட்டுகளும் விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
#Boycott Chhapak ‘சபக்கை புறக்கணிப்போம்’, #ISupportDeepika ’தீபிகாவை ஆதரிப்போம்’ மற்றும் #Chhap Dekho Tapak Se என்ற ஹேஷ்டேக்குள் டிரென்டாகி வருகின்றன.
கடந்த செவ்வாய் கிழமையன்று திடீரென ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்ற தீபிகா படுகோன், தன்னுடைய ஆதரவை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தெரிவித்தார். அங்கு மாணவத் தலைவர் ஆயிஷி கோஷூடன் சிறிது நேரம் அமைதியாக நின்று அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காட்சிகள் திரைத்துறையினர் மட்டுமின்றி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அதே சமயம் எதிர் தரப்பினர் தீபிகாவின் சபாக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கிளம்பி விட்டனர். பிரபல நடிகை சபானா ஆஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் தீபிகாவிற்கு ஆதரவாக தெரிவித்துள்ள கருத்தில்,
“பத்மாவத் திரைப்படத்திற்காக தீபிகா சர்ச்சைக்குள்ளான போது வெகு சிலரே அவருக்கு ஆதரவாக இருந்தனர். சர்ச்சையின் இலக்காக இருப்பது எப்படி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர் தீபிகா. ஜேஎன்யூ மாணவர்களை ஆதரித்தன் மூலம் சிறந்த உதாராணத்தை உருவாக்கி இருக்கிறார். தீபிகா படுகோன் மிகுந்த மனஉறுதி படைத்தவர்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜேஎன்யூ வன்முறைக்கு எதிராக எழுந்த முதல் குரல் என்று குறிப்பிட்டு, நடிகை மற்றும் சமூகப் போராளி ஸ்வரா பாஸ்கர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,
“ஜேஎன்யூவில் பாலிவுட்டின் நிறம் என்று தீபிகா மாணவர்களை சந்தித்த காட்சிகளுக்கு தலைப்பிட்டு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்த இயக்குனர் அனுராக் கஷ்யப், தீபிகாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தீபிகா படத்தின் முதல் காட்சியை பார்த்து நமது ஆதரவை தெரிவிப்போம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வானி தீபிகா ஒரு உண்மையான ஹுரோ என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.
நாம் அமைதியாக இருக்க வேண்டிய நேரமல்ல இது என்று தீபிகாவின் செயலுக்காக அவரை நடிகை சோனாக்ஷி சின்ஹா பாராட்டியுள்ளார்.
ஒரு புறம் பாராட்டுகள் குவிந்தாலும் அரசியல்வாதிகள் மட்டத்தில் தீபிகாவின் ஜேஎன்யூ வருகைக்காக கடுமையான விமர்சனங்கள் அள்ளி தெளிக்கப்படுகின்றன. காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா பதிவிட்டுள்ள கருத்தில்,
“இந்தியாவின் ஆன்மாவை நசுக்குவதை நிறுத்துங்கள் மோடிஜி,” என்றார்.
உங்கள் வழியை பின்பற்றுபவர்களுக்கு 1. எந்த நடிகர்களும் நடிப்பைத் தாண்டி எதையும் செய்யக்கூடாது. 2. திரைத்துறையினர் பொதுவாழ்வில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கக் கூடாது. 3. எந்த திரைத்துறையினருக்கும் தங்களது தனிப்பட்ட கருத்துகளை பகிரும் உரிமை கிடையாது என்பதை கண்மூடித்தனமாக கடைபிடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாக் வெறும் திரைப்படமல்ல, ஒவ்வொரு ஆண்டும் அமில வீச்சுக்கு ஆளாகும் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கை உண்மை. அந்த திரைப்படத்தை புறக்கணிக்கச் சொல்வது உங்களுக்கே முறையற்றதாகத் தெரியவில்லையா?
என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவின் தெற்கு டெல்லி எம்.பி ரமேஷ் பிதுரி, சபாக் படத்தை புறக்கணிப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இளைஞர்கள் தேசத்திற்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நடிகர்கள் படங்கள் மூலம் நாட்டு மக்களால் காணப்படுகின்றனர். அதைவிட்டுவிட்டு தேசத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது தேவையற்ற வேலை என்றும் கூறியுள்ளார்.


இயக்குனர் அபர்ணா சென், தீபிகாவின் தைரியத்தை பாராட்டியுள்ளார். தனது ட்வீட்டில் சென் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
“ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றம் ஏதோ ஒரு திருப்பத்தில் நிகழும். அந்த திருப்புமுனை தீபிகாவிற்கு ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலில் நிகழ்ந்துள்ளது. தீபிகாவிற்கு நான் தலைவணங்குகிறேன், அவரின் இந்த துணிச்சலான செயலுக்காக நாடு அவரை நினைவில் வைத்துக் கொள்ளும் என்று பகிர்ந்துள்ளார்.
பாராட்டுகளோடு தீபிகா மீது இகழ்ச்சிகளும் வாரி இறைக்கப்படுகிறது. சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர், தீபிகாவின் செயல் விளம்பரத்திற்காக செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
போராட்டக்குழுவுடன் நின்று உங்களுடைய படத்திற்கு எப்படியெல்லாம் விளம்பரம் தேடுகிறீர்கள். நாங்கள் ஒன்றும் முட்டாள்களல்ல. நீங்கள் எவ்வளவு பெரிய குற்றம் செய்துள்ளீர்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு உணர்த்துவோம். பாய்காட் தீபிகா என்று அவர் பதிவிட்டுள்ளார்.
“துரோகிகளை ஆதரிக்கும் தீபிகாவை பின்தொடர்வதை கைவிடுவோம் என்று மற்றொரு நெட்டிசன் கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் சபாக் திரைப்படத்தின் இணை எழுத்தாளர் அதிகா சௌஹன், ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா பங்கேற்றதை திரைப்பட விளம்பரத்திற்காக என்று தொடர்புப்படுத்திப் பார்ப்பது அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ளார்.
கட்டுரை தொகுப்பு: கஜலெட்சுமி