'ஜீரோ வேஸ்ட் பட்ஜெட்' திருமணத்தை அரங்கேற்றிய சென்னை தம்பதி!
திருமணம் என்றாலே கோலாகலம், கொண்டாட்டம், திருவிழா, அறுசுவை உணவு, பிரம்மாண்ட மேடை அலங்காரம் இவை தானே நமக்கு நியாபகத்திற்கு வரும். ஆனால் இதோடு இணையாக வருவது செலவு, சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்கள், வீணாகும் உணவுகள் இன்னும் பல.
சரி இதையெல்லாம் தவிர்த்தும் எப்படி கோலாகலமான திருமணத்தை நடத்துவது? இதோ செய்து காட்டியுள்ளனர் சென்னையைச் சேர்ந்த ரதீஷ் மற்றும் சத்யா ஜோடி.
குறைந்த பட்ஜெட் செலவில், சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு திருமணத்தை முடித்துள்ளனர் இந்த தம்பதியர்.
சென்னை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ரதீஷ் கிருஷ்ணன், சத்யா என்ற தபால்துறையில் பணிபுரியும் பெண்ணை குடும்பத்தினர் வழியே சந்தித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சென்னை செவ்வப்பேட் கிராமத்தைச் சேர்ந்த சத்யாவின் ஊரில் பெண் வீட்டார் வரதட்சணை கொடுப்பது வழக்கம், ஆனால் தனது மாற்றத்தை அங்கிருந்து துவங்க நினைத்த ரதீஷ், வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதை அறிந்த பெண் வீட்டார் ஆச்சர்யமாக பார்க்க, ஒரு திருமணத்தில் பணம் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதை உணர்ந்து எளிமையான சுற்றுச்சூழலை பாதிக்காத திருமணம் செய்ய முடிவு செய்தார் ரதீஷ்.
இதனால் தங்கள் நிச்சயதார்த்தத்திற்கு ரூ.35000, திருமணத்திற்கு 5லட்ச ரூபாய் என்று பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்தனர்.
ரூ.35000 குள் நிச்சயதார்தம் சாத்தியமா?
பத்திரிக்கை அடிப்பதில் துவங்கி சாப்பாடு வரை அனைத்தையும் சரியாக கணக்கிட்டு முடித்துள்ளனர் இந்த தம்பதியர்கள். பேப்பரை மிச்சம் செய்ய, விருந்தினரை டிஜிட்டல் பத்திரிகை மூலமே அழைத்துள்ளனர், எளிமையாக கோயிலில் தங்கள் நிச்சயத்தை ஏற்பாடு செய்தனர். இதனால் இடத்திற்கு வெறும் 1500ரூபாய் மட்டுமே செலவானது.
உணவு தான் ஒரு விழாவின் சிறப்பு அம்சம், இதனால் உணவில் எந்தவித மாற்றமும் இன்றி சிறந்த உணவை அளித்தனர். ஆனால் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தங்கள் வருகையை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும், வருகைக்கு ஏற்ப மட்டுமே உணவை தயாரித்துள்ளனர். 75 விருந்தினர்களுக்கு ஏற்ற உணவை மட்டுமே தயார் செய்ததால் உணவு மிச்சம் ஆகவில்லை. வீண் செலவும் ஆகவில்லை.
தங்கள் நிச்சயதார்த்தத்திற்கு வந்த விருந்தினர்கள் சிலரிடம் திருமணத்தில் பொதுவாக வீண் செலவாக இருப்பது என்னவென்று கேட்டு அதற்கேற்ப தங்கள் திருமணத்தை ஏற்பாடு செய்யத்தொடங்கினர் ரதீஷ் மற்றும் சத்யா.
“பத்திரிக்கை அச்சிடுதல், அதிக உணவு, பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள், பூக்கள், கிஃப்ட் பேப்பரால் சுத்தப்பட்ட பரிசுப்பொருட்கள் – இதுதான் தேவையற்ற அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருளாக விருந்தினர்கள் சொன்னது.”
இதைக் கருத்தில் கொண்டு தங்கள் திருமணத்தை ஏற்பாடு செய்து 5 லட்சத்திற்குள் முடித்துள்ளனர். கோயிலுக்குள் இருக்கும் ஏசி ஹாலை புக் செய்தனர், மண்டபத்திற்காக 5 லட்சம் வரை செலவு செய்யும் இன்றைய சூழலில் 35000 ரூபாய்க்குள் இடத்தை முடிவு செய்தனர். வெறும் 100 பத்திரிக்கைகளை மட்டுமே அச்சடித்து மீதியை டிஜிட்டல் பத்திரிக்கையாகவே அனுப்பப்பட்டது.
தேவையில்லாத பரிசுப் பொருட்களுக்கு செலவு செய்வதற்கு பதில் ’Wedding Wishlist’ எனும் ஆன்லைன் சேவை மூலம் விருந்தினர்கள் அளிக்கும் பரிசை பணமாக பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் பேப்பர்கள், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்த்தனர். அதில் சேர்ந்த பரிசுப்பணத்தில் ஹனிமூன் செல்ல முடிவெடுத்தனர் மணமக்கள்.
திருமணத்தில் அதிக செலவு ஏற்படுவது ஆடைகளில் தான்,
“ஆடையில் பணத்தை வீண் செய்ய விரும்பாமல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து திருமண ஆடைகளை கடனாக பெற்றுக் கொண்டோம்,” என்றார் ரதீஷ்.
இதுவே திருமணத்தின் பாதி செலவை இவர்களுக்கு குறைத்திருக்கும். விருந்தினர்களுக்கும், குடும்பத்தினருக்கு திருப்பிக் கொடுக்கும் பரிசுகளை இரண்டாக பிரித்துள்ளனர். நெருங்கிய சொந்தங்களுக்கு வேஷ்டி புடவையும், நண்பர்களுக்கு ஆர்கானிக் காய்கறிகள் வாங்க கூப்பனை கொடுத்துள்ளனர்.
அடுத்து திருமணத்தில் வீணாகப்போவது சாப்பிட்டப்பின் இருக்கும் குப்பைகள்,
“உணவுக் குப்பைகளை உண்பதற்கு 2 மாடுகளை ஏற்பாடு செய்து அதன் சாணத்தை உரமாகப் பயன்படுத்த ஆர்கானிக் பண்ணைக்கு அனுப்பிவைத்தனர்.”
இந்த பட்ஜெட் திருமணம் மூலம் செலவுகளை குறைத்தது மட்டுமின்றி, ஜப்பானிற்கு தேன்நிலவு செல்லத் தேவையான பணத்தையும் அன்பளிப்பு மூலம் பெற்றுவிட்டனர்.
100% இகோ ஃபிரெண்ட்லி திருமணம் இல்லை என்றாலும் பல செலவுகளையும் வீண் கழிவுகளையும் குறைக்க முயற்சி எடுத்துள்ளனர் இந்த ஜோடி. நல்ல எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் எளிமைத் திருமணத்தை கையில் எடுத்த தம்பதியர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...