மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் அவள் ஒரு தேவதை என்று!
மகன்கள் எப்படி அம்மா செல்லமோ அதே போல மகள்கள் அனைவருமே அப்பா செல்லங்கள்தான். பெண்கள் உலகின் முதல் ஹீரோ அவர்களது தந்தைதான். அல்ட்ரா மாடர்ன் பெரு நகரத்து பெண்ணாய் இருந்தாலும் சரி, கிராமத்து பெண்ணாய் இருந்தாலும் சரி, திருமணம் குறித்து அவர்கள் சொல்லும் முதல் விஷயம், ‘மாப்பிள்ளை அப்பா மாதிரி இருக்கணும்’ என்பதுதான். அப்படியான தந்தை-மகள் உறவு எப்போதுமே ஸ்பெஷல். பொதுவாகவே குழந்தை வளர்ப்பில் தாய் முன்னிறுத்தப்பட்டாலும் தந்தையின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. தந்தையின் தோளைப் போல தைரியம் தரும் சிம்மாசனம் குழந்தைக்கு வேறேதும் உண்டா என்ன?
தேபஸ்மிதா தாஸ்குப்தா, தந்தை-மகள் இடையே இருக்கும் உறவின் ஸ்பெஷலை ‘மை பாதர் இல்லுஸ்ட்ரேஷன்ஸ்’ (My Father Illustrations) என்ற தலைப்பில் படங்களாய் வரைந்து நெகிழ வைக்கும் ஓவியர்.
தூரிகை தூக்கிய நாள்
மாஸ் கம்யூனிகேஷன் பட்டதாரியான தேபஸ்மிதா தன்னார்வ நிறுவனங்களுக்கு தொடர்பாளராக பணியாற்றியவர். ஆக்ஸ்ஃபாம்(Oxfam), ஐக்கிய நாடுகள் போன்றவற்றுக்கு தொடர்பாளராய் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. இப்போது சிங்கப்பூரில் வசிக்கும் இவர் அங்குள்ள ஆசிய-ஐரோப்பிய கூட்டமைப்பிற்காக பணியாற்றி வருகிறார்.
2010ல், கதா என்ற பதிப்பகத்தின் உரிமையாளரான கீதா தர்மராஜன் என்பவரின் அறிமுகம் தேபஸ்மிதாவிற்கு கிடைத்தது. ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வந்த தருணம் அது. தாகூரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்தார் கீதா. சமகாலத்தின் ஈடு இணையற்ற படைப்புகள் தாகூருடையது என்பதை நிறுவ விரும்பினார் கீதா. “நீ ஏன் தாகூர் படைப்புகளுக்கு ஓவியம் வரைந்து தரக்கூடாது என என்னிடம் கீதா கேட்டார். தொடர்ச்சியாய் பல நிறுவனங்களோடு பணியாற்றி வந்த எனக்கு புதிதாய் ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. உடனே ஒப்புக்கொண்டேன். அதை செய்தும் கொடுத்தேன்” என்கிறார் தேபஸ்மிதா.
அதன்பின் ஃப்ரீலான்ஸ் ஓவியராக பல நிறுவனங்களில் பணியாற்றினார் தேபஸ்மிதா.
தந்தை-மகள் கதைகளின் கதை
2013ல் ஒரு முக்கிய சம்பவம் நடந்ததாக கூறுகிறார் தேபஸ்மிதா. அந்த ஆண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் பங்குபெறும் டெட்(TED) மாநாட்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஷபானா பசீஜ் என்ற பெண் தாலிபன் கொடுமைகளை பற்றி பேசினார். தாலிபன் ஆட்சியில் பெண்களுக்கு அடிப்படை கல்வி கூட மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். ஷபானாவுக்கும் இவ்வாறு கல்வி மறுக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாய் இருந்தது அவரின் தந்தைதான். “தாலிபன்கள் உன்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிடக்கூடும். ஆனால் உன் அறிவை அவர்களால் ஒருபோதும் பறிக்க முடியாது” என அவர் ஷபானாவிடம் கூறினார். இந்த சொற்கள் அளித்த உத்வேகம் காரணமாக தடைகளை மீறி பள்ளிக்குச் சென்றார் ஷபானா. பின்னர் அமெரிக்கா சென்று பட்டப்படிப்பு பயின்றார். அதன்பின் மீண்டும் ஆப்கனுக்கே திரும்பி பெண்களுக்காக பள்ளி ஒன்றை தொடங்கினார். தன்னால் உயர முடிந்ததற்கு முக்கியக் காரணம் தன் தந்தைதான் என ஷபானா அந்த மாநாட்டில் கூற, இந்தக் கதை அப்பா செல்லமான தேபஸ்மிதாவை வெகுவாக கவர்ந்தது.
“2013ல் பெண்களுக்கான வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமது. டெல்லி கற்பழிப்பு சம்பவம் தலைப்பு செய்தியில் அடிபட்டுக் கொண்டிருந்தது. அப்போது எங்கே பார்த்தாலும் பெண்ணிய இயக்கங்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தன. ஏன் இந்த போராட்டத்தில் ஆண்களையும் பங்குகொள்ள வைக்கக்கூடாது என எனக்குத் தோன்றியது. ஊடகங்களைப் பொறுத்தவரையில் எப்போதும் நல்ல சம்பவங்களை விட தீய சம்பவங்களுக்கே அவை முக்கியத்துவம் தரும். ஊடகத்தில் பணியாற்றிய சொற்ப காலத்தில் நான் தெரிந்துகொண்ட உண்மை இது. இந்த நிலையை மாற்ற விரும்பினேன். உடனே ஷபானாவின் கதையை ஓவியமாக வரைந்தேன். அது ஒருவகை கிளர்ச்சியை அளித்தது. நான் வரைந்ததை ஷபானாவிற்கு அனுப்பினேன். அந்த ஓவியம் ஷபானாவை நெகிழ்ச்சியில் ஆழ்த்த, அவர் உடனே அதை தன் மாணவர்களிடம் காட்டியுள்ளார். அதன்பின் முகம் தெரியாத எத்தனையோ ஆப்கன் ஆண்கள் என்னை தொடர்புகொண்டு பாராட்டினர். ஆப்கன் ஆண்களும் நல்லவர்கள்தான் என இந்த சம்பவம் புரிய வைத்தது” என நெகிழ்கிறார் தேபஸ்மிதா.
அதன்பின் அவருக்கு இதே பாணியிலான தந்தை-மகள் கதைகள் ஆப்கனில் இருந்து வந்து குவிந்தன. ஒரே ஒரு நாட்டிலேயே இத்தனை கதைகள் என்றால் உலகம் முழுக்க எத்தனை எத்தனை நெகிழ்ச்சியான கதைகள் இருக்கும் என யோசித்தார் தேபஸ்மிதா. “யாரோ ஒருவர், தன் மனதுக்கு நெருக்கமான கதையை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புவது ஒரு வித்தியாசமான உணர்வை உருவாக்குமல்லவா? அப்படியான உணர்வு என்னை ஆட்கொண்டிருந்தது. அப்போது பிறந்ததுதான் இந்த ‘மை பாதர் இல்லுஸ்ட்ரேஷன்ஸ்’ என்கிறார் தேபஸ்மிதா.
முகம் தெரியாத தந்தைகள் மீதே இவ்வளவு அன்புகாட்டும் இவர் தன் தந்தையை எவ்வளவு நேசிப்பார் என தெரிந்துகொள்ள அவர் தந்தையை பற்றிக் கேட்டோம். “எனக்கு உத்வேகம் அளிப்பது என் தந்தைதான். அவர் மிகவும் எளிமையான நடுத்தர வர்க்கத்து மனிதர். அரசு வேலையில் இருந்த அவர் ஒரு நாடகக் கலைஞரும் கூட. வேலையில் இருந்து ஓய்வு பெற்றபின் இந்த வயதிலும் முழுநேர நாடகக் கலைஞராய் வலம் வருகிறார். “பந்தயக் குதிரை போல நீ ஓடிக்கொண்டே இருக்கவேண்டாம். காரணம், நீ எத்தனையாவது இடத்தை பிடிக்கிறாய் என்பது இங்கே முக்கியமில்லை” என என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் ஒரு விளையாட்டு வீரரும் கூட. “தான் கடைசி இடம்தான் பிடிக்கப்போகிறோம் எனத் தெரிந்தும் தடகள வீரன் ஓட்டத்தை கைவிடுவதில்லை. இறுதி வரை ஓடி பந்தயக் கோட்டை கடந்த பின்தான் ஓய்கிறான். நீயும் அதே போல முதலிடத்தை நோக்கி ஓடாதே. நீ எடுத்துக்கொண்ட விஷயத்தை முழுமையாக முடிக்க வேண்டுமென ஓடு” என அறிவுறுத்துவார். இந்த அறிவுரைகள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் நிறைய” என மலரும் நினைவுகளில் மூழ்குகிறார் தேபஸ்மிதா.
2013ல் தொடங்கி இப்போது வரை ஏராளமான தந்தை-மகள் கதைகளுக்கு ஓவியங்கள் வழியே உயிர் கொடுத்திருக்கிறார் தேபஸ்மிதா. இந்த ஓவியங்களுக்கென ஒரு பொது நோக்கம் இருக்கிறது. இந்த ஓவியங்களின் வழியே ஒவ்வொரு தந்தையும் தன் மகளின் உரிமைக்காக போராடுவதை ஊக்குவிக்க நினைக்கிறார் தேபஸ்மிதா. அவரைத் தேடி ஏராளமான கதைகள் வந்தாலும் அவை அத்தனையையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறார். “என்னைத் தேடி வரும் ஒவ்வொரு கதையுமே ஸ்பெஷல்தான். அவை அத்தனையுமே சொல்லப்பட வேண்டிய கதைகள். பிரபலமானவர்களின் கதைகளை பேச ஆயிரம் ஊடகங்கள் இருக்கின்றன. நான் சராசரி மக்களின் கதையை பேசவே விரும்புகிறேன்” என்கிறார் இவர்.
இதுவரை 36 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கதைகளை ஓவியங்களாக வரைந்திருக்கிறார் இவர். “ஒரே ஒரு நாட்டில் மட்டும் என் கவனத்தை செலுத்த விரும்பவில்லை. இந்த கதைகள் அனைத்துமே மொத்த உலகிற்கும் பொதுவானவைதான்” என அதற்கு காரணம் சொல்கிறார் தேபஸ்மிதா.
டாடியோடு ஒரு டூடுல்
இணையத்தின் வழியே குறிப்பிட்ட சிலரை மட்டுமே அடைய முடிகிறது என்பதை உணர்ந்தார் தேபஸ்மிதா. வெகுஜன மக்களை சென்றடைய அவர் யோசித்த ஐடியாதான் ‘டூடுல் வித் டாட்’(Doodle with dad). மக்களிடையே நேரடியாக சென்று கதைகளை கேட்க இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார் தேபஸ்மிதா.
தேபஸ்மிதா தலைமையில் நடத்தப்படும் இந்த டூடுல் வித் டாட் வகுப்புகளில் தந்தை தன் மகளோடு இணைந்து தங்கள் கதையை படங்களாக வரைய வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களான மேஜிக் பஸ்(Magic Bus), லெஹர்(Leher) போன்றவை இந்த வகுப்புகளை நடத்த உதவுகின்றன. கலையை தந்தை மகள் உறவு பலப்படுவதற்கான பாலமாய் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த வகுப்புகளின் நோக்கம்.
தொடக்கத்தில் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் தேபஸ்மிதாவிற்கு இருந்தது. “யாரென்றே தெரியாத என்னிடம் அவர்கள் கதையை எந்த நம்பிக்கையில் பகிர்ந்துகொள்வார்கள் என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் இந்த வகுப்புகள் பெரிய வெற்றியை பெற்றன. இதில் கலந்துகொண்ட தந்தைகள் தங்கள் மகள்களின் மேல் அளவில்லா அன்பையும் மரியாதையையும் வைத்திருந்தார்கள். தங்கள் மகள்கள் நன்றாக கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்பதுதான் அந்த தந்தைகளின் ஒட்டுமொத்த சிந்தனையாக இருந்தது” என புன்னகையோடு கூறுகிறார் தேபஸ்மிதா.
“தொடக்கத்தில் மகள்கள் மட்டுமே ஓவியம் வரைய ஆர்வமாய் இருந்தார்கள். தந்தைகளும் அவர்களோடு இணைந்து வரைய வேண்டும் என நான் சொன்னதும் அங்கே ஒரு தயக்கம் நிலவியது. பின்னர் அவர்களும் தத்தமது மகள்களோடு இணைந்து வரையத் தொடங்கிவிட்டார்கள்” எனவும் கூறுகிறார் தேபஸ்மிதா.
இத்தனை தந்தை-மகள் கதைகளை கேட்டவருக்கு மனதுக்கு பிடித்த கதை என ஒன்று இருக்க வேண்டுமே? அதைப் பற்றி கேட்டபோது முதலில், ‘எனக்கு எல்லா கதைகளுமே பிடித்தமானவைதான்’ என்றவர் வற்புறுத்தலுக்குப் பின் ஒரு கதையை பகிர்ந்துகொண்டார். “மேற்கு வங்காளத்தின் கிராமம் ஒன்றிலிருந்து ஒரு சிறுமி மும்பை நகருக்கு கடத்தப்பட்டாள். இதற்கு முன்னால் நிறைய ஆட்கடத்தல் சம்பவங்களை கண்ட அனுபவம் எனக்கு இருந்தது. அந்த சம்பவங்களில் எல்லாம் கடத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுவிட்டாலும் அவர்களை அவர்களது குடும்பம் ஏற்றுக்கொள்வதில்லை. சுற்றி இருப்பவர்களின் பேச்சுக்கு பயந்தும், இங்கே நிலவி வரும் சில மூட நம்பிக்கைகளின் காரணமாகவும் அவர்களை குடும்பங்கள் ஒதுக்கிவிடுகின்றன. ஆனால் அந்த மேற்கு வங்காள சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில், அவளின் தந்தை தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு காவல்துறையோடு இணைந்து ஊர் ஊராக சென்று தன் மகளைத் தேடினார். ஒருவழியாய் மும்பையில் அந்த சிறுமி மீட்கப்பட்ட பின்பும் அந்த தந்தை ஓயவில்லை. “என் மகளை கடத்தியவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரும் வரை நான் ஓயமாட்டேன். அப்படி செய்தால்தான் என் மகளின் முகத்தில் புன்னகையை பார்க்க முடியும்” என்றார் அந்த தந்தை. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை இது” என மெல்லிய குரலில் சொல்கிறார் தேபஸ்மிதா.
“இந்த ஓவியங்களை வரையும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த மகள்களின் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொள்வதாகவே உணர்கிறேன். இதற்காகவே என் வாழ்நாள் முழுவதும் இந்த தந்தை-மகள் கதைகளை ஓவிய ங்களாக வரைந்துகொண்டே இருப்பேன்” என உறுதியாக கூறி முடிக்கிறார் தேபஸ்மிதா.
இவரிடம் சொல்ல உங்களிடமும் கதை இருக்கிறதா? இங்கே இருக்கும் அவரின் பேஸ்புக் பக்கத்திற்குச் சென்று பகிர்ந்துகொள்ளுங்கள். மகள்களுக்கு ஹீரோவாய் விளங்கும் ஒவ்வொரு தந்தைக்கும் எங்களின் வாழ்த்துகள்.
ஃபேஸ்புக் தொடர்பு: My Father Illustrations